அன்று ஐந்தாம் வகுப்பில் பெரும் சலசலப்பு காணப்பட்டது. காரணம் மாணவன் ஒருவன் கொண்டுவந்திருந்த நூறு ரூபாயைக் காணவில்லை. அது அங்கு வாடிக்கையாக இருந்தது.
தினமும் யாராவது ஒருவருடைய பென்ஸில், பேனா, ரப்பர், ஸ்கேல், நோட்டுப்புத்தகம், பணம் என்று தினம்தோறும் ஒரு பொருள் காணாமல் போய்க்கொண்டே இருந்தது.
யார் காரணம் என்று கண்டுபிடிக்க முடியவேயில்லை. வகுப்பாசிரியருக்கு இது பெரிய பிரச்சனையாக இருந்தது. பெற்றோர் மத்தியிலும் இதனால் கடும் அதிருப்தி நிலவியது.
வகுப்பாசிரியர் நேரடியாகத் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். தலைமையாசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் வகுப்பே அமைதியானது. அவர் மாணவர்களை நோக்கி,""குழந்தைகளே, உங்களில் யாரோ ஒருவர்தான் இச்செயலைச் செய்திருக்கவேண்டும்.
உங்களை தண்டிக்க எனக்கு விருப்பம் இல்லை! ஆனால் இந்தப் பணத்தை எடுத்தவர் யாராக இருந்தாலும் அது தவறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்! நான் சிறுவனாக இருந்த பொழுது நடந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்கு இன்று கூற விரும்புகிறேன்.
எனக்குத் தெரிந்த பாபு என்ற சிறுவனின் கதையே அது!
பாபு நன்றாகப் படிப்பான். விளையாட்டிலும் படுசுட்டியாக இருந்தான். ஆனால் அவனிடம் ஒரு குறை இருந்தது. தனக்குப் பிடித்த பொருளைப் பிறர் அனுமதியின்றி கையோடு எடுத்து வந்து விடுவான். இதுபோல் வகுப்பில் உள்ள மாணவர்களின் பென்ஸில் ஸ்கேல் என்று தினம் தோறும் ஏதாவது ஒரு பொருளை எடுத்து வந்து விடுவான். இது அவனது பெற்றோர்களுக்குத் தெரியாது. அவன் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியருக்கு அவன் மீது சந்தேகம் எழவில்லை. அவன் பெற்றோரும் அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர். தான் செய்வது திருட்டு என்று தெரிந்திருந்தும் பாபு அதனைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
இப்படி இருக்கையில் அவன் வசித்த ஊரில் பொருட்காட்சி நடைபெற்றது.
அங்கு நிறைய கடைகளும், பொழுதுபோக்கு
அம்சங்களும் நிறைந்திருந்தன.
தன் பெற்றோருடன் அங்கு சென்ற அவன் மகிழ்ச்சியோடு எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தான். அங்கிருந்த கடை ஒன்றில் அழகிய கார் பொம்மை ஒன்றைப் பார்த்து வாங்க எண்ணினான். ஆனால் அது விலை அதிகமாக இருந்தது.
மேலும் அவன் தந்தையிடம் போதிய அளவு பணமும் இல்லை.
எனவே தன் கைவரிசையைக் காட்டத்துணிந்தான்.
யாருக்கும் தெரியாமல் அந்த பொம்மையை அவன் எடுக்கும் பொழுது கடைக்காரரின் கண்ணில் மாட்டிக்கொண்டான். அவர் எல்லோர் முன்னிலையிலும் "பளார்' என்று அறைந்து அந்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்டார். இதற்கிடையில் வேடிக்கை பார்க்க அங்கு பெருங்கூட்டம் கூடியது. அவனது பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.
அங்கு கூடியிருந்த கூட்டத்தில் அவன் பள்ளித்தலைமை ஆசிரியரும் இருந்தார்.
பாபுவுக்கு கடைக்காரர் அடித்ததைவிட தன் பெற்றோர் முன்னிலையிலும், தன் பள்ளித்தலைமை ஆசிரியர் முன்னிலையிலும் தான் திருடிவிட்டு மாட்டிக்கொண்டது அவமானமாக இருந்தது. ""பாபு நீயா இப்படி?''
என்று கண்ணீர் விட்டபடியே கேட்டாள் அம்மா. அப்பாவோ அவன் முகத்தையே பார்க்க விரும்பாமல் வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். அவன் கையைப் பிடித்து இழுத்து வெளியில் வந்த தலைமை ஆசிரியர், ""பாபு அங்கே பார்!'' என்று சுட்டிக் காட்டினார்.
அங்கே ஒரு கால் இல்லாத சிறுவன் கண்காட்சியைப் பார்க்க வருபவர்களின் காலணிகளுக்குப் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தான்.
சற்று தொலைவில் கண்பார்வை இழந்த ஒருவர் ஊதுபத்திப் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார்.
""இந்த மாற்றுத் திறனாளிகள் இப்படி உழைக்கும் பொழுது உடலில் ஒரு குறையும் இல்லாத நீ இப்படித் திருடலாமா? அப்படியென்றால் உன் வகுப்பில் ஒவ்வொரு முறை பொருட்கள் காணாமல் போகும்பொழுதும் திருடியது நீதானா? உன்னைப்பற்றி மிக உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தேன். ஆக, வகுப்பில் நீ எடுக்கும் மதிப்பெண்களும் காப்பி அடித்து வாங்கியவைதானா?'' என்று கேட்டார். இதைக் கேட்ட பாபுவிற்கு சாட்டையால் அடித்தது போல் இருந்தது. தான் செய்தது எவ்வளவு ஈனமான செயல் என்று உணர்ந்து அதற்காக வருந்தினான். கடைக்காரரிடம் அடி வாங்கியதைவிட தலைமை ஆசிரியரின் சொற்கள் ஈட்டி போல் நெஞ்சில் பாய்ந்தன.
சுவரில் இருந்த காந்திபடத்திற்கு அருகே அவன் கையைப் பிடித்து "தர தர'வென்று இழுத்துச் சென்ற தலைமை ஆசிரியர், ""சத்திய சோதனை எழுதிய இந்த சத்திய சீலர் முன் இனிமேல் திருடமாட்டேன் என்று எனக்கு உறுதி கொடு '' என்றார்.
அன்றோடு திருட்டை விட்டவன்தான் பாபு. மேலும் நன்றாகப் படித்தான். தன் தலைமை ஆசிரியரை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு தானும் ஆசிரியப் பணியில் சேர்ந்து இன்று ஒரு தலைமை ஆசிரியராகப் பணி புரிகின்றான்.
""அவர் எந்தப் பள்ளியில் பணி புரிகின்றார் ஐயா?'' என்று கேட்டனர் சில மாணவர்கள்.
""இதோ நீங்கள் படிக்கும் இந்தப் பள்ளியில்தான்! நான்தான் அந்த பாபு! என்றார் தலைமை ஆசிரியர். மாணவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.
""சரி, நாம் அனைவரும் கண்ணை மூடிக்கொள்வோம்! நான் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவேன். அதற்குள் அந்தப் பணத்தை எடுத்தவர் யாராக இருந்தாலும் இந்த மேசை மீது கொண்டு வந்து வைக்க வேண்டும்'' என்றார்.
வகுப்பு ஆசிரியர், ""ஐயா, இது நடக்கிற காரியமா? திருடியவன் எவனாவது பணத்தைத் திரும்ப ஒப்படைப்பானா? என்று கேட்டார்.
""நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் விரும்பகிறவன் நிச்சயம் பணத்தைக் கொண்டுவந்து தருவான். அப்படித் தராவிடில் வாழ்நாள் முழுவதும் தீய செயல் புரியக்கூடிய துரதிர்ஷ்டம் அவனைத் தொடரும். நம் மாணவர்களின் மனத்தூய்மையைப் பரிசோதிக்க இச்சம்பவத்தையே நாம் மதிப்பீடாகக் கொள்ளலாம்.'' என்று கூறி எண்ணத் தொடங்கினார்.
எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டனர்.
பத்துவரை எண்ணி முடித்தார் ஆசிரியர்!
அனைவரும் கண் திறந்து பார்த்தனர். மேசையின் மேல் நூறு ரூபாய் தாள் ஒன்று இருந்தது!
ஆம்! கல்வியின் பயன் நன்னடத்தையே!
ந.லெட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை சிறுமி பாலியல் கொலை: தாய்க்குத் தெரியாமல் உடல் எரிக்கப்பட்டதா?
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

ஜன நாயகன் புதிய வெளியீட்டுத் தேதி: தயாரிப்பாளர் பதில்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



