தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்கள்

விக்கிப்பீடியா 286 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் இணையக் கலைக்களஞ்சியம். இதில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்கள்

விக்கிப்பீடியா 286 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் இணையக் கலைக்களஞ்சியம். இதில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் இடம் பெற்றிருக்கிறது. இந்தத் தமிழ் விக்கிப்பீடியாவில் பள்ளிக் கூடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் பங்களிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா எப்படி அறிமுகமானது, இவர்களுக்கு இதில் பங்களிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
 இலங்கைச் செய்தித்தாள்களில் வந்த விக்கிப்பீடியா குறித்த செய்திகளைப் படித்துத் தானும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன், தனது 14 வயதில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கியவர் மதனாஹரன். இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினார்.
 கடந்த இரண்டு ஆண்டுகளில் 204 கட்டுரைகளைத் தொடங்கியிருக்கும் இவர், தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் பிற கட்டுரைகளில் கூடுதல் தகவல்களைச் சேர்த்தல், தேவையற்ற தகவல்களை நீக்கல், எழுத்துப்பிழை, இலக்கணப் பிழைகளைச் சரி செய்தல் என்று கட்டுரைக்கான பக்கங்களில் 5085 தொகுப்புகளும், கட்டுரைக்கான உரையாடல், கருத்துப் பகிர்வுகள் மற்றும் பிற பக்கங்களில் 3186 தொகுப்புகளும் என்று மொத்தம் 8271 தொகுப்புகளைச் செய்திருக்கிறார். கட்டுரைப் பக்கங்களிலான தொகுப்புகளின் எண்ணிக்கை அடிப்படையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்யும் பயனர்களின் தர வரிசையில் 25 வது இடத்திலிருக்கும் இவர் தகவல் தொழில்நுட்பம், கணிதம், சதுரங்கம், துடுப்பாட்டம் மற்றும் மென்பொருள்கள் சார்ந்த துறைகளிலான கட்டுரைகளில் அதிக ஆர்வம் காட்டிச் செயல்பட்டு வருகிறார்.
 பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பங்களிக்கத் தொடங்கிய இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனர் நிர்வாகி நிலைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான வாக்கெடுப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவராகத் தேர்வு செய்யப் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் தமிழ் விக்கிப்பீடியா மட்டுமின்றி, தமிழ் விக்சனரி, மொழிபெயர்ப்பு விக்கி போன்ற பிற விக்கித் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து வருகிறார். தமிழ் மொழியிலான விக்கிமீடியாத் திட்டங்களில் பன்முகப் பங்களிப்பு செய்வோர்களில் மிகவும் இளையவர் இவர்தான் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு.
 இதே போல், இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் இந்துக் கல்லூரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் நி. ஆதவன் என்கிற 13 வயது மாணவன் தனது பாடங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களைத் தேடிக் கூகுள் தேடுதலுக்குச் சென்ற பொழுது, அவனுக்குத் தேவையான பல தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைத்திருக்கின்றன. அப்போது, தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருந்த விக்கிப்பீடியா யாவராலும் தொகுக்கப்படக்கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்கிற வாக்கியம் அவனைக்
 கவர, தானும் விக்கிப்பீடியாவில் எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினான். அவன் தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படித் தொகுப்பது, எப்படிக் கட்டுரைகளைத் தொடங்குவது என்று முயற்சித்தான். பயனராகப் பதிவு செய்து, தன் பங்களிப்பைத் தொடங்கியவனுக்குத் தொடக்கத்தில், சில தவறுகள் நடந்த போதும், பங்களிக்கும் பிற பயனர்கள் ஆலோசனைகளுடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பல பங்களிப்புகளைச் செய்தான். ஐந்து மாதங்களுக்குள்ளாகவே, தமிழ் விக்கிப்பீடியாவில் 56 கட்டுரைகளைத் தொடங்கியதுடன், 2716 தொகுப்புகள் என்று இவனது பங்களிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
 அண்ணன் ஆதவன் பங்களிப்பைப் பார்த்த அவனது 11 வயது தம்பி மாதவன் தானும், அண்ணனைப் போல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் தமிழ் விக்கிப்பீடியா களத்தில் இறங்கி மூன்று கட்டுரைகளைத் தொடங்கியதுடன் 107 தொகுப்புகளையும் செய்து இருக்கிறான்.
 அண்ணனைப் பார்த்து ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பு செய்திட வந்த தம்பியைப் போல், தாயின் பங்களிப்பைக் கண்டு தானும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வம் கொண்டு பங்களிக்கத் தொடங்கியவர் 15 வயதான அபிராமி.
 தமிழ் விக்கிப்பீடியாவில் பல பங்களிப்புகளைச் செய்து பயனர் நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்து வரும் சேலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான பார்வதியின் மகளான அபிராமி, ""தமிழ் விக்கிப்பீடியாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான பாடம் தொடர்பான தகவல்கள், பேச்சு, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் பங்கேற்பதற்குத் தேவையான தகவல்கள் என்று பல அரிய தகவல்கள் இருக்கின்றன. எனக்குத் தேவையான பல தகவல்களை இங்கிருந்து எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறேன். இதே போல், நான் படிக்கும் நூல்களிலிருந்து எனக்குக் கிடைக்கிற தகவல்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் அவ்வப்போது சேர்த்தும் வருகிறேன்'' என்கி
 றார். இவர் சமயம் தொடர்பான பல்வேறு தகவல்களை அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
 தமிழ் விக்கியில் பங்களிப்பதைப் பொழுது போக்காகச் செய்தாலும், இது ஒரு வகையான சமூக சேவை, மிகப்பெரிய கூட்டு முயற்சி. இந்த முயற்சியில், விக்கியில் தொகுக்கும் போது அல்லது கட்டுரை எழுதும் போது, அது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. எழுத்துத் திறன் அதிகரிக்கிறது. அறிவும் வளர்ச்சி அடைகிறது. கூடுதலாக, விக்கியில் தொகுக்கும் தன்னார்வலர் சமூகத்தோடு இணைந்து செயல்படும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று கூறும் இவர்கள் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் பலரும் விக்கிப்பீடியாவில் பங்கேற்க முன் வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
 இவர்களின் விருப்பத்திற்கேற்றார் போல், இந்தியாவிலேயே முதன் முதலாக விக்கிப்பீடியா மாணவர் மன்றம் என்கிற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு எனும் ஊரிலுள்ள எக்செல் பன்னாட்டுப் பள்ளி, எக்செல் மத்தியப் பள்ளி, எக்செல் மேல்நிலைப்பள்ளி என்கிற மூன்று பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, இப்பள்ளிகளில் பயிலும் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான 105 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழிக்கேற்றபடி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளின் விக்கிப்பீடியாக்களில் ஏதாவது ஒன்றிலும், கூடுதலாக ஆங்கில மொழியிலான விக்கிப்பீடியாவிலும், பிற விக்கிப்பீடியா திட்டங்களிலும் பங்களிப்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
 இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருக்கும் பல பள்ளிகளில், விக்கிப்பீடியா மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு, விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தேனி. மு. சுப்பிரமணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com