Enable Javscript for better performance
தோல் சுவாசிக்குமா?- Dinamani

சுடச்சுட

    
    3

    நம் தோல் சுவாசிக்கிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்மை! உடல் வியர்க்கும்போது "உஸ்ஸ்...அப்பாடா...' என ஆடைகளைத் தளர்த்திக் கொள்கிறோம் இல்லையா? இது ஏன்?
     நமது தோல்களுக்கு சில வேலைகள் உண்டு. நாம் ஆரோக்கியமாக வாழ அந்த வேலைகளை அது சுணங்காமல் செய்தாக வேண்டும். அப்படி அது வேலை செய்யும்போது அதன் மீது காற்றோட்டம் இருக்க வேண்டும். உடலில் உற்பத்தியாகும் கழிவுப் பொருள்களையும் தேவையில்லாத சில விஷப் பொருள்களையும் தோல் வெளியேற்றியாக வேண்டும். அது மட்டுமல்லாமல் நமது உடலின் உஷ்ணத்தையும் உடலிலுள்ள தண்ணீரையும் ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டிய கடமையும் தோலினுடையதுதான். இந்தக் காரியத்தை தோல் எப்படிச் செய்கிறது. எப்படி?
     நம் உடலின் உஷ்ணம் அதிகமாகிறதென்று வைத்துக் கொள்ளுவோம். வியர்வைச் சுரப்பிகள் உடனே ரத்தத்திலிருந்து தண்ணீரை தோலின் மேல் பரப்புக்குப் பாய்ச்சி வெளியேற்றுகிறது!
     "போரல்' எனப்படும் மயிர்க்கால் துவாரங்கள் மூலமாக உடலின் மேல் பரப்புக்குத் தள்ளப்பட்ட நீர் ஆவியாக மாறுகிறது. இப்படி இது ஆவியாக மாற உடலின் உஷ்ணத்தை எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆகவே உடலின் உஷ்ணம் குறைத்து சீராக்கப்படுகிறது.
     கோடைக்காலத்தில் ஆவியாக முடியாத அளவுக்கு ஏராளமான நீர் வெளியேற்றப்படுகிறது.
     அதைத்தான் நாம் வியர்வை பெருக்கெடுத்து ஓடுவதாகக் கூறுகிறோம்!
     குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு தேவைப்படும்போது தோல் துவாரங்கள் (போரல்) இறுக மூடிக்கொள்கின்றன. மிகமிகக் குளிரான காலத்திலும் கொஞ்சமாக வியர்வை வெளிவரத்தான் செய்யும்! ஏனென்றால் உடலின் தேவையற்ற கழிவுப்பொருள்கள் நீருடன் கலந்து மயிர்க்கால்கள் மூலம் வெளியேற்றப்பட்டாகவேண்டும். ஆகவே தோல் தொடர்ந்து நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ஒரு அணு நீரைக்கூட அதுதன் துவாரங்களின் வழியே உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இப்படித் தோல் செயல்படுவதை அது "சுவாசிக்கிறது' என்கிறோம்!
     
     ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai