Enable Javscript for better performance
ஹலோ...பாட்டியம்மா..!- Dinamani

சுடச்சுட

  
  s18

  (சென்ற இதழ் தொடர்ச்சி...)

  பாட்டி: அதன்பின், லாலா லஜபதி ராய் தோற்றுவித்த "மக்கள் சமுதாய பணியாளர்கள்' (Servants of the People Society) என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக இணைந்து தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். பின்னர் அந்த அமைப்பின் தலைவராகவும் ஆனார்.
  1921 இல் அவர் லலிதாதேவியை மணந்தார். திருமணத்திற்கு அவசியம் வரதட்சணை வாங்கவேண்டும் என்ற விதியை மாற்றி, கதரும், கைராட்டையும் சீதனமாகப் பெற்றார்.
  பேத்தி: ஓ...!!
  பாட்டி: காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று 1946வரை தன் வாழ்நாளில் ஏறத்தாழ 9 ஆண்டுகளை சிறையில் கழித்தார். சிறையில் கருத்துள்ள பல நூல்களைப் படித்தார். மேடம் மேரி க்யூரியின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் எழுதினார்.
  1947 இல் நாடு சுதந்திரம் அடைந்தபின், உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் கோவிந்த் வல்லபந்த் அமைச்சரவையில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார். போராட்டக்காரர்களின் மீது காவல் துறை லத்தி சார்ஜ் செய்து விரட்டுவதை மாற்றி, நீரைப் பீய்ச்சியடித்து விரட்டுமாறு உத்தரவிட்டார். பேருந்துகளில் முதன் முறையாக பெண் நடத்துனர்களை நியமனம் செய்தார்.
  பேரன்: ஆ...!!!
  பாட்டி: பிரதமர் நேருவின் அன்புக்குப் பாத்திரமாகி, 1952 முதல் 1956 வரை நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். 1956 இல் மெகபூப் நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குப் பொறுப்பேற்று சாஸ்திரி பதவி விலக முன்வந்தார். நேரு அதை ஏற்கவில்லை. அடுத்த மூன்று மாதம் கழித்து, அரியலூர் ரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அப்போது சாஸ்திரி உறுதியாகப் பதவி விலகினார். அரசியல் சாசன முறைமைக்கு இது, ஒரு முன்மாதிரி என்று நேரு கூறினார்.
  1957 தேர்தலுக்குப் பின், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், பின்பு, வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். 1962 இல் உள்துறை அமைச்சரானார். 1964 மே 27 இல் நேரு மறைந்ததையடுத்து, 14 நாட்கள்
  குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தார். 1964 ஜுன் 9ஆம் தேதி இந்தியாவின் இரண்டாவது பிரதமராக சாஸ்திரி பதவியேற்றார். நாட்டில் பஞ்சம், பாகிஸ்தான் போர், சீனா அச்சுறுத்தல் என இவர் பதவி வகித்த 18 மாதங்களும் மிகுந்த சவால் நிறைந்தவை.
  தாஷ்கண்ட் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்குச் சென்றபோது அவ்விடத்திலேயே 1966 ஜனவரி 11ஆம் நாள் சாஸ்திரி மரணம் அடைந்தார்.
  "இந்திய விடுதலைப் போராட்டம்' என்ற நூலை எழுதிவந்த சாஸ்திரி அதை முற்றும் முடிக்காமலேயே மறைந்தார். அவர் மறைவுக்குப்பின் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான "பாரத் ரத்னா' விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  எத்தனையோ பதவிகள் வகித்த அந்த மாமனிதருக்குச் சொந்தவீடு கிடையாது. அவர் சொந்தமாக வாங்கிய காருக்கு மாத தவணை கட்டிவந்தார். அந்த தவணையும் கடைசியில் பாக்கி இருந்தது. காந்தி பிறந்த அக்டோபர்-2ஆம் தேதி பிறந்து, காந்திஜியின் சீடராகவே வாழ்ந்து மறைந்த சாஸ்திரியின் உடல் காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
  பேரன், பேத்தி: கண்ணீர் வருகிறது பாட்டி... இனி காந்தி ஜெயந்தி கொண்டாடும்போது, சாஸ்திரிக்கும் ஒரு விளக்கு ஏற்றிவைப்போம்...!
  பாட்டி: நல்லது கண்மணிகளே.....!

  -ரவி

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai