Enable Javscript for better performance
இளமையில் வெல்! "திரு' நிறைச் செல்வியர்!- Dinamani

சுடச்சுட

  
  s15

  "குழந்தைகளிடம் ஐந்து வயதிற்குள்ளாகவே நல்லொழுக்கத்தையும், நற்சிந்தனைகளையும், நல்ல பழக்க வழங்கங்களையும் நாம் விதைத்து விட்டோம் என்றால், அவை அவர்களின் எதிர்கால வாழ்வை வளப்படுத்துவதுடன், பிறர்க்கும் பயன்படும் - வழிகாட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில், "கருவிலே திரு'வுடையவளாகத் திகழும் ரோஜா என்ற சிறுமியைக் குறிப்பிடலாம். இவள், தான் வாழும் பகுதியினரை மட்டுமல்லாமல் பல ஊர் மக்களையும் திரும்பிப் பார்க்கவும் திகைக்கவும் வைத்திருக்கிறாள்.
  திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளை அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியையான
  பா.சுடர்க்கொடி நெகிழ்ந்து கூறியவை....

  நான் பணிபுரியும் பள்ளியில் 2012-இல் நல்ல அழகும் அறிவும் கொண்ட குழந்தை "ரோஜா' முதல் வகுப்பில் சேர்ந்தாள்.
  ÷வாசிப்புத் திறனுக்கு என்று பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நாள்தோறும் தேவாரப்பாடல் ஒன்று கரும்பலகையில் எழுதிப் படிக்க வைப்பேன். "பூத்தேர்ந்து ஆயின கொண்டுநின் பொன்னடி' என்பது திருஞானசம்பந்தரின் திருவோத்தூர் தேவாரம். ஒரு நாள் இதை எழுதி வைத்தேன். எந்தக் குழந்தைகளும் மனனம் செய்யவில்லை. வாசிக்க மட்டுமே செய்தனர். ஆனால், இக்குழந்தை ரோஜா மட்டுமே என்னிடம் வந்து முழுப் பாடலையும் கேட்டு, எழுதிப் படித்தாள், உடனே முழுப் பாடலையும் பாடிக்காட்டினாள்! எனக்கு வியப்பாக இருந்தது! கூடவே நம்பிக்கையும் பிறந்தது!
  செங்கல் சூளையில் கூலி வேலை செய்யும் முருகன், ரமா என்னும் ரோஜாவின் பெற்றோரைக் கண்டு அவளது திறமைகளை எடுத்துக்கூறி, அவர்கள் அனுமதியுடன் விடுமுறை நாள்களில் அவளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவளுக்குத் தேவாரப் பாடல்களை இசையோடு சொல்லிக் கொடுத்தேன். ரோஜாவும் உடனுக்குடன் மனனம் செய்து இனிய குரலில் அருமையாகப் பாடினாள்! இதைக் கண்ட நான், இன்னொரு ஞானசம்பந்தர்தான் பிறந்திருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைந்தேன்!
  ÷பிறகு, எங்கள் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒவ்வொரு சோமவாரத்தின் போதும் அவளுக்கு ஞானசம்பந்தர் போல் வேடமிட்டு அடியார்கள் முன் பாடவைத்தேன். அனைவரும் வியந்தனர்! அவள் நிறைய ஞானசம்பந்தர் பாடல்களையே பாடிப் பலரையும் வியப்பில் ஆழ்ந்தினாள்!
  6 வயதில் 150 தேவாரப் பாடல்களை மனனமாகப் பாடி எங்கள் ஊர் மாவட்ட கலெக்டரிடம் 2013-ஆம் ஆண்டு பாராட்டும் பரிசும்கூட பெற்றிருக்கிறாள்!
  அதைத் தொடர்ந்து குடியாத்தம், தென்னெலப்பாக்கம், கல்பூண்டி, ஆரணி, குன்னகம்பூண்டி, வெடால், வந்தவாசி, கோயம்புத்தூர், சேத்துப்பட்டு, கோட்டுப்பாக்கம், சேலம், ஆற்காடு, திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம், வேலூர், சென்னை சிவம் தொலைக்காட்சி, காவேரிப்பாக்கம் சுமைதாங்கி, ஆரணி முதலிய ஊர்களில் பாடி, பலரையும் கவர்ந்துவிட்டாள்!
