Enable Javscript for better performance
இளமையில் வெல்! யுஸ்ரா மர்தினி (YUSRA MARDINI)- Dinamani

சுடச்சுட

  
  s14

  வெற்றிக் கோட்டின் எல்லையை மிகச் சில நொடிகளில் இழந்தார். ரியோ ஒலிம்பிக்ஸில் இந்த வீராங்கனை பதக்கம் வெல்ல முடியவில்லை! ஆனால்.....
   
   இவர் சாதனையாளர்களுக்கெல்லாம் சாதனையாளர் ஆவார்!
   ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரரும் ஒரு குறிப்பிட்ட நாட்டை, ஒரு குறிப்பிட்ட கொடியைத் தமது அடையாளமாகக் கொண்டிருப்பர்!
   ஆனால் "யுஸ்ரா மர்தினி'க்கோ சொந்த தேசமுமில்லை! கொடியுமில்லை!..., காரணம்....
   
   ... இவர் ஒரு அகதி!
   சிரியாவில் பிறந்து வளர்ந்த யுஸ்ரா மர்தினி ஒரு தலை சிறந்த நீச்சல் வீராங்கனை! ஆனால் அங்கு ஏற்பட்ட போர் இவரது கனவுகளை சிதைத்தது! போருக்கு பயந்து சிரிய மக்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தஞ்சம் புகுந்தனர். யுஸ்ராவின் பிற உறவினர்கள் எப்படியோ ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றனர். ஆனால் யுஸ்ராவும் அவரது மூத்த சகோதரியும் மட்டும் சிரியாவில் தங்க நேரிட்டது!

   அவர்களும் எப்படியோ டமாஸ்கஸ், பெய்ரூட், லெபனான், துருக்கி, ஆகிய நகரங்கள் வழியாக கிரீஸ் நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து கடல் வழியாகப் பயணம் செய்து செர்பியா, ஹங்கேரி, வழியாக ஜெர்மனிக்குச் சென்று விடலாம். இது அவர்கள் திட்டமாக இருந்தது.

   கிரீஸின் கடற்கரைப் பகுதியில் அவர்கள் ஒரு சிறு படகில் பயணம் செய்தனர். 6 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய படகில் 20 பேர் பயணம் செய்தனர். நடுக்கடலில்..... சென்று கொண்டிருந்த பொழுது....,
   
   .....படகின் எஞ்சின் நின்று விட்டது!
   யுஸ்ரா, அவரது சகோதரி மற்றும் மேலும் இரு ஆண்களுக்கு மட்டுமே நீச்சல் தெரியும்! எனவே அவர்கள் துணிந்து ஒரு முடிவு எடுத்தனர்!
   
   கடலில் நீந்தியபடியே படகைத் தள்ளிச் செல்வது என்று!!
   பனியில் விறைக்கச் செய்த தண்ணீரில் நீந்த முடியவில்லை! யுஸ்ராவின் சகோதரியும், மற்ற இரண்டு ஆண்களும் தமது முயற்சியைக் கைவிட்டுப் படகில் ஏறி அமர்ந்து கொண்டனர்! ஆனால் யுஸ்ரா, ""நீச்சல் பயிற்சி செய்ய இதை விடச் சிறந்த தருணம் எனக்குக் கிடைக்காது!'' என்று கூறியபடியே தொடர்ந்து படகைக் கைகளால் தள்ளிக்கொண்டே நீந்தினார்!
   
   சில்லென்றி நீரில் தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி 19பேரின் உயிரைக் காப்பாற்றியபோது அவருக்கு 17வயது மட்டுமே!

   பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு கடல் வழிப் பயணம் படகில் மேற்கொள்ள நேரிட்டது! இந்த முறை அவர் "ஏஜியன்' கடலைக் கடக்க வேண்டியிருந்தது!

   இந்த முறை துன்பம் கடற்காற்று வடிவில் தொடர்ந்தது! அலைகளால் அவர்கள் பயணம் செய்த படகில் நீர் உட்புகுந்தது! படகின் பாரத்தைக் குறைக்க யுஸ்ராவும், அவரது சகோதரியும் நீரில் குதித்தனர்! லெஸ்பாஸ் என்ற கிரேக்கத் தீவை அடையும் வரை படகின் பக்கவாட்டுப் பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

   பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியை அடைந்து தமது உறவினர்களுடன் ஒன்று சேர்ந்தனர். யுஸ்ராவின் இந்தப் பயணம் பிரமிப்பாக இருக்கிறது அல்லவா? எகிப்திய மொழி தெரிந்த ஜெர்மானியர் ஒருவர் உதவியுடன் உள்ளூர் நீச்சல் கிளப்பில் பயிற்சி செய்தார் யுஸ்ரா!

   திறமை வாய்ந்த வெவ்வெறு நாட்டு அகதிகள் (சிரியா, தெற்கு சூடான், எத்தியோப்பியா, காங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர்) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக் குழுவினரால் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது "அகதிகள் குழு' (REFUGEES TEAM) என்று அழைக்கப்பட்டது. ஜெர்மனியின் ஆதரவில் சென்ற யுஸ்ரா, 50 மீட்டர் நீளமே கொண்ட நீச்சல் குளத்தைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார்.

  சிரியாவிலிருந்து தப்பிக்க கடுங்குளிரில் அவர் நீந்திய மத்திய தரைக்கடலும், ஏஜியன் கடலும் அவர் மனக்கண் முன் தோன்றின. அந்த பிரம்மாண்டத்தின் முன் இந்த நீச்சல் குளம் மிகவும் சிறியதுதான்! இருப்பினும் பதக்கம் வெல்ல முடியவில்லை! வெற்றிக் கோட்டின் எல்லையை மிகச் சில நொடிகளில் இழந்தார்.

   இருப்பினும் சர்வதேச ஊடகங்கள் 18 வயது யுஸ்ராவையே "உண்மையான வீராங்கனை' எனப் புகழாரம் சூட்டின. ஆர்வமும், விடாமுயற்சியும் கொண்ட ஒருவரை எதுவும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ""2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கட்டாயம் பதக்கம் வெல்வேன்!'' என்கிறார் இவர்!

   வாழ்க்கையிலேயே எதிர் நீச்சலடித்தவர் ஆயிற்றே! அவரது கனவு நிறைவேறட்டும்! வாழ்த்துவோம்!
   
   என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
   கடுவெளி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai