Enable Javscript for better performance
இளமையில் வெல்! கே.விலாசினி!- Dinamani

சுடச்சுட

  
  sm17

  2015-ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று பாரதப் பிரதமர் தமது அலுவலகத்தில் தலை சிறந்த ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகள் சிலரையும் சந்தித்தார்.

  தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் சாதனைகளை அறிந்த பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் அந்த மாணவியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி தமது விருந்தினராக அழைத்திருந்தார். அப்படி அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் கே.விலாசினி ஆவார்.

  இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரீஷியன் ஆவார். தாயார் சேதுராமலிங்கா அகில இந்திய வானொலி திருநெல்வேலி பிரிவில் அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

  கே.விலாசினி ஐந்து உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். அறிவுக் கூர்மையை அளக்கும் தேர்வை IQ TEST  என்று அழைப்பார்கள். அவரது அறிவுக் கூர்மையின் அளவு 225 புள்ளிகள் ஆகும். மேலும் சர்வதேச ஆங்கில மொழிப் புலமைத் தேர்வில் (IELTS-INTERNARIONAL ENGLISH LANGUAGE TESTING SYSTEM) மிகச் சிறிய வயதிலேயே தேர்ச்சி பெற்ற பெருமை உடையவர் ஆவார்.

  குழந்தைப் பருவத்தில் விலாசினியால் சரியாகப் பேச முடியவில்லை. அவரது அன்னை நிறையப் பயிற்சிகள் அளித்ததன் மூலம் இயல்பாகப் பேசும் திறமை பெற்றார்! 11வயதில் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றார்! இதற்கு முன் இத்தனை சிறிய வயதில் இதில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. ஆகவே இது ஒரு உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

  மிகச் சிறு வயதிலேயே, கூகுள் இந்தியா நிறுவனம் இவரை தலைமை உரையாற்ற அழைத்தது.

  இவர் இது போன்ற பதினோரு சர்வதேசக் கருத்தரங்குகளில் தலைமை உரையாற்றி இருக்கிறார். இதுவும் ஒரு உலக சாதனையாகும்!

   

  CCNA - CISCO CERTIFIED NETWORK ASSOCIATE ----- உலக சாதனை

  EXIN CLOUD COMPUTING ---------------------- உலக சாதனை

  CCSA - CERTIFICATE IN CONTROL SELF ASSESSMENT- உலக சாதனை

   

  என ஐம்பெரும் பிரிவுகளில் உலக சாதனை புரிந்துள்ளார்!

  இவரது பேச்சுத் திறனை வளர்க்க குழந்தைப் பருவத்தில் இவரது தாயார் திருக்குறளை சத்தமாகப் படித்துக் காட்டுவாராம். இதனால் 5 வயதிலேயே பெரும்பாலான திருக்குறள்களை ஒப்பிக்கும் திறன் பெற்றார்!

  விலாசினியின் அறிவுக் கூர்மை 225 புள்ளிகள் ஆகும்.

  கின்னஸ் உலக சாதனையாளர் "கிம் யுங் யாங்' என்பவரது அறிவுக் கூர்மை, 210 புள்ளிகள் ஆகும்!

  இஇசஅ தேர்வில் இதற்கு முன் தேர்ச்சி பெற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த "இர்தாஸா ஹைதர்' என்ற 12 வயதுச் சிறுவன் ஆவார்! இது ஒரு உலக சாதனை ஆகும். அதை முறியடிக்கும் விதத்தில் விலாசினி 11வயதில் அத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார்!

   

  இவர் பெற்ற இதர விருதுகள்!

   

  அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் "இன்ஸ்பைர்' (INSPIRE) விருது.

  ஹெச்.சி.எல் நிறுவனத்தின் "ப்ரைட் ஆஃப் இந்தியா' (PRIDE OF INDIA) விருது.

  இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் "இளம் சாதனையாளர் விருது.

   

  சர்வதேசப் பட்டயங்கள்

   

  MCP - MICROSOFT CERTIFIED PROFESSIONAL  - 87%

  CCNA - CISCO CERTIFIED NETWORK ASSOCIATE - 90%

   

  இவரது தனித்திறமைகள்!

   

  1. மிக இளம் வயதிலேயே கூகுள் நிறுவனத்தில் உரையாற்றியவர்.

  2. TED - (TECHNOLOGY ENTERTAINMENT,DESIGN)  நிறுவனத்தில் உரையாற்றியவர்.

  3. 10 வயதில் இருந்து 12க்கும் மேற்பட்ட சர்வதேசக் கருத்தரங்குகளில் உரையாற்றியவர்.

  4. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

  5. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் அவர்களால் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான கணிப்பொறி வல்லுநர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 12 ஆகும்.

  6. கணிப்பொறிப் பிரிவில் இவர் பெற்றுள்ள பரந்து விரிந்த அறிவுத் திறனால் ஏறக்குறைய இந்தியாவில் உள்ள 25 பொறியியல் கல்லூரிகள் இவரை, தலைமை உரையாற்ற அழைத்த வண்ணம் இருக்கின்றன.

  7. "டைம்ஸ் நெü" ஆங்கிலத் தொலைக்காட்சி சானல் இவருக்கு "அதிசயமான இந்தியர்' (AMAZING INDIAN) என்ற பட்டத்தை வழங்கி கெüரவித்துள்ளது.

  8. ஆஸ்திரேலியாவில் உள்ள "எஸ்.பி.எஸ்' தொலைக்காட்சி நிறுவனம் "வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி கெüரவித்துள்ளது!

  இவர் தற்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறிப் பிரிவில் பி.டெக் கல்வி பயின்று வருகிறார். ஆனால் பிற கல்லூரிகளில் எம்.டெக் பயிலும் மாணவர்களுக்கு CLOUD COMPUTING' பிரிவில் வகுப்புகள், மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.

  இந்த இளம் மேதை நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai