Enable Javscript for better performance
கருவூலம்: தேக்கடி- Dinamani

சுடச்சுட

  
  s2

  கண்ணைக் கவரும் இயற்கைச் செழுமை! பெரியாறு என்ற ஆற்றின் வளமையால் பச்சைப் பசேல் என்று சூழல்! இவற்றால் தேக்கடி சுற்றுலாக்காரர்களைக் கவர்ந்து இழுக்கிறது. இந்தச் சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 900 மீ முதல் 1800 மீ உயரத்தில் 673 சதுர கி.மீ பரப்பளவிற்கும் அதிகமாக விரிந்து பரந்து கிடக்கிறது. படகுச் சவாரிக்கு மிகவும் ஏற்ற இடம்! அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. யானை, காட்டெருது, சாம்பர் மான், குரங்குகள், காட்டுக் கரடி, போன்ற வனவிலங்குகûக் காண முடியும். புலிகள் உலவுவதைக் காணமுடியும். காட்டெருமைகள் மூர்க்கமானவை. ஆகலே அவற்றைப் பார்த்தால் மறந்தும் அதன் அருகே போய்விடவேண்டாம். அதற்குப் பிடிக்காத எந்திரப் படகு சப்தம் கேட்டால் அவை மிரண்டு ஓடிவிடும்!

  குமுளி
   தேக்கடியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் இருக்கிறது குமுளி. தேக்கடியுடன் பின்னிப் பிணைந்த இந்த மலைக்கோட்ட நகரம் பெரியாறு சரணாலயத்தின் புற எல்லையில் அமைந்துள்ளது. குமுளி ஒரு முக்கியமான கடைக்கண்ணி மையம் மற்றும் வாசனைத் திரவிய வர்த்தக மையமுமாகும். பெரியாறு வட்டாரத்தில் பிரதான பேருந்து நிலையமான குமுளியில் நடுத்தர வாடகை வசிப்பிடங்கள் நிறைய உள்ளன.

  சரணாலய காட்சிக் கோபுரம்
   எடப்பாளையம் மற்றும் மணக்காவலா ஆகிய இரண்டு இடங்களையும் சேர்த்து இந்த வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு காட்சிக் கோபுரங்கள் உள்ளன. அனுமதிக்கு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  செல்லார் கோயில்
   குமுளியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அமைதியான கிராமத்தில் இருந்து கீழே பார்த்தால் நாட்டுப்புறக் காட்சிகளின் அழகு தெரியும். அலை அலையாகக் கொட்டும் அருவிகள், நமது கண்களுக்கு விருந்து. இந்தக் கிராமத்தின் கீழ் புறத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னந்தோப்புகளுக்குப் புகழ் பெற்ற கம்பம் இருக்கிறது.

  மலையேற்றம்
   தேக்கடியில் மலைப்பயணம் செய்வதற்கான முக்கிய இடங்களான குமுளிக்கு அருகே உள்ள குரிசு மலை புல்லு மேடு, குமுளியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒட்டகதலமேடு, வண்டிப்பெரியாறு அருகே கிரம்பி, தேக்கடி படகுத்துறை, நெல்லிகாம்பட்டி பகுதி மற்றும் மனக்காவெளவு ஆகும். தினசரி மலை ஏற்ற ஏற்பாடுகளை வனத்துறை செய்கிறது.

  தொல்குடி அருங்காட்சியகம்
   பெரியாறு பிராந்தியத்தில் ஐந்து வகை தொல்குடி மக்கள் வாழ்கிறார்கள். இக்குடிகளின் குடியிருப்புகளை நீங்கள் காண சுற்றுலா செல்லும்போது தொல்குடி அருங்காட்சியகத்தில் மரபான தொல்குடி மீன்பிடிப்பு உபகரணங்கள், வேட்டைக் கருவிகள், மற்றும் பயன்படுத்தும் மூலிகைகள் போன்றவற்றைக் காணலாம். அதோடு சுமார் 2மணி நேரம் நடக்கும் தொல்குடி மக்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம். நுழைவுக் கட்டணம் உண்டு. நேரம் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை.

  பாண்டிக்குழி
   குமுளியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஓவிய வண்ணமாய் தோற்றம் தரும் இங்கு பூக்களும் கனிகளும் பூரித்துக் கிடக்கின்றன. இவைகளோடு சேலாறு கோயிலுக்கும் தமிழக எல்லைக்கும் இடையே சலசலத்து ஓடும் நீரோடைகளும், சேர்ந்து பாண்டிக்குழியை பிரபலமான சுற்றுலா இடமாக ஆக்கியுள்ளன. புகைப்படக்காரர்கள் இந்த இடத்தைக் கண்டால் திரும்பி வர விரும்ப மாட்டார்கள். இங்கு மலை ஏற்றமும் செய்யலாம்.

  புல்லுமேடு
   தேக்கடியில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் பெரியாறில் இருந்து 26 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. புல்லுமேடு மலை நகரம். பெரியாறு ஆற்றுடன் சேர்ந்த இந்த நகரத்திற்குப் பயணம் செய்யும்போதே சுற்றுப்புறத்தின் பசுமையும், குளுமையும் கிளர்ச்சி கொள்ளச் செய்யும். வெல்வெட் விரித்த மாதிரி புல்வெளிகள், அபூர்வ மலர்களைப் பார்த்துக் களிக்க வேண்டுமென்றால் ஜீப் பயணம்தான் ஏற்றது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலையும் மகரஜோதி ஏற்றும் காலமாயிருந்தால் அதன் சுடரையும் இங்கிருந்து காண முடியும்! புல்லு மேடு காட்டிலாகா கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுத்தான் இங்கு செல்ல முடியும்!

  பெரியாறு வனவிலங்கு சரணாலயம்
   உலகின் பிரமிக்க வைக்கும் இயற்கை வனவிலங்குகள் சரணாலயங்களில் ஒன்று இது! வனவிலங்குகள், காட்சிச் செழுமை ஆகியவற்றிற்குப் புகழ் பெற்றது. தேக்கடி முல்லைப் பெரியாறு புலிகள் காப்பகம்' உலகச் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியது! இந்த வனவிலங்கு சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவு 777 சதுர கி.மீ! இதில் புலிகள் காப்புக் காடு மட்டும் 360 ச.கி.மீ அளவில் பரந்து விரிந்து பசுமையுடன் காணப்படுகிறது. இடுக்கி நீர்மின் திட்டம் 26 ச.கி.மீ தூரத்திற்கு செயற்கை ஏரி உருவாக்கியுள்ளதால் அதில் படகு சவாரி செய்ய முடியும்! அதற்கு வேண்டிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. படகில் பாதுகாப்பாக இருந்து கொண்டு காட்டு யானைகளை நெருக்கத்தில் காணலாம்! அவற்றைப் புகைப்படமும் எடுக்கலாம்!

  மங்களா தேவி கோயில்
   தேக்கடியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மறைவாக மலை உச்சி ஒன்றில் இந்தப் பழமையான கோயில் உள்ளது! கடல் மட்டத்திற்கு 1337 மீ உயரத்தில் உள்ளது! கேரளக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது! கேரள மக்கள் இக்கோயில் தெய்வத்தை மங்களாதேவி என்று அழைக்கிறார்கள்! என்றாலும் இப்பகுதியில் வாழும் தமிழர்கள் இதை கண்ணகி கோயில் என்றே கூறுகிறார்கள். சித்ரா பெüர்ணமித் திருவிழா அன்று மட்டுமே இக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்!
   உச்சியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கிழக்கு பாகங்களையும், தமிழகத்தின் சில மலை கிராமங்களையும் காணலாம். இங்கு செல்ல தேக்கடி வனவிலங்கு காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

  முல்லைப் பெரியாறு அணை!
   பிரிட்டிஷ் ஆட்சியில் 1895இல் கட்டப்பட்ட அணை இது! ஆற்றின் குறுக்கே உள்ள இந்த அணை தேக்கடியின் சதுப்பு நிலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது. அணைக்கட்டின் உயரம் 175அடி. நீளம் 5704அடி. உண்மையில் தமிழகத்தின் நெல் சாகுபடிக்கும், வறட்சி நிலையைப் போக்கவும் இந்த அணை கட்டப்பட்டது.

  முரிக்கடி
   தேக்கடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்தின் காற்றே வாசனைத் திரவியங்களின் மணத்தோடுதான் வீசும்! அந்த அளவு சுற்றுப்புறமெங்கும் ஏலக்காய், மிளகு, காபித் தோட்டங்கள் அதிகமாகக் காணப்படும் இடம் இது!

  யானைச்சவாரி
   காட்டு வழியே யானைச்சவாரி செல்வதற்கான வசதிகளை தேக்கடி வனத்துறை அலுவலகம் ஏற்பாடு செய்து வைத்துள்ளது. நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. வனவிலங்கு தகவல் நிலையத்தில் சவாரி அனுமதிச் சீட்டு கிடைக்கும்.

  பெரியாறு ஏரி உல்லாசப் படகு சவாரி
   தேக்கடியில் இருந்து இந்த உல்லாசப் படகு சவாரி தொடங்குகிறது. தினசரி படகு சவாரி மற்றும் உல்லாசப் பயணப் படகு ஏற்பாடுகளுக்கு வனத்துறை மற்றும் கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

  லண்டன் மேடு
   குமுளியில் இருந்து 25 கி.மீ. தூரம் உலகின் மிகப் பெரிய ஏலக்காய் சந்தைகளில் ஒன்று இது. இங்குள்ள ஏலக்காய் தோட்டத்தில் நீங்கள் நடந்து சென்றால் நீங்களே மணம் வீசுவீர்கள்!

  வண்டிப் பெரியாறு
   தேக்கடியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. வண்டிப்பெரியாறு.நகருக்கு நடுவில் ஓடி தேயிலை, காபித் தோட்டங்களுக்கு நீரை வழங்குகிறது. பெரியாறு பிரதான வர்த்தக மையமாக உள்ள வண்டிப்பெரியாறில் பல தேயிலை நிறுவனங்களும் உள்ளன. அரசு விவசாயப் பண்ணை மற்றும் பூந்தோட்டத்தில் பலவகை ரோஜாச் செடிகள் மற்றும் அபூர்வ மலர்ச் செடிகள் உள்ளன!
   
   திருமலை, வேளச்சேரி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai