சர் சி.வி.ராமன்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ஆம் நாளன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சர் சி.வி.ராமன்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ஆம் நாளன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று நமது நாட்டில் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கண்டுபிடிப்பு முயற்சிகளுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவியல் தினமானது "மரபணு மாற்ற பயிர்களும் உணவுப் பாதுகாப்பும்' குறித்த கொள்கையை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்பட்டது.
 பிப்ரவரி 28 அன்று ஏன் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது? "இராமன் விளைவு' கண்டுபிடிக்கப்பட்ட தினம்தான் அது. "ஒளி ஒரு பொருளின் வழியே செல்லும்போது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றமே' இராமன் விளைவு ஆகும். இக் கண்டுபிடிப்பு பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
 இராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் சந்திரசேகர ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.
 இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1904-ஆம் ஆண்டு கலை இளநிலைப் பட்டம் பெற்றார். 1907-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 முதன்முதலில் இந்திய அரசு நிதித் துறையில் துறை கணக்காயராக பணியில் சேர்ந்தார். பணியில் இருக்கும்போதே கொல்கத்தா அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வந்தார்.
 1917-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக சேர்ந்து பணி
 யாற்றினார்.
 பின்னர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்து நமது நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். பின்னர் இராமன் ஆய்வுக்கழகத்தை நிறுவியதுடன் அதன் இயக்கு
 நராகவும் பணியாற்றினார். 1926-ஆம் ஆண்டு இந்திய இயற்பியல் ஆய்விதழ், அறிவியல் இதழ் போன்ற
 வற்றைத் தொடங்கி சேவை செய்தார்.
 இவருக்கு ஆங்கிலேய அரசு, 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கியது. மேலும் 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நோபல் பரிசு, 1954-இல் வழங்கப்பட்ட பாரதரத்னா விருது, 1957-இல் வழங்கப்பட்ட லெனின் அமைதிப் பரிசு போன்றவை சர்.சி.வி.இராமனைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இது அவருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்க்கும்.
 படிக்கும் மாணவர்கள் தெளிவான அறிவியல் சிந்தனையோடு புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க சர்.சி.வி.இராமனின் உழைப்பை நினைவில் கொள்ள வேண்டும்.
 -கா.இரவிச்சந்திரன்,
 முத்துப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com