  இப்போது "ரோஜா' ஆறாம் வகுப்பில் படிக்கிறாள்! இப்போது இவளுடன் முனுசாமி, ஆனந்தி என்பவர்களின் மகளான செல்வி என்ற சிறுமியும் ரோஜாவுக்கு இணையாகப் பாடிவருகிறாள்.
  ÷தற்போது 125 குழந்தைகளுக்கு என் வீட்டிலேயே இலவசமாக ஆன்மிக வகுப்புகளும் தேவாரப் பாடல்களும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்கின்றனர். இக்குழந்தைகளை மேடையேற்றிவிட்ட திருப்தி எனக்குக் கிடைத்திருக்கிறது...'' என்று பெருமிதத்தோடு கூறுகிறார் சுடர்க்கொடி!
  ÷ரோஜாவிடம் பேச நெருங்கிய போது, எடுத்த எடுப்பிலேயே "திருச்சிற்றம்பலம்' என ஆரம்பித்து, "சொல்லுங்கம்மா' என்று பணிவுடன் கொஞ்சும் மழலை மொழியில் பேசியபோது உலகமே மறந்துதான் போனது.
  ÷"தேவாரம் பாட எப்படி உங்களுக்கு விருப்பம் உண்டாச்சு?' என்று அவளிடம் கேட்டதும், "ஒருநாள் எங்க ஆசிரியர் ஒரு பாடலை போர்டில் எழுதிப் போட்டுட்டுப் படிக்க சொன்னாங்க. நான் எல்லாப் பாடலையும் எழுதித்தாங்கனு கேட்டு வாங்கி, உடனே மனப்பாடம் செஞ்சு அவங்களிடம் பாடிக்காட்டினேன். அதிலேந்து எனக்கு இதில் விருப்பம் வந்துடுச்சு. நான் பாடுறது எல்லோருக்கும் பிடிச்சிருக்குனு தெரிஞ்சதும்... நிறைய பாடல்களைக் கத்துக்கிட்டுப் பாடணும்னு ஆர்வம் ஏற்பட்டுது.''
  ரோஜா இவ்வாறு கூறியவுடன், "சரி ஏதாவது ஒரு பாடல் பாடுங்க கேட்போம்.... உம்ம்... தேவாரத்துலேந்து வேண்டாம்... திருவாசகத்துல ஒரு பாடல் பாடுங்க'' என்றவுடன், "கண்கள் இரண்டும் அவன் கழல்கண்டு களிப்பன ஆகாதே / காரிகையார்கள் தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே'' என்று மிக இனிமையாகக் கொஞ்சு தமிழில், நல்ல உச்சரிப்பில் இசையோடு பாடினாள்.
  ÷"சரி, இது எத்தனையாவது பதிகம்? இந்தப் பாடல் வரும் பதிகத்தின் பெயர் தெரியுமா?'' என்றவுடன் "ஓ... தெரியும்மா... திருப்படையாட்சி, 49ஆவது பதிகம், முதல் பாடல்'' என்றவுடன் அசந்து போய்விட்டேன்!
  ÷"சரி.., நீ இன்னும் நிறைய தேவாரத் திருவாசகப் பாடல்களைக் கத்துக்கிட்டு வருங்காலத்துல நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுப்பியா?'' என்றதும், "ஓ... கண்டிப்பாம்மா... எங்க ஆசிரியர் மாதிரியே சொல்லிக் கொடுப்பேன்'' என்றாள்.

  இத்தகைய விளையும் பயிர்களை முளையிலே தெரிந்துகொண்டு வளப்படுத்திய பா.சுடர்க்கொடி போன்ற தலைமையாசிரியைகள் பலர் உருவாக வேண்டும். இச்சிறுமி சைவத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய சொத்து என்றே கூறத்தோன்றுகிறது. இச்சிறுமியை அறிமுகப்படுத்திய காவேரிப்பாக்கம் சிவ.நடராஜனுக்கு மானசீகமாக நன்றி கூறினேன்.
  -இடைமருதூர் கி.மஞ்சுளா

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai