Enable Javscript for better performance
பூனைக்கு சலங்கை கட்டிய எகள்!- Dinamani

சுடச்சுட

  
  s12

  'தங்கப் பாப்பா' இல்லம் நியான் விளக்கில் பிரகாசித்தது! மாவிலைத் தோரணங்கள், கலர் காகிதம், அலங்கார விளக்குகள்! கல்யாண வீடுபோல் கலகலப்பாக இருந்தது!
  பாப்பாவின் வகுப்புத் தோழிகள், தோழர்கள், உறவினர்கள், எல்லோரும் வரத் தொடங்கி விட்டனர்.
  தங்கப்பாப்பா பெயருக்கேற்றபடி புத்தாடை, நகைகள் அணிந்து தங்கம் போல ஒளிர்ந்தாள்! சமையல் அறையில் கேக், மற்றும் தின்பண்டங்களின் வாசனை மூக்கைத் துளைத்தது!
  தங்கப்பாப்பாவுக்கு இன்று ஐந்தாவது பிறந்த நாள்!
  அங்கிருந்த எலிகளுக்கு நாக்கில் எச்சில் ஊறியது! ஆனால் ஒரு துகளைக்கூட எலிகளால் எடுக்க முடியவில்லை!
  காரணம் அந்தப்பூனைதான்! அதன் பெயர் "சுட்டி'! தங்கப்பாப்பாவின் வளர்ப்புப் பூனை!
  தங்கப்பாப்பாவின் தோளில் தொற்றிக்கொண்டும், மடியில் படுத்துக் கொண்டும் இருக்கும்!
  இதற்கு எப்படியாவது முடிவு கட்ட எலிகளெல்லாம் சேர்ந்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தின.
  "இந்தச் சுட்டிப் பூனை வந்த பிறகு நம் நிம்மதியெல்லாம பறி போய்விட்டது. நம்மால் சுதந்திரமாக எந்த இடத்திலும் நடமாட முடியவில்லை.''என்றது ஓர் எலி!
  "ஆமாம்...! வெளியில் தலைகாட்ட முடியவில்லை! சற்று வெளியில் வந்தால் போதும்! நம் மீது பாயத் தயாராகிவிடுகிறது.''என்று புலம்பியது மற்றொரு எலி!
  ""புலம்பாதீங்க...,உருப்படியா ஒரு யோசனை சொல்லுங்க...''என்றது தலைமை எலி!
  ஒரு சுண்டெலி தயங்கியபடி, "எனக்கு ஒரு யோசனை....., சொல்லலாமா?''
  ""குட்டிப்பயலே....,தயங்காம சொல்! இங்கு எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு!''
  "அந்தச் சுட்டிப்பூனையின் கழுத்தில் ஓரிரு சலங்கைகளைக் கட்டிவிட்டால் அது வரும்போது சலங்கைச் சத்தம் கேட்கும்.... நாம் தப்பித்துக் கொள்ளலாம்''
  எலிகளின் சிரிப்பலை ஓய நெடுநேரமாகியது.
  ""குட்டி...,உன் வயசுக்கேத்தபடி விளையாட்டாப் பேசறே....,நமக்கு எங்கிருந்து சலங்கை கிடைக்கும்? கிடைத்தாலும் அதை சுட்டியின் கழுத்தில்.....நினைச்சாலே பயமா இருக்கே!''
  "அந்தப் பொறுப்பை எங்கிட்டே விடுங்க...,சலங்கைக் கடையிலுள்ள பொந்தில்தான் நான் குடியிருக்கேன்...எப்படியாவது இரண்டு சலங்கைகளைக் கொண்டு வந்து விடுகிறேன்.''
  யாருக்கும் அதன் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை.
  ஆனால் தலைமை எலி, ""குட்டி! நீ உன் சாமர்த்தியத்தைக் காட்டு! நான் உன்னை நம்புகிறேன்.''என்றது.
  "அடுத்த கூட்டத்திற்கு சலங்கையுடன் வருகிறேன்.''என்று கூறிவிட்டு விடைபெற்றது குட்டி எலி!
  அடுத்த கூட்டம்.
  தலைவருடன் எலிகள் காத்திருந்தன. வெகு நேரமாயிற்று! குட்டியைக் காணோம்!
  ""குட்டி வாய்ச்சவடால் அடிச்சிருக்கான். இப்போ முகத்தை மூஞ்சூறு மாதிரி வெச்சுக்கிட்டு வருவான் பாருங்க...'' என்றது ஒரு எலி!
  "சலங்....சலங்''
  "அட! குட்டி சொன்னபடி சலங்கையுடன் வந்து விட்டானே!''
  குட்டியின் கழுத்தில் சணலில் கட்டிய சலங்கைகள்!
  ""குட்டிச்செல்லம்! எப்படிம்மா கெடச்சுது சலங்கைகள்?''
  "இது என்ன பிரமாதம்? விற்பனைக்காகத் தொங்க விடப்பட்டிருந்த சலங்கைச் சரத்தின் ஒரு முனையை என் கூரான பல்லால் கடித்து இழுத்தேன்.
  அவ்வளவுதான்! சலங்கைகள் கீழே உதிர்ந்தன. கடைப்பையன் வருவதற்குள் இரண்டு மூன்று சலங்கைகளை லவட்டிக்கொண்டு வந்துட்டேன்!.....ஒரு சணல் கயிற்றில் கோர்த்து கழுத்திலும் கட்டிக் கொண்டேன்.''
  எலிகளுக்கு ஒரே சந்தோஷம்!
  "எல்லாம் சரி! இதை எப்படி சுட்டிப் பூனையின் கழுத்தில் கட்டப் போறே?''
  "அதற்கும் ஒரு திட்டம் இருக்கிறது தலைவரே! அடுத்த கூட்டத்தில் சொல்கிறேன்''என்றது குட்டி எலி!
  அடுத்த நாள்! தங்கப் பாப்பா தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறாள். சுட்டிப் பூனை எங்கோ போயிருந்தது.
  பாப்பாவுக்கு எதிரில் எலிக்குட்டி "சலங்...சலங்' என்ற ஓசையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது.
  "என்ன இது? சலங்கைச் சத்தம்!'' தங்கப்பாப்பா சுற்றும் முற்றும் பார்த்தது. சலங்கை கட்டிய எலிக்குஞ்சு!
  "அம்மா இங்கே வாயேன்....இந்த எலிக்குட்டியின் கழுத்தில் அழகான சலங்கை!''
  வந்து பார்த்த அம்மா ஆச்சரியப் பட்டாள்! "சலங்கை கட்டின எலிக்குஞ்சு! அழகா இருக்கே!''
  "அம்மா அந்த சலங்கையை எப்படியாவது கழட்டி நம்ம சுட்டிக்கு கட்டி விடுங்கம்மா!''
  "அதெப்படி முடியும்?''
  தங்கப்பாப்பா பிடிவாதம் பிடிக்கிறாள்.
  மற்றொரு முறை சலங்கை கட்டிய எலி இவர்கள் முன்னே வந்து வேண்டுமென்றே சலங்கைகளை அவிழ்த்து விட்டது!
  ""ஹையா! இதோ சலங்கைகள்!'' தங்கப்பாப்பா சலங்கைகளைப் பொறுக்கிக் கொண்டது!
  மறுநாள்....சுட்டிப் பூனையின் கழுத்தில் சலங்கைகள்! "சலங்....,சலங்' என்ற சப்தத்துடன்!
  எலிகளின் அடுத்த கூட்டம்! நடந்தவற்றை குட்டி எலி விளக்கியது!
  "சலங்கை எப்பிடித் தானா அவிழ்ந்து விழும்! அதைச் சொல்லுடா செல்லம்!''
  "அதெப்படித் தானா அவிழும்? நானே அதை கொஞ்சம் லூஸாத்தான் கட்டியிருந்தேன். அப்படியே பல்லால கடிச்சு அவிழ்த்து விட்டேன்''
  குட்டிக்கு ஏகப்பட்ட பாராட்டுகள்! அந்த வீட்டில் அவை சுதந்திரமாக உலவி வந்தன. பூனை வரும்போது சலங்கைச் சத்தம் கேட்பதால் ஓடி ஒளிந்து கொள்கின்றன!

  -கண்ணகி

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai