Enable Javscript for better performance
உப்புச் சுரங்கம்...- Dinamani

சுடச்சுட

    
    11

    உலகிலேயே மிகப் பெரிய உப்புச் சுரங்கம் போலந்து நாட்டில் இருக்கிறது. கடல் நீரிலிருந்துதானே உப்பு எடுப்பார்கள்? இதில் உப்புச் சுரங்கம் எப்படி வந்தது என்கிறீர்களா? இந்தச் சுரங்கத்துக்குள் உப்புப் படிவம் பாறை பாறையாக இருக்கும் அதை வெட்டி எடுத்து உப்புத் தூளாக மாற்றுவார்கள்.
     13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்தச் சுரங்கம் 2007-ஆம் ஆண்டு வரை போலந்து நாட்டுக்கு சமையல் உப்பைத் தந்து கொண்டிருந்தது. அதன் பிறகு உள்ளே வெள்ளம் வந்ததாலும் உப்பின் விலை கட்டுப்படியாகாமல் போனதாலும்,இங்கு உப்பு எடுப்பது நிறுத்தப்பட்டது.
     இந்தச் சுரங்கம் இப்போது சுற்றுலாத் தலமாக மாறி உள்ளது. இதற்குள் ஏராளாமான சிலைகள் உள்ளன. சுரங்கத் தொழிலாளிகளால் உப்புப் பாறையாலேயே கட்டப்பட்ட 3 சிறிய ஆலயங்களும் ஒரு பேராலயமும் உள்ளே இருக்கின்றன. ஆலயத்துக்குள் ஏராளமான உப்புச் சிற்பங்கள் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் "இறுதி இரவு உணவு' என்ற பெயரில் டாவின்சியால் வரையப்பட்ட ஓவியத்தைக் கூட இங்கே உப்புச் சிற்பமாக சுவரில் செதுக்கி வைத்துள்ளனர். உப்புப் பாறையால் ஆன தொங்கும் சரவிளக்குகள் கூட இங்கே உள்ளன.
     ஏறக்குறைய 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தச் சுரங்கத்தைக் கண்டு களிக்க ஆண்டுதோறும் இங்கு வருகிறார்கள். இந்தச் சுரங்கத்துக்கு வந்த முக்கியமான வி.ஐ.பி.கள் - நிக்கோலாஸ் கோப்பர்நிகஸ், போப் ஜான் பால்-2 மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர்.
     327 மீட்டர் ஆழத்தில் 287 கி.மீட்டர் நீளத்துக்கு இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது. உள்ளே ஒரு சிறிய ஏரி கூட உள்ளது. இன்றைய கலைஞர்கள்கூட அடிக்கடி உள்ளே சென்று தங்கள் கைவண்ணத்தில் ஏதாவது ஒரு சிலையை இங்கே செதுக்கிவைத்து விட்டுச் செல்கிறார்கள்.
     36 பேர்கள் ஒரே சமயத்தில் செல்லக்கூடிய ஒரு லிஃப்ட் இங்கே இயங்குகிறது. அதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் உள்ளே இறங்கி சுரங்கத்தைச் சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
     உள்ளே ஒரு உணவகம் கூட இருக்கிறது. இந்தச் சுரங்கம் யுனெஸ்கோவினால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
     -ஆர்.மகாதேவன்,
     திருநெல்வேலி.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai