Enable Javscript for better performance
என்றும் வாழ்பவர்!- Dinamani

சுடச்சுட

    
    s7

     அப்துல் கலாம் போல் ஒருவர் பிறக்க முடியுமா?
     அன்பு காட்டும் பண்பினிலே சிறக்க முடியுமா?
     அப்பா அம்மா சொன்னபடி நடக்க முடியுமா?
     ஆற்றலுள்ள தலைவராக விளங்க முடியுமா?
     
     கடலில் செல்லும் ஏழையாக மண்ணில் பிறந்தவர்!
     கருத்து மழை பொழிகின்ற மேதை ஆனவர்!
     உடல் பொருள் ஆவியெல்லாம் நாட்டுக்காகவே -என
     ஓயாமல் தொண்டு செய்து உயர்ந்து நின்றவர்!
     
     மாணவர்கள் அணி வகுத்தால் மாற்றம் வந்திடும்!
     மலைகளையும் தாண்டுகின்ற ஆற்றல் வந்திடும்!
     ஆணவத்தை நீக்கிவிட்டால் அன்பு மலர்ந்திடும்!
     அனைவருக்கும் பாடுபடும் எண்ணம் வந்திடும்!
     
     கனவு காணு! கனவு காணு! மேன்மை காணவே!
     கண்ணியத்தைக் கடைப்பிடிப்பாய் காலம் முழுதுமே!
     தினந்தினமும் திட்டம்போடு உலகில் உயரவே!-என்று
     திசை காட்டியாக வாழ்ந்தார் இளைஞர் நடுவிலே!
     
     வானத்திலே அக்கினியின் சிறகை விரித்தவர்!
     வரலாற்றை ஏவுகணைத் தளத்தில் படைத்தவர்!
     மண்மீதில் மரங்கள் நட்டு வளத்தைச் சேர்த்தவர்!
     மாணவரின் எதிர்காலம் மனதில் நினைத்தவர்!
     
     என்றென்றும் எளிமை தன்னைப் போற்றி வாழ்ந்தவர்!
     ஏற்றமிகு பதவியிலும் பணிவு கொண்டவர்!
     அன்றன்று புதுமைகாணும் வேட்கை உள்ளவர்!
     ஆற்றல்களைத் தூண்டி அதை வளரச் செய்தவர்!
     சொத்து சுகம் விரும்பாத தூய நெஞ்சினர்!
     சொத்து என்றால் புத்தகங்கள்...சேர்த்து மகிழ்ந்தவர்!
     வித்தாக இம்மண்ணில் மறைந்து போனவர்!
     மாமனிதர் அப்துல் கலாம் என்றும் வாழ்பவர்!
     
     உலகுக்கு உங்கள் செய்தி என்ன சொல்லுவீர்!
     உத்தமராம் காந்தியினைப் பலரும் கேட்டனர்!
     "என் வாழ்வே என் செய்தி' என்று சொன்னாரே!
     இனியவர் நம் கலாமுக்கும் இது பொருந்துமே!
     
     -பூதலூர் முத்து
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai