Enable Javscript for better performance
திரும்பி வந்த கடிதம்!- Dinamani

சுடச்சுட

    
    s8

    கதைப்பாடல்
    அப்பா மணியன் அலுவலகம்
    அவசரமாகப் புறப்பட்டார்!
    அகிலன் என்னும் தம் மகனை
    அழைத்தார் அஞ்சலகம் செல்ல!

    "அகிலா, அந்த உறையின் மேல்
    அழகாய் இருபது ரூபாய்க்கு
    அஞ்சல் தலைகள் ஒட்டிவிடு
    அதன்பின் பெட்டியில் போட்டுவிடு!''....

    ...என்றார்...கடிதம் பணத்துடனே
    எடுத்துத் தந்தார் அவனிடமே!
    பள்ளி செல்லும் பாதையிலே
    பார்வையில் இருந்தது அஞ்சலகம்!

    அஞ்சல் தலையை வாங்கியவன்
    அவற்றை உறையில் ஒட்டியபின்
    அருகே இருந்த பெட்டியிலே
    சேர்த்தான்...,சென்றான் பள்ளிக்கு!

    சென்னைக்குச் சென்ற அக்கடிதம்
    எண்ணி நான்கே நாட்களிலே
    சுவரில் எறிந்த பந்தைப்போல்
    அவரிடம் வந்தது....அஞ்சல் தலை

    அளவில் குறைவு என எழுதி
    அதற்கு தண்டம் இருபதுடன்
    அங்கும் இங்கும் முத்திரைகள்!
    அவருக்கு ஒன்றும் புரியவில்லை!

    கொடுத்தார் தொகையை....புது உறையை
    எடுத்தார்....முகவரி எழுதியபின்
    கடிதம் வைத்தார் அஞ்சலகம்
    கடிதில் சென்றார்....விரைவஞ்சல்
    என்னும் முறையில் அனுப்பி விட்டார்!
    இல்லம் திரும்பி வந்தவுடன்
    எங்கே அகிலன் எனக் கேட்டார்
    எதிரே வந்து அவன் நின்றான்!

    ...."அக்காள் அமுதா கல்விக்கு
    அரசின் உதவித் தொகை பெறவே
    அஞ்சலில் அனுப்ப விண்ணப்பம்
    அன்று உன்னிடம் நான் கொடுத்தேன்

    போதிய அஞ்சல் தலையின்றி
    போனது திரும்பி வந்ததின்று!
    என்ன நடந்தது?....உள்ளபடி
    என்னிடம் சொல்வாய் நல்லபடி!

    "அப்பா! என்னை மன்னியுங்கள்...-அதன்
    அருமை எனக்குத் தெரியவில்லை!
    வழியில் கடையில் தின்பண்டம்- பாதிக்கு
    வாங்கித் தின்றேன் வாய் ருசியால்!....

    ......மீத மிருந்த தொகை பத்து -சொன்னதில்
    பாதிக்கு அஞ்சல் தலை பெற்றேன்....
    ....ஒட்டிச் சேர்த்தேன்....பெட்டியிலே....
    ....உண்மை இதுதான்''....அவன் சொன்னான்!

    "இன்னும் உள்ளது நான்கு தினம்
    எல்லாம் நமது நல்ல நேரம்! -அஞ்சல்
    சென்னை சென்றிடும்! இனிமேல் நீ
    சொன்னதை முறையாய்ச் செய்'' என்றார்!

    அகிலன் எடுத்தான் ஓர் உறுதி....
    "அன்னை தந்தை சொல் கேட்பேன்!
    எந்தன் ஆசை நிறைவேற்ற
    எவர்க்கும் தொல்லை தரமாட்டேன்!
    பூதலூர் முத்து

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai