Enable Javscript for better performance
கருவூலம்: விருதுநகர் மாவட்டம்- Dinamani

சுடச்சுட

  
  sm6

  1985 இல் ராமநாதபுரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் விருதுநகர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. முதலில் கர்மவீரர் காமராஜர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு பின் அரசு ஆணைப்படி விருதுநகர் மாவட்டம் ஆனது. 

  4243 ச.கி.மீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடிமற்றும் திருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கே கேரள மாநிலமும் சூழ்ந்துள்ளன.

  நிர்வாக வசதிக்காக அருப்புக்கோட்டை, காரியப்பட்டி, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, மற்றும் விருதுநகர் என 8 வட்டங்களாகப் (தாலுக்கா)பிரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர்தான் மாவட்டத்தின் தலைநகரம். ஆனாலும் ராஜபாளையம்தான் பெரிய நகரமாகத் திகழ்கிறது. இதன் எல்லைக்குள் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 

  விருதுநகரின் வரலாறு!
  விருதுநகர் கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. முன்பு இவ்வூர் "விருதுகள் வெட்டி' என்ற காரணப்பெயரில் அழைக்கப்பட்டு 1875 இல் விருதுப்பட்டி என மாறியது. பின் 1923 இல் விருதுநகர் என்று ஆனது. மன்னராட்சி காலத்தில் விருதுநகர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்கால பாண்டியர்களின் ஆட்சிப் பகுதியாகவே பலகாலம் இருந்துள்ளது. 
  இவர்களின் வீழ்ச்சிக்குப் பின் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான நயக்கர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
  விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது, நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது. 1736 இல் இவர்களின் அதிகாரமும் முடிவுக்கு வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சந்தா சாகிப், ஆற்காடு நவாப் மற்றும் முகம்மது யூசுப்கான் ஆகியோர் பலமுறை தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள். 
  1801 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இப்பிரதேசம் வந்தபின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தபின், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 

  மலை வளமும், நீர் வளமும்!
  மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் சில பகுதிகள் விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ளன. இங்குள்ள பேய்மலை, மொட்டைமலை, கொட்ட மலை உள்ளிட்ட சில குன்றுகள் 1700 மீ. உயரம் வரை உயரம் உள்ளன. 
  புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமான சதுரகிரி மலை இங்குதான் உள்ளது. அர்ஜுனா ஆறு, வைப்பாறு, கெüசிக ஆறு, குண்டாறு என பருவகால சிற்றாறுகளே இம்மாவட்டத்தின் முக்கிய நதிகளாக உள்ளன. இவையே பல கிளைகளாகப் பிரிந்து ஓடைகளாகவும், வளம் சேர்க்கின்றன.

  வனவளம்! 
  மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 6 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இவ்வனங்களில் 275 க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் கண்டறியப்பட்டுள்ளது. 

  செண்பகத்தோப்பு சாம்பல் அணில் சரணாலயம்!
  ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மலைத்தொடரின் வனப்பகுதியே செண்பகத் தோப்பு வனம்! இங்குள்ள குன்றுகள் 100 மீ முதல் 2000 மீ. வரையிலான வேறுபட்ட உயரத்தில் உள்ளன. இங்கு அழகிய சுமார் 75 செ.மீ. நீளமுள்ள அரிய வகை சாம்பல் நிற அணில்கள் வாழ்கின்றன. இவற்றைப் பறக்கும் அணில்கள் என்றும் அழைப்பர். சுமார் 480 ச.கி.மீ பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது! 
  இந்த வனத்திற்கு தென்மேற்கில் பெரியார் புலிகள் சரணாலயமும், வடமேற்கில் மேகமலை சரணாலயமும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இதனால் பல வகை விலங்கள் இடம் பெயர்கின்றன. எனவே இங்கு யானை, சிறுத்தை, சிங்கவால்குரங்கு, புள்ளிமான்கள், கடமான், நீலகிரி குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகளைக் காணலாம்! 100 க்கும் மேற்பட்ட பறவையினங்களும், பலவகைப்பட்ட ஊர்வன, மற்றும் பூச்சியினங்களும் காணப்படுகின்றன. 
  இவ்வனப்பகுதியில் சில அருவிகளும், நீரோடைகளும், உள்ளன. செண்பகத் தோப்பு மீன் வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சியும், அழகர் கோயில் பள்ளத்தாக்கும் சுற்றுவட்டாரத்தில் பிரபலமான சுற்றுலாத்தலங்கள். இங்குள்ள காட்டழகர் கோயிலும் பிரசித்தி பெற்றதே. 

  விவசாயம்!
  மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 37 சதவீதம் நிலம் விவசாயம் நிலமாக உள்ளது. உழைக்கும் மக்களில் சுமார் 52 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே செய்கின்றனர். 
  கரிசல் மண் பூமி என்பதால் பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், திணை போன்ற சிறுதானியங்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. கிணற்றுப் பாசனப் பகுதிகளில் நெல், கரும்பு, போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தவிர அவுரிச்செடி. மிளகாய், மல்லிகை, வெற்றிலை போன்றவையும் முக்கிய விளைபொருட்கள்! 

  தொழில் வளம்!
  தமிழகத்தின் தொழில் துறையில் முன்னேற்றமடைந்த மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று! இங்குள்ள சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், பகுதிகள் முக்கியமான தொழில் மற்றும் வணிக மையமாகத் திகழ்கிறது. 
  விருது நகர் மாவட்டம், தீப்பெட்டி உற்பத்தி, பட்டாசு தாயாரித்தல், அச்சுத் தொழில், ஆகியவற்றில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. 

  சிவகாசி 
  முக்கிய தொழில் நகராகும். "குட்டி ஜப்பான்' என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்ட நகரம். சிவகாசி கரிசல் மண் கூடிய கந்தக பூமி! தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் இங்கு தொடங்கப்பட்டது. தற்போது சிறியதும், பெரியதுமாக சுமார் 750 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. சுமார் 2 லட்சம் பேர் இத்தொழில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு இங்கு 5000 கோடி ரூபாய் அளவுக்கு இங்கு பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. மேலும் காகிதத்தொழில், தீப்பெட்டி, லேமினேஷன், வெடிமருந்து, ரசாயன உற்பத்தி, உள்ளிட்ட பல வகைத் தொழில்கள் நடைபெறுகின்றன. 

  சிவகாசி அச்சுத் தொழில்!
  நூற்றுக்கணக்கில் லித்தோ அச்சகங்களும், ஏராளமான ஆப்செட் அச்சகங்களும் சிவகாசியில் உள்ளன. இந்திய அளவில் 60 சதவீதம் அச்சுத்தொழில் இங்குதான் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே பெரிய அளவில் காலண்டர்களும், இந்திய அளவில் தயாராகும் டைரிகளில் 30 சதவீதம் டைரிகளும், சுமார் 100 கோடிக்கு நோட்டுப் புத்தகங்களும் இங்கு தயாராகின்றன. உப தொழிலாக அச்சு மை, அச்சுக் கருவிகளின் உபரி பாகங்கள் வியாபாரமும் நடைபெறுகிறது. மேலும் காகிதக் கழிவுகளில் வைக்கோல் சேர்த்து அட்டைப்பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. 

  விருதுநகர்!
  உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மிளகாய், பருப்பு வகைகள், மலைத்தோட்ட விளைபொருட்கள், விற்பனை பெரிய அளவில் நடைபெறுகின்றன. உணவுப் பொருட்களுக்கு இங்குதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

  ராஜபாளையம்! 
  மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அருகில் அமைந்துள்ள ராஜபாளையம் ஒரு தொழில் நகரம்! நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது! சுமார் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் இங்குள்ளன. அருப்புக்கோட்டையில் உள்ள ராமலிங்கா ஸ்பின்னிங் மில்தான் ஆசியாவின் இரண்டாவது நூற்பாலை! சாதாரண துணிவகைகள் தவிர மருத்துவமனைகளுக்குத் தேவையான சர்ஜிக்கல் காட்டனும், பேண்டேஜ் காட்டனும் இங்கு தயாரிக்கப்படுகிறது. ஆசிய அளவில் பேண்டேஜ் தயாரிப்பில் சிறப்பு பெற்றுள்ளது. 
  இவை தவிர இரண்டு சிமென்ட் தொழிற்சாலைகளும், சூலக்கரையில் தொழிற்பேட்டையும், ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட் தயாரிக்கும் தொழிற்சாலையும் இங்குள்ளன. 
  வறண்ட மாவட்டம் என்ற போதிலும் விருது நகர் தொழில் சிறப்பு மிக்க மாவட்டம்! 

  புகழ் பெற்ற பழமையான ஆலயங்கள்!
  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்!
  108 திவ்ய தேசங்களுள் ஒன்று! மிகவும் பழமையான ஆலயம். இக்கோயில் வடபத்ரசாயனார் கோயில் மற்றும் ஆண்டாள் கோயில் என இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இங்கு வடபத்ரசாயனார் கோயில் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. வராக புராணத்திலும், பிரம்ம கைவல்ய புராணத்திலும் இவ்வூர் மற்றும் ஆலயம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  தமிழ் நாட்டில் வாழ்ந்த 12 வைணவ ஆழ்வார்களில் பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிறந்த ஊர்! பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டும், ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியும் இவ்வூர் தமிழ் இலக்கியத்திற்கு தந்த கொடைகளே! 
  முன்காலத்தில் காடாக இருந்த இப்பகுதியை சீர்படுத்தி வடபத்ரசாயனார் கோயிலை வில்லி என்ற வேடுவ குல மன்னரே கட்டியுள்ளார். அதனால் வில்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றது. 
  இந்த ஊரில் 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த பெரியாழ்வார் இறை தொண்டு செய்து வாழ்ந்திருந்தார். இவருக்கு நந்தவனத்தில் கிடைத்த பெண் குழந்தை கோதை நாச்சியாரை, தன் மகளாகக் கருதி வளர்த்தார். 
  கோதை விஷ்ணுவை தன் மணாளனாகக் கருதி வேண்டி வணங்கி அவரை மணந்தாள். அதன்பின் பெரியாழ்வார் நந்தவனத்தில் ஆண்டாள் கிடைதத இடத்தில் ஆண்டாள் கோயிலைக் கட்டியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

  பெருமைக்குரிய கோபுரம்!
  விஷ்ணு கோயிலில் உள்ள 196 அடி உயரமும், 11 நிலைகளும், மற்றும் 11 கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் பெரியாழ்வாரால் கட்டப்பட்டது! சிற்பங்கள் இல்லாத இந்த உயர்ந்த அழகிய கோபுரமே தமிழகத்தின் உயரமான கோபுரம்! இதுவே தமிழக அரசின் சின்னமாகவும் உள்ளது! 
  தொடரும்....

  தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai