மரங்களின் வரங்கள்!

நான் தான் புன்னை மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் கேலோபில்லம் இனோபில்லம் என்பதாகும். தமிழ் இலக்கியங்களில் என் பெருமை வெகுவாகப் பேசப்படுகிறது
மரங்களின் வரங்கள்!

புன்னைமரம்!
 என்ன குழந்தைகளே
 நலமாக இருக்கிறீர்களா ?
 
 நான் தான் புன்னை மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் கேலோபில்லம் இனோபில்லம் என்பதாகும். தமிழ் இலக்கியங்களில் என் பெருமை வெகுவாகப் பேசப்படுகிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகளான நெய்தல் நிலத்தின் அடையாளமாகவே நான் இருக்கேன். நான் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தோடு இரண்டற கலந்தவன். நான் அனைத்து வகை மண்களிலும், ஈரமான இடங்களிலும் செழித்து வளரும் தன்மையன். தேனீக்கள் மற்றும் பறவைகளின் புகலிடமாக நான் இருக்கேன்.
 என்கிட்டே மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பாதாலேயே என் அருகில் நீங்கள் நின்றாலே நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் இருக்கிறது.
 என்னுடைய இலைகள் அளவில் பெரியதாக, பசுமை வண்ணத்தில் பொலிவாகக் காணப்படும். என்னுடைய இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் மரப்பட்டைகள் அனைத்து சிறந்த மருத்துவப் பயன்கள் தர வல்லவை. கடும் கோடைக்காலத்திலும் என்னுடைய இலைகள் வறண்டு காய்ந்து போகாமல் வருடம் முழுவதும் பசுமையான இலைகளுடன் பச்சைப் பசேல் என அடர்ந்த கிளைகளுடன் உங்களுக்கு நிழல் தரும் மரமாக இருப்பேன். என்னுடைய மலர்களிலிருந்து வரும் அற்புத நறுமணம் காற்றில் கலந்து அந்தப் பகுதியையே மணமிக்கதாக மாற்றிடும்.
 குழந்தைகளே, என் நிழலில் நீங்கள் சற்று நேரம் அமர்ந்தாலும் நான் வெளியிடும் காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனால் சுவாசம் வளமாகி, மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு பெற ஒரு வாய்ப்பாக அமையும்.
 நெடுஞ்சாலைகளிலும், நகரச் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் நிழலுக்காகவும், பசுமை வண்ண இலைகளின் செழுமைக்காகவும் என்னை இப்போது வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
 குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, பிரச்சித்த பெற்ற தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளன ஊர், புன்னை மரங்களை நிறைந்த சோலைவனமாக இருந்ததால் பண்டைய காலத்திலிருந்து அந்த ஊர் புன்னைநல்லூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
 நான் வியாதிகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், பருவநிலையில் ஏற்படக் கூடிய மாறுபாடுகளையும் முன்கூட்டியே உணர்த்த வல்லவன். என் மரத்தில் மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்கினால் இன்னும் சில நாட்களில் நிச்சயம் மழைப் பொழிவு உண்டு என்பது திண்ணம். புயல் அடித்தாலும் சாய்ந்திடாத மரமாகவும், பூச்சி, கரையான்கள் அரிக்க முடியாத உறுதியான மரமாக விளங்குவதால் நான் படகுகள் கட்டவும், வீடுகளில் மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறேன். கண் வலி, எரிச்சல் ஏற்பட்டால் என் இலைகளை சற்று நேரம் நீரில் இட்டு பின்னர் அந்த நீரில் கண்களை அலசி வர கண் பாதிப்புகள் சரியாகும். என் இலைகளை நன்கு அரைத்து நெற்றியில் பற்று போல தடவி வந்தால் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் பாதிப்புகள் விலகும். மேலும், என்னிடமிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தடவி வந்தால் நாள்பட்ட சொறி, சிரங்கு போன்ற புண்களைப் போக்குவேன். "புன்னை கைவிடாது என்னை' என்று என்னைக் கூறுவர்.
 சென்னை, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் வடக்கு வெளிபிரகாரத்தில் தலவிருட்சமாக நானிருக்கிறேன். அதனருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் அருள்புமிகு விருத்தபுரீசுவரர் திருக்கோவிலிலும் நான் தலவிருட்சமாக இருக்கேன். என்னுடைய ராசி மீனம், நட்சத்திரம் ஆயில்யம், என் தமிழ் ஆண்டு கீலக. மரங்களிருந்தால் பூமி பசுமையாகும், உயிரினங்கள் மகிழ்ச்சியாகும். நன்றி குழந்தைகளே !
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com