Enable Javscript for better performance
கருவூலம்: காஞ்சிபுரம் மாவட்டம்- Dinamani

சுடச்சுட

  
  s2

  சென்ற இதழ் தொடர்ச்சி...

  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
  இந்தியாவின் பழமையான சிறிய நீர்ப் பறவைகள் சரணாலயமாகும் இது! 1798ஆம் ஆண்டே ஆங்கில அரசு இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அடையாளம் கண்டு விட்டது! 1858இல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 40ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் மதுராந்தகம் அருகே உள்ளது.
  கனடா, சைபீரியா, பர்மா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகளில் பலவகையான கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி, நீர்க்காகங்கள் குறிப்பிடத்தக்கவை!

  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
  1985ஆம் ஆண்டு ஜூலை 24இல் இந்த உயிரியல் பூங்கா துவங்கப்பட்டது. 1490 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது தாம்பரத்தை அடுத்துள்ளது. அருகில் வண்டலூர் மலை எனப்படும் சிறு குன்று உள்ளது. இப்பூங்காவில் 38வகையான பாலூட்டிகளும், பலவகையான பறவைகளும், வகைவகையான ஊர்வனவும் உள்ளன.

  மீனம்பாக்கம்-சென்னை பன்னாட்டு விமான நிலையம்
  1500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக அதிகப் போக்குவரத்து கொண்ட விமான நிலையம் இதுதான்!

  முட்டுக்காடு-முதலைப்பண்ணை
  சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ளது. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5000முதலைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம்! வித்தியாசமான அனுபவத்தைத் தரும் சுற்றுலாத் தலம் இது.

  முட்டுக்காடு - நீர்விளையாட்டு, மற்றும் படகு ஓட்டும் அமைப்பு
  பிக்னிக் செல்வதற்கு சிறந்த இடம்! இங்கு மிதக்கும் பலகையில் அமர்ந்து அலைகளில் விளையாடும் விளையாட்டுகள் கற்றுக் கொடுக்கப்படுவதுடன், செய்தும் காட்டப்படுகிறது. அருகிலுள்ள "கோவளம்' பகுதியில் நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு வசதிகள் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பழமையான கோட்டை, மற்றும் தர்கா உள்ளது.

  தட்சிணசித்ரா (முட்டுக்காடு)
  தென்னிந்திய மக்கள் வாழ்வு முறைகளை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம், சுமார் 10 ஏக்கர் நிலப்பகுதியில் பழமையான கிராம அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

  திரு பரமேஸ்வர விண்ணகரம் கோயில்-காஞ்சிபுரம்
  இக்கோயில் குடைவரை கோயில் அமைப்பில் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனால் உருவாக்கப்பட்டது. இங்கு ஒரு பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கருவறை, சுற்றுப் பிரகாரம், தூண்களும் உள்ளன.
  இக்கோயில் உட்புற சுவர்களில் பரமேஸ்வர வர்மனின் பிறப்பு, இறைவன் மன்னனுக்கு போதிக்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் நரகாசுர வதம், உள்ளிட்ட பல புராண நிகழ்வுகள் மிகமிக அழகிய கலைவடிவங்களாக புடைப்புச் சிற்பங்களாகச்சித்தரிக்கப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
  இங்குள்ள கல்யாண மண்டபத்தில் 8வரிசைகளில் வரிசைக்கு 12தூண்கள் வீதம் 96தூண்கள் உள்ளன! இவை ஒரே கல்லால் கலைநயத்துடன் செதுக்கப்பட்டவை! இத்தூண்கள் யாளி, குதிரை மீது வீரர்கள், உள்ளிட்ட கலை வடிவங்களில் உள்ளவை! கண்களைக் கவரும் கலைநயம் மிகுந்தவை!
  இம்மண்டபத்திற்குள்ளேயே 4 தூண்கள் கொண்ட சிறு மண்டபம் உள்ளது. இதனால் 100கால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.
  இம்மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் தொங்கும் கற்சங்கிலிகள் உள்ளன! அதாவது ஒரே கல்லை சிறிது சிறிதாகச் செதுக்கிச் சங்கிலியாக உருவாக்குவது! இது சிற்பக்கலையில் அற்புதமாகக் கருதப்படுகிறது!
  மேலும் இக்கோயிலில் அத்திமரத்தால் செய்யப்பட்ட "அத்தி வரத பெருமாள்' திருவுருவச் சிலை கோயில் திருக்குளத்திற்குள் உள்ளது! 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக வெளியேற்றி, சிலையை எடுத்து, கோயிலுக்குள் வைத்து ஒரு மாத காலத்திற்கு உற்சவங்கள் சிறப்பாக நடக்கும்!

  மேலும் சில தகவல்கள்!
  • 1300 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதர் கோயிலில் 192அடி உயர ராஜகோபுரம் உள்ளது.
  • செயின்ட் தாமஸ் மெüண்ட் எனப்படும் பரங்கிமலையில் பழமையான கிறித்தவ தேவாலயம் உள்ளது.
  • தமிழகத்தில் பாறை மற்றும் கல்லிலே செய்யப்பட்ட சிறப்பான கலைப்படைப்புகள் கொண்டுள்ளதாக 163 இடங்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றில் சுமார் 70சதவீதம் (சுமார் 113 இடங்கள்) காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே உள்ளது! மொத்தத்தில் சுற்றுலா செல்ல மிகவும் அழகான பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம்!
  தொகுப்பு: கே. பார்வதி, திருநெல்வேலி டவுன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai