Enable Javscript for better performance
கருவூலம்- Dinamani

சுடச்சுட

  
  2

  சிந்து சமவெளி நாகரிகம்!
   உலகின் பழமையான நாகரிங்களில் குறிப்பிடத்தக்கது சிந்து சமவெளி நாகரிகம்.
   இமயமலையில் தோன்றிப் பெருகி ஓடி அரபிக்கடலில் கலக்கும் பெருநதியான சிந்து நதியின் பள்ளத்தாக்குகளிலும், அந்நீரால் வளமாக இருந்த சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே செழித்துத் தழைத்திருந்தது சிந்து சமவெளி நாகரிகம்!
   இந்த நிலப்பரப்பானது தற்போதைய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடமேற்கு பகுதியாகும். இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் பண்டைய காலத்திலேயே விவசாயம் செய்தும், சுட்ட செங்கற்களால் வீடு கட்டியும், ஆடை அணிகலன்கள் அணிந்தும் வாழ்ந்துள்ளார்கள். இன்றளவும் உலக அளவில் நீண்ட கலாசாரமும். பாரம்பரியமும் மற்றும் பண்பாடும் கொண்ட பழம்பெரும் பூமி என்று பாரதம் புகழப்படுவதற்கு சிந்து சமவெளி நாகரிகமே முக்கிய காரணமாகும்.
   கி.பி. 1842ஆம் ஆண்டு சார்லஸ் மேசன் என்பவர் செய்த அகழ்வாராய்ச்சியின் போது வெளிப்பட்ட முதல் புராதன நகரம் ஹாரப்பா ஆகும். அதனால் ஹாரப்பன் நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
   கி.பி. 1921 மற்றும் 22ஆம் ஆண்டுகளில் சர்.ஜான் மார்ஷல், ராய் பஹதூர் தயாராம், மற்றும் மாதே ஸ்வரூப் போன்றவர்களால் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாராய்ச்சிகளின் பயனாக மற்றொரு புராதன நகரமாகிய மொஹஞ்சதாரோ வெளிப்பட்டது.
   இந்த அகழ்வாராய்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிப்பிடங்கள் அவர்கள் பயன்படுத்திய பல்வகையான பொருட்கள் மற்றும் பல வியப்பான உண்மை தகவல்களும் வெளிப்பட்டன.
   
  ஆய்வில் கிடைத்த தகவல்கள்
   கி.மு.3300 முதல் கி.மு. 1300 வரையிலுள்ள சுமார் 2000 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் சிந்து சமவெளி நாகரிகம் திகழ்ந்துள்ளது.
   இதன் ஆதிக்கம் தற்போதைய பாகிஸ்தானின் பலுஸிஸ்தான் முதல் சிந்து பகுதி வரையிலும் மற்றும் குஜராத், ராஜஸ்தான், ஹரப்பா, பஞ்சாப் ஆகிய இந்தியாவின் வடமாநிலங்களிலும் விரிந்து பரந்து இருந்துள்ளது.
   சுமார் 12,60,000 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பில் அமைந்து இருந்துள்ளது.
   மேலும் 50லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் உலகளவில் பண்டை நாகரிகங்களில் அளவில் பெரியது என்று பெருமை பெற்றுத் திகழ்கிறது.
   கோதுமை, பார்லி போன்ற தானியங்களும், அரிசி, எள், பட்டாணிக் கடலை, பேரீச்சை, பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் எருதுகள் போன்ற மிருகங்களைப் பழக்கி அன்றாட வேலைகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர்.
   மேலும் உலோகங்களினால் பல்வேறு பொருட்களைத் தயாரித்து உபயோகித்து உள்ளார்கள்!!
   பயிர்த்தொழில், முத்திரை அச்சுக்கள் செய்தல், வண்ணக்கற்களில் மணிமாலைகள் செய்தல், போன்ற கைத்தொழில்களும் செய்துள்ளார்கள்!
   இவை அனைத்திற்கும் மேலாக 21ஆம் நூற்றாண்டின் நகர அமைப்பை மிஞ்சும் வகையில் மேம்பட்ட நகரங்களை அமைத்து நாகரிகமாக வாழ்ந்துள்ளனர்! முற்றத்துடன் கூடிய வீடுகள், பல மாடிக்கட்டிடங்கள், தனியான குளியல் அறைகள், சீரான கழிவுநீர் வடிகால்கள், சிறப்பான பொது சுகாதார அமைப்பு, போக்குவரத்துக்கு வசதியாக அமைந்த தெருக்கள், முதலியவை வியப்பூட்டும் அளவில் இருந்துள்ளது!!
   வெள்ளத் தடுப்புக்காகவும் நகரின் பாதுகாப்பிற்காகவும் பிரம்மாண்டமான சுவர்கள் அமைத்து உள்ளார்கள்! கப்பல் மற்றும் படகு துறைகள், சேமிப்புக் கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள் போன்றவை நம் முன்னோர்களின் பொறியியல் திறமைக்குச் சான்றாக உள்ளது!
   அந்நாளிலேயே மாட்டுவண்டியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்! சக்கரங்களை முதலில் பயன்படுத்தியது சிந்து சமவெளி மக்களே!!
   அகழ்வாய்வில் விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தெய்வங்கள் போன்ற உருவங்கள் கொண்ட கலைப்பொருட்கள், மண்பாண்டங்கள், மணிமாலைகள், வளையல்கள், யாழ் போன்ற தந்தியுடன் கூடிய இசைக்கருவிகள், விளையாட்டில் உபயோகிக்கும் காய்கள் போன்ற பல பொருட்கள் இப்பகுதியில் கிடைத்துள்ளன!!
   எழுத்து முறை ஒன்றும் வழக்கத்தில் இருந்தது!! நீளம், அகலம், காலம், எடை, கனபரிமாணம், ஆகியவற்றை அறியும் திறனும், வைத்தியத் திறனும் பெற்றிருந்தார்கள்!
   இங்கு கிடைத்த ஸ்வஸ்திக் முத்திரைகள், லிங்க வடிவங்கள், போன்றவை மூலம் இந்து மதத்தின் தாக்கம் இங்கு இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.
   மேலும் மெசபடோமியா போன்ற இடங்களுடன் கடல் வாணிபம் செழித்திருந்தது.
   நகரங்களை நிர்வாகம் செய்ய நகர அமைப்புக்குழு ஏற்படுத்தி திட்டங்களை வகுத்து உள்ளார்கள்! அதனை செயல்படுத்த நகராட்சிக் குழுக்களும், நிர்வாக சபைகளும் அமைத்துள்ளார்கள்!
   2014ஆம் ஆண்டு தொல்லியல் துறையை சேர்ந்த அகழாய்வு நிபுணர் ஏ.கே.பாண்டே என்பவர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே உள்ள கிராமத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது சிந்து சமவெளி நாகரிக காலத்து மக்கள் பயன்படுத்திய 4000ஆண்டுகளுக்கு முந்தைய பல அரிய பொருட்களைக் கண்டறிந்துள்ளார்!
   அப்பகுதியில் மண்சுவருடன் கூடிய வீடு ஒன்றையும் ஓரிடத்திலும் மற்றோர் இடத்தில் நான்கு அடுக்குகள், கொண்ட வீட்டின் பகுதியையும் ஆய்வில் கண்டு உள்ளார்! மேலும் சுடுமண் பொம்மைகள், 21 முதுமக்கள் தாழிகள் முதலியவை கிடைத்துள்ளன.
   அங்கு கிடைத்த மனித எலும்புக்கூடு ஒன்று தலையில் தாமிர கிரீடத்துடன் இருந்தது!
   அம்மனிதர் கிராமத் தலைவராக இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக உள்ளது!
   கி.மு. 1800 ஆண்டுகள் வாக்கில் இந்த நாகரிகம் முடிவுக்கு வரத் தொடங்கியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பருவ நிலை மாற்றமே முக்கிய காரணம் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மழை குறைந்து குளிர் அதிகமானதால் மக்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கலாம் என்று அறியப்படுகிறது.
   இன்றைய பல்வேறு துறைகளின் வளர்ச்சியின் ஆதார வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் தென்படுகின்றன!
   உலகெங்கும் உள்ள அறிஞர் பெருமக்களால் இன்றளவும் சிந்து சமவெளி மக்களின் நாரிகமும் அறிவும், நிர்வாக திறனும், பல்தொழில் திறமையும் பெருமையுடனும், அதிசயத்துடனும் வியந்து நோக்கப்படுகிறது.
   கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai