Enable Javscript for better performance
ஒலிம்பிக்ஸ்!- Dinamani

சுடச்சுட

  
  2

  கருவூலம்

  வரலாறு!
   
   உலகில் எந்த விளையாட்டுப் போட்டிக்கும் இல்லாத பாரம்பரியச் சிறப்பு ஒலிம்பிக்கிற்கு மட்டுமே உண்டு! ஆம்! உலக வரலாற்றில் பல ஆயிரம் ஆண்டு நீண்ட பாரம்பரியம் இந்த விளையாட்டிற்கு உண்டு!
   ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஒரு குட்டி நாடு கிரேக்கம் என்கிற கிரீஸ்! உலகிற்கு பல அரிய தத்துவங்களைத் தந்த நாடு! ஒரு காலத்தில் கிரேக்கப் பேரரசர்கள் கொடி கட்டி ஆண்ட இந்த மண்ணில்தான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தோன்றியது!
   பண்டைக்கால கிரேக்கர்கள் பல மதச் சடங்குகளைக் கொண்டாடுவார்கள்! அந்த விழாக்களில் தடகளப் போட்டிகளையும் இணைத்தே கொண்டாடுவது கிரேக்கர்களின் வழக்கம்!
   கிரேக்க மக்கள் அப்போது நான்கு முக்கிய விழாக்களைக் கொண்டாடினர்! அவை, "இஸ்தமியன்'...."நெமிஸஸ்'.....,"பைதின்' மற்றும் "ஒலிம்பிக்ஸ்'! இதில் மற்ற மூன்றைவிட ஒலிம்பிக் விழாவிற்குச் சிறப்பு அதிகம்! காரணம், கிரேக்கக் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாகக் கருதப்படும் "ஜீயெஸ்' புகழ்பரப்பும் விழா இது! எனவே கிரேக்கர்களின் வாழ்வில் முக்கியமான இடம் பிடித்து விட்டது ஒலிம்பிக்!
   கிரேக்க நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒலிம்பியாவில் இந்த விழா நடக்கும்! உலகின் முதல் ஒலிம்பிக் போட்டி ஒருநாள் போட்டியாக கி.மு.776ஆம் ஆண்டில் இங்கு நடத்தப்பட்டது! பின்னர், பல நாட்களாக வளர்ச்சி பெற்றதுடன் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகவும் உருமாறியது.
   
  ஆண்கள் மட்டும்தான்!
   நீண்ட தூர ஓட்டப்பந்தயம்..., ஈட்டி எறிதல்...,மல்யுத்தம்...,எடை மிகுந்த கல்லைத் தூக்கி எறிதல், போன்ற அன்றாட கேளிக்கை விளையாட்டுகளே இதில் பிரதான இடம் பிடித்தன!
   இந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கு ஆலிவ் இலை கிரீடம் சூட்டப்படுவதுடன் "வெற்றி வீரன்' என்ற பட்டமும் கிட்டியது. இந்தப் போட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும்! அதுமட்டுமல்ல! போட்டியைக் காணக்கூட பெண்களுக்கு அனுமதி கிடையாது!
   
  விளையாட்டால் விளைந்த போர் நிறுத்தம்!
   மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் போர் இல்லாமல் இருக்குமா? அதனால் போட்டி நடைபெறும் காலங்களில் போர் நிறுத்த உடன்படிக்கை அமலில் இருந்தது. காரணம். கிரேக்க காலனிகளும், சில நாடுகளும், ரோமாபுரியும் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டன. அனைத்து நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் போட்டி வேளையில் போர் நிறுத்த அவசியமும் ஏற்பட்டது!
   
  ஒலிம்பிக் முடக்கம்!
   கிரேக்கர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஒலிம்பிக் போட்டி ரோமானியர்களின் படையெடுப்பால் தனது சிறப்பை இழந்தது. கி.பி.393ஆம் ஆண்டில் ரோமானியப் போரரசர் முதலாம் தியோடேசியஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார்! அதனால் 16ஆம் நூற்றாண்டு வரை ஒலிம்பிக் போட்டிகள் முடங்கிப் போனது.
   ஒலிம்பிக் போட்டிகள் இனி அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைத்திருந்த நிலையில் உருக்குலைந்து கிடந்த ஒலிம்பியா பகுதியில் ஒரு அகழ்வாராய்ச்சி கி.பி. 1875ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
   உலக வரலாற்றுக்கு அது ஒரு திருப்புமுனை! அந்த அகழ்வாராய்ச்சியில்தான் ஒலிம்பிக் அரங்கங்கள் மூலம் புராதன ஒலிம்பிக் போட்டிகள் எப்படி கிரேக்கர்களால் அற்புதமாக நடத்தப்பட்டன என்பது உலகிற்கே மீண்டும் தெரிய வந்தது.
   
  மீண்டும் ஒலிம்பிக்!
   பிரான்ஸ் நாட்டில் 1863ஆம் ஆண்டில் பிறந்த மிகவும் செல்வாக்கு நிறைந்த "பாரோன் பியரிடி கோபர்டின்' எனும் விளையாட்டுப் பிரியருக்கு இந்த ஒலிம்பிக் அகழ்வாராய்ச்சி விஷயம் தெரிந்தது!
   ""ஒலிம்பிக் போட்டிகளைப் புதிப்பித்து ஏன் மீண்டும் நடத்தக்கூடாது'' என்ற நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதை அவர் மனதில் தூவப்பட்டது. அதன் விளைவாக 1894ஆம் ஆண்டு பாரீஸில் அவர் ஏற்பாட்டின் பேரில் பல நாட்டு விளையாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது!
   கோபர்டின் ஒலிம்பிக் போட்டிகள் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரிலேயே மீண்டும் நவீன ஒலிம்பிக்ஸின் முதல் போட்டியை நடத்துவது என்று தீர்மானித்தார். இதனால் "ஒலிம்பிக்கின் தந்தை' என்று "பாரோன் பியரி டி கோபர்டின்' போற்றப்பட்டார்!
   
  முதல் போட்டி! மீண்டும் கிரீஸில்!

   அதன்படி முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் நடந்தது. 13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர்கள் கலந்து கொண்டனர். ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் பந்தயம், வாள் சண்டை, பளு தூக்குதல், தடகளம், நீச்சல், மராத்தான், துப்பாக்கி சுடுதல், ஆகிய பந்தயங்கள் நடந்தன.
   ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு ஒரு ஸ்பெஷல் இடமுண்டு. காரணம் பிரான்சின் "பியர் டி கோபர்டின்' ஒரு துப்பாக்கி சுடும் சாம்பியன்! அதனால் இதில் பல பிரிவுகளில் போட்டிகளை ஒலிம்பிக்கில் நடத்தினார்.
   
  பெண்களுக்கு வாய்ப்பு!
   அதன் பிறகு ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நடந்து வருகிறது. 1900ஆம் ஆண்டில் பாரீஸில் நடந்த 2ஆவது ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக பெண்களுக்கான போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
   
  முதல் உலகப்போரினாலும், இரண்டாம் உலகப் போரினாலும்....நிறுத்தம்!
   1916இல் பெர்லினில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக்ஸ் முதலாம் உலகப்போரால் நின்று விட்டது. 1940ஆம் ஆண்டில் ஜப்பானிலும் மற்றும் 1944ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் நடைபெற வேண்டிய ஒலிம்பிக்ஸ் இரண்டாம் உலகப்போரினால் நிறுத்தப்பட்டது.
   
  பிரபலப்படுத்த ஒரு யுக்தி!

   ஆரம்பத்தில் ஒலிம்பிக் போட்டிகள் சர்வதேச கண்காட்சி நடந்த சமயத்திலேயே நடத்தப்பட்டன. காரணம் ஒலிம்பிக் போட்டிகளை பிரபலப்படுத்தவே! 1900இல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே 2ஆவது ஒலிம்பிக் நடந்தது. இதில் 24 நாடுகளிலிருந்து 999 வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். போட்டிகள் 5 மாதங்கள் நடந்தன! 95 போட்டிகள் நடத்தப்பட்டன. 3ஆவது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1904ஆம் ஆண்டு நடந்தது. இதுவும் சர்வதேச கண்காட்சியின்போதே நடந்தது.
   
  பதக்கங்கள்!
   1904ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில்தான் முதன்
   முறையாக வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
   
  புகழ் மிக்க ஒலிம்பிக் ஜோதி!
   இந்த ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் சடங்கு வெகு சுவாரசியமானது! கிரேக்கக் கடவுள் "ஜீயஸ்' இடமிருந்து தீயைக் கவர்ந்த "ப்ரோமதோஸ்' என்ற தேவதையின் நினைவாக இந்த ஜோதி புராதன ஒலிம்பிக்கில் ஏற்றப்பட்டது! இந்த ஜோதி ஏற்றும் வைபவம் ஒவ்வொரு ஒலிம்பிக்கின்போதும் "கிரீஸ்' தேசத்திலேயே நடைபெறுகிறது! அதுவும் அந்தப் புராதன ஒலிம்பிக் போட்டி நடந்த இடத்திற்கு அருகிலிலுள்ள "ஹீரா' கோயிலின் முன்னாலேயே!
   சிறப்பு மிக்க இந்த ஒலிம்பிக் ஜோதி முழுக்க முழுக்க சூரிய ஒளியினாலேயே பற்ற வைக்கப்படுகிறது. குழைவுடன் கூடிய சற்றே அகன்ற கூம்பு வடிவத்தில் அமைந்துள்ள பாத்திரத்தை சூரிய வெளிச்சத்தில் வைத்து, சூரிய ஒளிக்கதிர்களை அப்பாத்திரத்தில் குவித்து அந்த சூட்டிலேயே ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவர்! சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களும் அப்போது பறக்க விடப்படும்!
   ஏற்றப்பட்ட ஜோதியை ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒரு ரிலே ரேஸ் போல் ஒரு பந்தத்திலிருந்து மற்றொரு பந்தம் என்று ஏற்றிக் கொண்டு போட்டி நடக்கும் நாடுவரை செல்வர்! அந்த நாடு ஆயிரக்கணக்கான மைல் தூரம் இருந்தாலும் சரி! அதுவரை ஜோதி பயணம் செய்யும்! அந்த ஜோதி ஒலிம்பிக் மைதானத்தில் பிரதான மேடையில் உள்ள ஒளி மேடையில் ஏற்றப்படும்! இக்காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்!
   பழமைக்கும், புதுமைக்கும் ஏற்றப்படும் நினைவு ஒளி!
   அதுமட்டுமல்ல! போட்டிகள் முடியும் வரை இந்த ஒளி அணையாமல் பாதுகாக்கப்படும்!
   
  மேலும் சில தகவல்கள்!
   பல்வேறு நாட்டு வீரர்கள் கொடியுடன் அணிவகுத்து ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் வலம் வந்தது 1908ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில்தான்! உலகம் முழுக்க ஒலிம்பிக் அறியப்பட்டது இந்தப் போட்டியில்தான்! 22 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் 110 போட்டிகளில் பங்கேற்றனர்.
   முதன் முறையாக 5 கண்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டது 1912இல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்ஸில் நடந்த ஒலிம்பிக்கில்தான்! எலக்ரானிக் முறையில் போட்டி முடிவுகள் அறியப்பட்டதும் இதிலிருந்துதான்!
   1920 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் ஆன்ட்வெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக்கில்தான் நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்றழைக்கப்படும் பாரன் டி கோர்டினின் முயற்சியால் 5 கண்டங்களைக் குறிக்கும் 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடி அறிமுகமானது.
   1948இல் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகமாயின.
   
   
  ரியோ ஒலிம்பிக் 2016!

   ஆம்! இந்த வருடம்தான்! 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருக்கின்றன! எங்கே?
   பிரேசில் நாட்டில்! ரியோ டி ஜெனிரோ நகரில்! இதற்கு "ரியோ ஒலிம்பிக் 2016' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிகள் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 57 வகையான நிகழ்வுகளில் 103 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
   வில்வித்தை, ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை, கனோ ஒயிட் வாட்டர் நீர்ச்சறுக்கு, கனோ ஸ்பிரிண்ட், விளையாட்டு BMX சைக்கிள் ஓட்டுதல், சைக்கிள் ஓட்டுதல் மலை பைக், சைக்கிள் ஓட்டுதல் சாலை, சைக்கிளிங் டிராக், டைவிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, கால்ப், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, மராத்தான் நீச்சல், மாடர்ன் பென்டத்தலான், ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், படகுப்போட்டி, ரக்பி செவென்ஸ், பாய்மரம், சுடுதல், நீச்சல், ஒத்திசைக்கப்பட்ட நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிராம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ், டிரையத்லான், கைப்பந்து, தண்ணீர் பந்தாட்டம், பளு தூக்குதல், மல்யுத்தம் முதலான 37 பிரிவுகளில் 306 வகையான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
   ரியோ நகரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கோலாகலமான விழாக்களுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும்; அப்போது பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனம் நடைபெறும். இந்தியா இந்த ஒலிம்பிக்கில் எத்தனைப் பதக்கங்கள் வெல்லப் போகின்றது? என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உங்களோடு சேர்ந்து நாங்களும் காத்திருக்கிறோம். ஒலிம்பிக் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிய:
   www.rio2016.org.
   தொகுப்பு: கோவீ. இராஜேந்திரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai