Enable Javscript for better performance
கதைப்பாடல்- Dinamani

சுடச்சுட

    
    7

    படரும் நல்லுறவு!
     அன்புச்செல்வி அவள் பெயராம்
     ஆறாம் வகுப்புப் படிக்கின்றாள்
     சேமிக்கின்ற பழக்கத்தை
     பாங்காய் செயலில் செய்திடுவாள்!
     
     சேர்க்கும் பணத்தை அஞ்சலகம்
     தேடிச்சென்று செலுத்திடுவாள்
     ஆர்வம், சிக்கனம், சேமிப்பு
     அவளின் பழக்கம் சிறப்பாகும்!
     
     ஆண்டு முழுவதும் சேமிக்கும்
     அரிய பணத்தைக் கொண்டவளும்
     ஆண்டுதோறும் விடுமுறையில்
     அருமைச் சுற்றுலா சென்றிடுவாள்!
     
     ஏப்ரல் திங்கள் பள்ளியிலே
     எழுதி வைத்தார் அறிவிப்பு!
     தீப்பிடி விபத்தில் ஒருமாணவி
     சிக்கிப் பிழைத்த செய்தியது!
     
     மருத்துவ மனையில் அவளுக்கு
     மாண்புடன் சிகிச்சை தருவதற்கு
     விருப்புடன் நன்கொடை கொடுத்திடவே
     வேண்டுகோளும் விடுத்தனரே!
     
     அன்புச் செல்வி செய்தியினை
     அறிந்த உடனே சிந்தித்தாள்!
     அன்பைக்காட்ட ஒரு வாய்ப்பு!
     அவளும் எண்ணிச் செயல்பட்டாள்!
     
     அஞ்ச லகமும் சென்றிட்டாள்!
     அவளது பணத்தை எடுத்திட்டாள்!
     நெஞ்சில் கொண்ட முடிவோடு
     நேராய் வீடு சென்றிட்டாள்!
     
     அப்பா, அம்மா இருவரிடம்
     அவளின் திட்டம் கூறிட்டாள்!
     ""அப்பா, எனது சேமிப்பில்
     ஆயிரம் சொச்சம் பணமுண்டு....
     
     ...இந்த ஆண்டு சுற்றுலா
     இதனைக் கொண்டு செல்லாமல்
     அந்தப் பணத்தை தீவிபத்தில்
     அல்லல் பட்ட பெண்ணுக்கு....
     
     ...அளிக்க முடிவும் செய்திட்டேன்
     அனுமதி நீங்கள் தரவேண்டும்''
     தெளிந்த முடிவை மகள் கூற,
     சிந்தை மகிழ்ந்தார் பெற்றோரும்!
     
     ""அருமை யாக எண்ணுகின்றாய்!
     அளிப்பாய் பணத்தை நற்பணிக்கு''
     பெருமை யுடனே பெற்றோரும்
     பேச மகிழ்ந்தாள் செல்வியுமே!
     
     பள்ளி சென்று பணத்தையவள்
     பாங்காய் தந்தாள் தலைமையிடம்!
     பள்ளி எங்கும் அவள் பெயரே
     பாங்காய் ஒலிக்கச் சிறப்புற்றாள்!
     
     அன்பு நெஞ்சில் ஒளிவீச
     அருமைத் தொண்டு செய்திட்டால்
     பண்பு வளரும் பாரெங்கும்
     பற்றிப் படரும் நல்லுறவு!
     
     -பொன்மாரி
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai