Enable Javscript for better performance
கருவூலம்: தஞ்சாவூர் மாவட்டம்!- Dinamani

சுடச்சுட

  
  sm6

  சென்ற வாரத் தொடர்ச்சி....
  சரஸ்வதி மஹால் நூலகம்! 

  ஆசியாவின் மிகப் பெரிய சுவடி நூலகம் இதுதான்! உலகின் மிகப் பழமையாôன நூலகங்களில் ஒன்று! உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் "சரஸ்வதி பண்டாரகம்' என்ற பெயரில் சுவடிகள் காப்பகமாகத் தொடங்கப்பட்டது! (பண்டாரகம் = கருவூலம் (அல்லது) பொக்கிஷம்.) 

  எல்லா அரச வம்சத்தினரும் இதைப் பாதுகாத்து வந்தனர். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி ஆட்சிக் காலத்தில் "சரஸ்வதி மஹால் நூலகம்' எனப் பெயர் பெற்று பெரும் வளர்ச்சி அடைந்தது. 

  இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பல மொழி ஓலைச் சுவடிகள், கையெழுத்து பிரதிகள், அச்சுப் பிரதிகள் உள்ளன. இப்போது நூலகத்தில் வரலாறு, மருத்துவம், இசை, நாட்டியம், அறிவியல், தத்துவம் என பல துறைகளைச் சார்ந்த, சுமார் 50,000 நூல்கள் இருக்கின்றன.

  இங்கு ஓலைச் சுவடிகளைப் படிக்கவும், நகல் எடுக்கவும் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் உலகின் பல பகுதிகளிலிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நூலகத்தைச் சார்ந்த நடமாடும் நூலகமும் தற்போது செயல்படுகிறது!

  பெருமைக்குரிய மன்னர் சரபோஜி! 
  தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களில் மாமன்னர் ராஜராஜனுக்கு அடுத்து அழியாத புகழ்பெற்றவர் மன்னர் இரண்டாம் சரபோஜிதான்! 

  மன்னரும், அவருக்கு குருவாக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சேர்ந்தே சரஸ்வதி மஹால் நூலகத்தை செம்மைப் படுத்தி வளர்ச்சி அடையச் செய்தனர். இருவரும் பலமொழி நூல்களையும், ஓலைச் சுவடிகளையும் தேடிக் கொண்டு வந்தனர். 

  மன்னர் சரபோஜி சிறந்த தமிழ் நூல்களை பிற மொழிகளிலும், பிற மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சுக்கூடத்தையும் நிறுவினார். உலகின் புகழ்பெற்ற இடங்களை ஓவியங்களாகத் தீட்டி, மக்கள் பார்வைக்கு வைத்தார். 

  சரபோஜி மன்னரை கவுரவிக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் அவருக்கு பளிங்கு கல்லில் வடிக்கப்பட்ட முழு உருவச் சிலை அமைத்தனர். தத்ரூபமாக வடிக்கப்பட்ட இச்சிலையின் உடைவாளை உறையில் இருந்து எடுத்து மீண்டும் செருக முடியும்! அதேபோல் மன்னரின் தலைப்பாகையையும் தனியாகக் கழற்றி மாட்டலாம்! 

  மன்னர் சரபோஜி, பாதிரியார் ஸ்வார்ட்ஸ் மீது கொண்ட அன்பின் அடையாளமாக "சிவகங்கை பூங்கா' அருகே 1779 இல் தேவாலயம் ஒன்றைக் கட்டினார். இது "ஸ்வார்ட்ஸ் சர்ச்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுவற்றில் மன்னர் பாதிரியாரைச் சந்திக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 

  தென்னகப் பண்பாட்டு மையம்!
  தஞ்சாவூரில் உள்ள இம்மையம் கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது! இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய தலைமை மையமாகும்! 

  கும்பகோணம் மகாமக விழா!
  கும்பகோணம் ஊர் வடக்கே காவிரியும், தெற்கே அரசலாறும், பாயும் வளமான பூமி! கோயில்கள் நிறைந்த நகரம். சோழ மற்றும் நாயக்க மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இங்குள்ளன. 

  பழம் பெருமை மிக்க நகரம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு தங்க நாணயம் அச்சிடும் தொழிலகம் இருந்ததாக அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது! 

  ஆண்டுதோறும் நடக்கும் மாசிமக விழாவும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது! இங்குள்ள மகாமகக் குளம் புனிதமாகப் போற்றப்படுகிறது. 

  ஜோதிட சாஸ்திரத்தின் கிரக நிலைகளை ஆதாரமாகக் கொணடு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 35 லட்சம் பேர் இக்குளத்தில் நீராடியுள்ளனர். மகாமக நாளில் 12 சிவன் கோயில்களில் இருந்து தெய்வத் திருமேனிகள் இக்குளத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தாவாரி நடைபெறும்! 

  இக்குளம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் என்பவரால் சுற்றிலுமுள்ள படித்துறைகளும், மண்டபங்களும் கட்டப்பட்டன! அரசலாற்றிலிருந்து இக்குளத்திற்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இக்குளத்திற்குள் 21 உட்கிணறுகள் உள்ளன. சுற்றிலும் படித்துறையுடன் 16 மண்டபங்களும் உள்ளன. 

  கும்பகோணத்தில் கிடைக்கும் வெற்றிலையும், டிகிரி காபியும் மிகப் பிரசித்தமானவை! 

  திருவையாறு ஆராதனை விழா!
  காவிரியின் கரையில் தஞ்சைக்கு 13 கி.மீ. தூரத்தில் திருவையாறு உள்ளது. தஞ்சாவூர் செல்லும் சாலையில் 5 பாலங்களைக் (வெட்டாறு, வடலாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவேரி) கடந்து செல்ல வேண்டும். இந்த ஐந்து நதிகளும் இவ்வூரின் வழி செல்வதால் திருவையாறு எனப் பெயர் வந்தது. 

  இங்குள்ள சிவன் கோயில் அருகில் கர்நாடக இசை மேதை தியாகராஜர் வாழ்ந்த வீடும், ஆற்றங்கரையில் அவரது சமாதியும் உள்ளன. 

  ஜனவரி மாதம் தியாகராஜரை போற்றி வணங்கும் வகையில் இவ்வூரில் தியாகராஜர் ஆராதனை விழா 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல கர்நாடக சங்கீத பாடகர்களும், இசை ரசிகர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டு தங்கள் இசையால் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். 

  பழமையான புகழ் பெற்ற ஆலயங்கள்!
  கி.பி. 985 முதல் 1070 வரை இடைக்கால சோழர்களின் ஆட்சி தமிழகம் முழுவதும் மற்றும் தமிழக எல்லைக்கப்பாலும் பரந்து விரிந்து இருந்தது. இக்காலத்தில் சோழர்கள் தங்கள் நாட்டில் பல கோயில்களைக் கட்டினார்கள். 
  இவர்களால் கட்டப்பட்ட ஆலயங்களில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம், மற்றும் திருபுவனம் சரபேஸ்வரர் (கம்பஹரேஸ்வரர் என்றும் கூறுவர்)ஆலயம் ஆகியவை மிகப் பெரியவை. 

  இவற்றில் தஞ்சாவூர், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்கள் அழியாத சோழர் பெருங்கோயில்கள் என போற்றப்படுகிறது. இம்மூன்று ஆலயங்களும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் திகழ்கின்றன. 

  தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்! 
  இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. சோழப் பேரரசன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயில் கி.பி. 1003 இல் தொடங்கப்பட்டு 1010 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் 216 அடிகள் (66 மீட்டர்) உயரமும், 13 நிலைகளும் கொண்ட கோபுரம் உள்ளது. இதன் உச்சியில் 26 அடி பக்க அளவு கொண்ட சதுர வடிவிலான சமதளம் இருக்கிறது. இதன் உச்சியில் பாறை போன்ற அமைப்பில் 80 டன் எடை கொண்ட ஒரு பெரிய கல் உள்ளது. 
  முன்பு இக்கல்லை 6 கி.மீ. நீளத்திற்கு சறுக்குப் பாதை அமைக்கப்பட்டு மேலே ஏற்றப்பட்டது என்று கருதப்பட்டது. 
  ஆனால் இப்பொழுது செய்த ஆய்வு முடிவில் இது பாறை வடிவில் பல கற்களை மிக நுட்பமாக தொகுத்து இணைத்து உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  இந்த உயர்ந்த கம்பீரமான கோபுரத்தின் உட்பகுதி வெற்றிடமாக உள்ளது. இதுவே கர்ப்பக்கிரகத்தில் உள்ள பெரிய சிவலிங்கத்தின் கருவறையாக அமைக்கப்பட்டுள்ளது. 
  கருவறையில் 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையாரும், 23 ணீ அடி உயர லிங்க திருமேனியும் கொண்ட உலகிலேயே பெரிய சிவலிங்கம் உள்ளது. இது பல தனித்தனிக் கற்களினால் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
  இங்குள்ள பெரிய நந்தியும், நந்தி மண்டபமும் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை. ஒரே கல்லினால் செய்யப்பட்ட இந்த நந்தி 14 மீ உயரமும், 7 மீட்டர் நீளமும், 3 மீ. அகலமும் கொண்டது. 
  இக்கோயிலின் நுழைவாயிலில் 90 அடி உயரத்தில் 5 நிலைகள் கொண்ட கோபுரமும் 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன துவாரபாலகர்கள் சிலையும் உள்ளன. 
  இங்கு பிரம்மாண்டமான பெரிய தெய்வ வடிவங்களுடன் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஓவியங்கள் முதல் நாயக்கர் கால ஓவியங்கள் வரை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். 
  உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தின் வடிவம் 1954 இல் வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் கரன்ஸியில் பொறிக்கப்பட்டிருந்தது! 2010 ஆம் ஆண்டு ஆலயத்தின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டது. 

  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
  இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் தாராசுரம் தலைநகராக்கப்பட்டு, இந்தக் கோயிலும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் சிறியதும் பெரியதுமாய் எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்த கருவூலம் எனலாம். ஏராளமான கல்வெட்டுகளும் கோயிலைச் சுற்றி உள்ளன. 
  இங்குள்ள கோபுரம் 5 நிலை மாடங்களுடன் 85 அடிஉயரம் கொண்டது. நுழைவாயிலில் நந்தியின் அருகே இசையொலி எழுப்பும் நாதப்படிகள் உள்ளன. இங்குள்ள மகா மண்டபம், தேர் போன்ற வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கமும், குதிரைகள் ஒரு பக்கமும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ளன. 
  இத்தேரின் சக்கரங்கள் மிக நேர்த்தியாக அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவை இந்திய சிற்பக்கலையின் பெருமிதத்திற்கு உரிய அடையாளமாகக் கருதப்படுகின்றன. 
  இம்மண்டபத்தில் நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்கள் நிறைந்துள்ளன. உள்ளங்கை அளவினாலான நர்த்தன கணபதி, பல புராண கதை நிகழ்வுகள், நாட்டியப் பெண்கள் என பிரமிப்பூட்டும் வகையில் இச்சிற்பங்கள் உள்ளன. 
  மேலும் இங்கு சதுர, செவ்வக மற்றும் வட்டப் பூக்கள் குடைந்து உருவாக்கப்பட்ட சாளரங்கள் கொண்ட காற்றோட்டமான மண்டபங்களை அமைத்துள்ளனர். இச்சாளரங்கள் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட வை! இவ்வாலயம் கற்பனைக்கெட்டாத கண் கொட்டாமல் பார்த்து மகிழ வேண்டிய அற்புதமான சிற்பங்களைக் கொண்டது! 
  தொடரும்....

  தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai