Enable Javscript for better performance
பந்த பாசம்!- Dinamani

சுடச்சுட

    
    s9

    "ஏங்க! இப்படியே நீங்க பேப்பர் படிச்சிக்கிட்டே உட்கார்ந்து இருங்க. ஊருக்குப் போயிருக்கிற நம்ம் பாபு இங்கே வரணும், வரணும்ன்னு துடிக்கிறானாம். ""என்னை எங்க வீட்டிலே கொண்டுபோய் விடுங்கன்னு நச்சரிக்கிறானாம்.....,அங்கு போன சிலநாள் நல்லா சாப்பிட்டு, டி.வி. பார்த்துக்கிட்டு நல்லாத்தான் இருந்திருக்கிறான். திடீர்னு சில நாளா "அம்மா, அப்பாவைப் பார்க்கணும்...,தம்பி, அக்கா ஞாபகமாவே இருக்கு'ன்னு சரியா சாப்பிடாம உம்முனு இருக்கிறானாம். இப்ப ஒரு தடவை உங்க சித்தப்பா போன் செய்தார். பாபுவை எப்பப் போய் அழைச்சுக்கிட்டு வரப் போறீங்க?'' என்றாள் சுப்பையாவின் மனைவி காந்திமதி.

    பேப்பரை மடித்து மேஜை மேல் போட்டவர், மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேல் துண்டால் துடைத்து வைத்து விட்டு, ""புல்லு கண்ட இடத்திலே மாடு மேயாதாம்..., அங்கு அவனுக்கு என்ன குறைச்சல்?...., இங்கே வந்து அக்கா, தம்பி கூட சண்டை போட்டுக்கிட்டு ரேஷன் அரிசிச் சோறும் பழையதும்தான் சாப்பிட அவனுக்குப் பிடிச்சிருக்கு போல இருக்கு.......பள்ளி விடுமுறைநாட்கள்தானே என, என் சித்தப்பா வற்புறுத்திக் கூப்பிட்டதாலே பாபுவை அவர் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். பள்ளிக்கூடம் லீவு முடிய இன்னும் சில நாள் இருக்கு. அதற்குள் அவனுக்கு அவசரம். நாளைக்கே போய் அவனை அழைச்சிக்கிட்டு வர்றேன். போன் வந்தால் நாளைக்கு வர்றேன்னு சொல்லிடு'' என்று சொல்லிவிட்டுச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சற்றே கண்ணயர்ந்தார். சொன்னபடியே மறுநாள் போய் பாபுவை அழைத்து வந்து விட்டார்.

    பாபுவின் அம்மா, ""ஏண்டா பாபு! தாத்தா பாட்டி எல்லாம் உன் மேல எவ்வளவு பாசமா இருக்காங்க...நம்ம வீட்டிலே ரேஷன் அரிசிச் சாதம்...,அவுங்க வீட்டிலே பொன்னி அரிசிச் சாதம், தினம் ஒரு பலகாரம், டி.வி. பார்க்கலாம்...இங்கே அப்படி என்ன இருக்குன்னு, "ஊருக்குப் போகணும்...,ஊருக்குப் போகணும்'னு அடம் பிடிச்சியாம்.''என்றாள்.

    தாத்தா கொடுத்திருந்த தின்பண்டம், விளையாட்டு சாமான் எல்லாம் அக்கா,தம்பிக்கு எடுத்துக் கொடுத்தவன், ""அம்மா நம்ம வீட்டில் ரேசன் அரிசி சாப்பாடுதான், எப்பவோ ஒரு தடவை பலகாரம், தினமும் பழைய சாதம்தான். அங்கே தினம், தினம் விதவிதமான பலகாரம், தின்பண்டங்கள், டி.வி.யில் பொம்மை படம் பார்க்கலாம்.

    தாத்தா, பாட்டி எல்லோருமே என்மேல் ரொம்பவும் பாசமாத்தான் இருந்தாங்க...நானும் அங்கு போன சிலநாள் சந்தோஷமாகத்தான் இருந்தேன்...அப்புறம்?...''
    "அப்புறம் என்னடா?''என்றாள் பாபுவின் தாய்.

    "அக்கா, தம்பி இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நான் மட்டும் நல்ல சாப்பாடும்,விதவிதமான தின்பண்டங்களும் சாப்பிட எனக்கு பிடிக்கலேம்மா...அப்படியே இருந்தாலும் இன்னும் எத்தனை நாளைக்கு?....., பள்ளிக்கூடம் திறந்தவுடன் இங்கேதானே வரணும். பழையபடி நம் வீட்டுச் சாப்பாடுதானே?...., உங்களை எல்லாம் விட்டுவிட்டு நான் மட்டும் அங்கே சுகமா நல்லா சாப்பிட்டு டி.வி. பார்த்துக்கிட்டு இருக்கிறது எனக்குப் பிடிக்கலேம்மா...., பழைய சாதமே ஆனாலும் அதை அக்கா, தம்பி, உன்னுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களோட விளையாடிக்கிட்டு இருக்கிற சுகத்தைத் தவிர அங்கு எதுவுமே எனக்கு பெரிசா தெரியலேம்மா''என்றான்.

    பாபுவிடமிருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட அவன் தாய், தன் மகனின் குடும்ப பாசத்தை எண்ணிக் கண்ணில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டவள், அவனைப் பாசமுடன் அணைத்துக் கொண்டாள்.
     
     
     -பி.கே. நவீன்
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai