சுடச்சுட

    
    7

    "தாமரை'
     தாமரைதான் பூக்களிலே
     பெரியதென்பார்;-தம்பி
     தாமரைப்பூ ஊர்க்குளங்கள்
     அழகாய்த் தோன்றும்!
     
     "தாமரை'யில் "தா' என்னும்
     எழுத்தை நீக்கு;-அங்கே
     "மரை' என்ற மானின் பெயர்
     துள்ளி ஓடும்!
     
     'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்?
     "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும்-அது
     'கொடு' என்றே
     உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்!
     
     தாமரையில் நடு "ம'வை
     நீக்கிப் பார்த்தால்-அழுவோர்
     கண்களிலே கண்ணீர்தான்
     "தாரை' வார்க்கும்!
     
     
    "கவிதை'
    "கவிதை' என்றால்
     பாட்டென்பார்! செய்யுளென்பார்!
     "கவி'யாலே ஆனதுதான்
     தமிழ்மொழி என்பார்!
     
     "கவிதை' என்னும் சொல்லை எடு;
     "தை'யை நீக்கு;-தம்பி
     "கவி' மழையில் நீ நனைவாய்;
     கவிஞன் ஆவாய்!
     
     முதல் எழுத்து "க'வை நீ நீக்கிப் பார்த்தால்
     முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்;-அங்கே
     விதவிதமாய்
     சொல் விதைகள் குவியல் ஆகும்!
     
     "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால்
     ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்!
     அந்தத் தை பிறந்தால்
     அனைவருக்கும் வழி பிறக்கும்!
     
     "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ
     விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்!
     விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே
     விரித்த பாயில் நாமும் கண்ணயர்வோம்!
     
     
    குதிரை
    "குதிரை' என்றால்
     விலங்கென்றே அறிவாய்;- தம்பி
     குதிரையெல்லாம்
     "கொள்' என்றால் வாய் திறக்கும்!
     
     "குதிரை'யிலே "ரை'யை நீ
     எடுத்தால் போதும்;-அங்கே
     "குதி!' என்றே குதித்தெழும்பும்
     விளையாட்டாகும்!
     
     குதிரையிலே முதலெழுத்தை
     மறைப்பாயானால்;-உன்முன்
     "திரை'யொன்று விழுந்தங்கே
     கண்ணை மறைக்கும்!
     
     நடு எழுத்து "தி' தன்னை
     எடுத்து விட்டால்;-தெரு
     நாய் குரைத்துத் தெருவில் வரும்,
     வாலை ஆட்டும்!
     
     
    மதுரை
     
    மதுரை எனில் கோயில் நகர்
     என்பதை அறிவோம்!-அது
     நான்மாடக் கூடல் நகர்
     என்பதும் அறிவோம்!
     
     வைகை நதி மற்றும்
     தமிழ்ச் சங்கத்தாலே
     மேம்பட்ட புகழள்ளிக்
     கொண்ட ஊர்தான்!
     
     "மதுரை'யிலே முதலெழுத்தை
     நீக்கிப் பார்த்தால்-வெள்ளை
     "துரை' வந்து நம் எதிரே
     வணக்கம் சொல்வார்!
     
     "ரை' என்ற சொல்லிறுதி
     எடுத்தால் போதும்-உடனே
     "மது' என்ற கேடு தரும்
     திரவம் குறிக்கும்!
     
     சொல் நடுவில் "து' எழுத்தை
     மறைப்பாயானால்-மனதில்
     "ம' என்ற தாவும் மான்
     குறுக்கே ஓடும்!
     
    -பொன்னியின் செல்வன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai