Enable Javscript for better performance
இந்திய வரலாற்றின் இணையில்லா வீரர் திப்பு சுல்தான்- Dinamani

சுடச்சுட

  
  17sm19

  நாற்பது ஆண்டுகள் ஆடாய் வாழ்வதைவிட நான்கு நாட்கள் புலியாய் வாழ்ந்து மடிவேன்''. இந்தக் கூற்றை கம்பீரமாய் அறைகூவல் விடுத்தது வேறு யாருமல்ல. "மைசூர்ப் புலி' என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தான்தான். வெள்ளையர்களை எதிர்த்தே அவர் இந்த அறைகூவலை விடுத்தார்.

  நமது இந்தியத் திருநாட்டை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அவர்களுக்கு சிம்ம சொப்பனாமாக இருந்தவர் இந்த மாமன்னர். இவரது தந்தை ஹைதர் அலியோ சென்னையை முற்றுகையிடத் துணிந்து வெள்ளையர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கினார். அவருடைய மகனான திப்பு சுல்தானோ ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்தே வெள்ளையர்களைத் துரத்த முனைந்தார். அதற்காக பிரான்சின் மாபெரும் வீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.

  முதல் மைசூர் யுத்தத்தில் தந்தையும், தனயனும் சேர்ந்து வெள்ளையர்களை மண் கவ்வ வைத்தனர். இதனால் கலங்கிப் போன கிழக்கிந்தியக் கம்பெனி, ஹைதர் மற்றும் திப்புவுடன் கூட்டணி வைத்திருந்த மராத்தியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் சூழ்ச்சியால் பிரித்தனர். இரண்டாம் மைசூர் யுத்தத்தின் இடையில் தந்தை ஹைதர் நோயால் இறந்தாலும், திறம்படப் போரை நடத்தி வெள்ளையர்களை விரட்டினார் திப்பு. வேறு வழியின்றி மங்களூர் உடன்படிக்கையை மேற்கொண்டது கிழக்கிந்தியக் கம்பெனி. மன்னராகப் பதவியேற்றதும் நாட்டின் மக்களை வருத்தாமல் வருவாயைப் பெருக்கினார் திப்பு.

  உயர் ரகப் பயிர்கள், கடன் வசதி, அதிகரிக்கப்பட்ட நீர்ப்பாசன வசதி, கலப்பின விதைகள் என்று விவசாயத்தில் புதுமைகளைப் புகுத்தினார் திப்பு. தொழிற்துறையிலும் பிரெஞ்சு நாட்டவரின் உதவியுடன் நவீன உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தினார். சொந்தமாகக் கப்பல் கட்டும் தளம் (ஈஞஇஓவஅதஈ) நிறுவினார்.

  இந்து-இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் உறவைப் பேணும் வகையில் ஆட்சிமுறை சிறந்து விளங்கியது. உதாரணம் } இந்துக் கோயில்களுக்கு இம்மன்னர் அளித்த மானியங்களும், நிவந்தங்களும் இஸ்லாமிய மத நிறுவனங்களுக்கு அளித்ததைவிட பன்மடங்கு அதிகம்.

  நிர்வாகத்திலும் புதுமையைப் புகுத்தினார் திப்பு சுல்தான். இப்போதுள்ள பொதுவிநியோகத் திட்டத்தை அன்றே செயல்படுத்திக் காட்டியவர் இவர். விவசாயிகளிடமிருந்து உரிய விலையில் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டது. திப்புவின் ஆட்சியில் கிராமங்களும், நகரங்களும் சமமான நிலையில் முன்னேற்றத்தை அடைந்தன என்று கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளின் குறிப்புகளே வியப்புடன் குறிப்பிடுகின்றன.

  இவ்வளவு திறமையுடன் ஆட்சி செலுத்தி வந்த திப்புவை ஒழித்துக்கட்டாவிட்டால் தங்களின் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு தடைப்படும் என்று நினைத்த கிழக்கிந்தியக் கம்பெனி, காரன்வாலிûஸ இந்தியாவிற்கு அழைத்து வந்தது. கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற காரன்வாலிஸ் முதலில் திப்புவுக்கு உதவியாக இருந்த ஆதரவு சக்திகளை சூழ்ச்சியால் பிரித்தார். பின்னர் ஆரம்பித்தது, மூன்றாம் மைசூர் யுத்தம். யுத்தத்தின் போக்கு இருதரப்பினருக்கும் சாதகமாக இல்லையென்றாலும், திப்பு சற்றே நிலை தாழ வேண்டியிருந்தது. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி போர் நஷ்ட ஈடுக்காகத் தனது பிள்ளைகளை பணையக்கைதிகளாக வெள்ளையர்களிடம் அனுப்பி வைத்தார் திப்பு. இந்த நிகழ்வின் நினைவாக செதுக்கப்பட்ட பளிங்குச் சிலை ஒன்று, இன்றும் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. காரன்வாலிஸின் கால்களில் திப்புவின் பிள்ளைகள் சரணடைவது போன்று செதுக்கப்பட்ட அந்தச் சிற்பம், உடன் பிறந்தே கொல்லும் வியாதியான துரோகத்தின் அடையாளம்.

  நிலை தளர்ந்தாலும் சற்றும் அயராது நிர்வாக சீர்திருத்தங்களையும், வெள்ளையர்கள் எதிர்ப்பையும் தொடர்ந்தார் திப்பு. காரன்வாலிஸýக்குப் பின் பதவியேற்ற வெல்லெஸ்லி, திப்புவுக்கு ஆதரவான அனைத்து காரணிகளையும் முற்றிலும் முடக்கிவிட்டு, நான்காம் மைசூர் யுத்தத்தை ஆரம்பித்தார். உடன் வெள்ளையர்கள் ஆதிக்கத்தை ஏற்றால் நன்மைகள் ஏராளம் என்றும் பேச்சு நடத்தினார். அதற்கு திப்பு அளித்த பதில்தான் இந்தக் கட்டுரையின் முதல் வரிகள். கடுமையான நான்காம் மைசூர் யுத்தத்தின் இறுதி நாள் 1799-ம் ஆண்டு மே 4-ம் நாள். ஆம்..! அன்றைய நாள் இந்திய சரித்திரத்தில் ஓர் கருப்பு நாள். வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்குப் பெரும் தடையாக இருந்த திப்பு வீழ்ந்த நாள்.

  அவரிடம் வருவாய்த்துறை அமைச்சராகப் பணி

  புரிந்தவர், ஸ்ரீரங்கப்பட்டிணக் கோட்டையின் நீர்வாயிலைத் (ரஅபஉத எஅபஉ) திறந்துவிட, உள்ளே புகுந்த வெள்ளையர் படை வெறித்தனமாக வேட்டையைத் துவங்கியது. பாதி உணவில் எழுந்து வந்த திப்பு, தீரமுடன் எதிர்த்து நின்றார். நெஞ்சிலும், தோளிலும் பலமான வெட்டுக் காயங்கள். அப்படியும் உறுதியுடன் எதிர்த்து நின்றது அந்த மாமலை. இறுதியில் வலது காதின் கீழ் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார் அந்த மாவீரர்.

  திப்புவின் வீழ்ச்சி அவரது சாம்ராஜ்யத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியாவையும் வெள்ளையர்களின் ஆளுகைக்குக் கீழ் இட்டுச் சென்றுவிட்டது எனலாம். சிலர் மறைந்தாலும் அவர்களது புகழ் என்றும் மறையாது. பின்னாளில் கத்தியின்றி, ரத்தமின்றி நமது தேசத்துக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி, திப்புவைப் பற்றிக் குறிப்பிடும்போது, மதுவிலும், மங்கையர்களிடமும் மூழ்காத நல்ல மன்னர் என்று குறிப்பிட்டார்.

  நமது நேசத்துக்குரிய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அமெரிக்காவின் வாலோபஸ் விண்வெளி நிலையம் சென்றபோது, அங்கு இருந்த சித்திரத்தில் யுத்தம் ஒன்றில் ஆசியர்கள் ராக்கெட் தாக்குதலை மேற்கொள்ளும் படம் வரையப்பட்டிருந்ததாம். அருகில் சென்று பார்த்த கலாம் வியந்திருக்கிறார். காரணம் மைசூர் யுத்தத்தின்போது திப்புவின் படை வெள்ளையர்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிடும் சித்திரம் அது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னமேயே ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய மன்னர் திப்பு சுல்தான். அதுதான் திப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai