Enable Javscript for better performance
அரங்கம்: இசைவாணி- Dinamani

சுடச்சுட

  
  sm13


  காட்சி 1

  இடம் - ராம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
  மாந்தர் - பெண் இன்ஸ்பெக்டர் இசைவாணி, பெண்காவலர்கள் சாந்தி, சந்திரா, கவிதா.

   
  (பெருநகரில் உள்ள முக்கிய வியாபாரப் பகுதியை ஒட்டிய விரிவாக்க குடியிருப்பு பகுதி ராம் நகர்.)


  இசைவாணி: சாந்தி, சந்திரா, கவிதா மூவரும் வாங்க இப்படி!....

  (மூவரும் வந்து சல்யூட் அடித்து நிற்க.)


  இசை வாணி: நம்ம ராம் நகரில் இதுவரை இருபது பெண்கள் கழுத்துச் சங்கிலியைப் பறி கொடுத்திட்டாங்க. இது முக்கிய வியாபார ஏரியாவா இருக்கிறாதால் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அறுத்திட்டு ஓடிடறாங்க. புகார் மேல் புகார்!.... இவங்களைப் பிடிக்க நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன்!.... நீங்களும் அதில் பங்கு பெறணும்.

  சந்திரா: ஓகே மேடம். எங்க ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு.

  இசைவாணி: இதோ பாருங்க!...... இந்தப் பையில் இருக்கிறதை!....

  (மேசையில் கொட்ட அத்தனையும் தங்க சங்கிலிகள், தாலி சரடு, நெக்லஸ்கள், கழுத்து ஆரம். பளபள என மின்னுகின்றன.)


  கான்ஸ்டபிள் கவிதா: மேடம் இத்தனை நகை ஏது ?

  இசை வாணி: இது அத்தனையும் போலி. கவரிங் நகை. தங்க முலாம் பூசிய செம்பு நகைகள். என் தம்பி ஜெய்சங்கர் மிக நுண்ணிய தொலைதொடர்பு அலைகளை வீசும் கம்ப்யூட்டர் நானோ சிப்கள் செய்யும் தொழில்நுட்பம் தெரிஞ்சவன். எல்லா செயினிலும் உள்ள டாலரில் சின்ன குறுந்தகடு சிப் வச்சிருக்கான். அது பத்து கிலோ மீட்டர் வரை என் கைபேசியில் செயின் இருக்கும் இடத்தை பெருநகர வரைபடத்தில் காட்டும். நாம் கமிஷனர் அலுவலகம் கணினிகள் மூலமும் வயர் லெஸ் தொடர்பு மூலம் கால் மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்து விடலாம். ம். சாந்தி நீ பட்டுப் புடவை கட்டி மல்லிகைப் பூ வச்சுக்கிட்டு இந்த நகைகளைப் போட்டுக்கிட்டு மெதுவாக இருட்டும் சமயம் சிங்காரம் தெருவில் நடக்கணும்.

  சந்திரா: ஓ கே மேடம்.

  இசை வாணி: கவிதா, சந்திரா ஒருத்தர் ரயிலிலும் ஒருத்தர் கூட்டமான பஸ்ஸிலும் சாதாரண பொது ஜனங்கள் போல போகணும். நல்லா வெளியே தெரியணும் நகைகள். உங்கள் நடை உடை பாவனையில் ஒரு அலட்சியமும், வேடிக்கை பார்க்கும் சுபாவமும், கவனக் குறைவும், மறதியும் தெரியணும்.

  சாந்தி, கவிதா: ஓ கே மேடம். 

  இசை வாணி: உங்களைப் பின்தொடர்ந்து கமிஷனர் அனுப்பும் ஆண் காவலர்கள் சாதாரண உடை அணிந்து வருவார்கள். அவர்கள் ஆயுதம் வைத்திருப்பவர்கள். கொள்ளையர்கள் செயினை அறுத்து அபேஸ் செய்து கை மாற்றி கை மாற்றி நகை எப்படியோ போய்க் கொண்டேயிருக்கும். என் தம்பி தன் லேப் டாப்பில் எனக்கு எங்கே நகை போகிறது என தகவல் அனுப்பிக்கொண்டே இருப்பான். இந்த நடவடிக்கை மூலம் ஒரு கும்பலைப் பிடிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கு.

  (மூவரும் சல்யூட் அடிக்கிறார்கள்.)

   
  காட்சி 2

  இடம் - ராம் நகரில் ஒரு சந்தடி இல்லாத சிங்காரம் தெரு.
  மாந்தர் - மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கபாலி, ரங்கன், பெண் காவலர் சாந்தி, இசைவாணி, ஜெய்சங்கர்.

   

  (ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஒருவன் பைனாகுலர் மூலம் பார்த்தபடி பேசுகிறான் கபாலியிடம் ) 


  ரங்கன்: கபாலி அண்ணே, ஒரு பொண்ணு கையில் ஒயர் கூடை எடுத்துக்கிட்டு வருது. பச்சை நிற பட்டுப் புடவை, தலையில் மல்லிப் பூ. முன்னால் பின்னால் யாருமில்லே.... கழுத்தில் முப்பது பவுன் தேறும்!.... இரட்டை வடச் செயின் டாலர் செயின் நெக்லஸ்...... வேகமா போங்க.....

  கபாலி : ரங்கா வண்டியை எடு. நான் அறுத்தவுடன் தெருமுனையில் திருப்பத்தில் ஒரு ஆம்னி வேன் நிக்கும் அதன் கதவு திறந்து இருக்கும் அதுக்குள் முனியன் இருப்பான் காருக்குள் வீசிடுவேன். இது தான் திட்டம்.

  (மோட்டார் சைக்கிள் கிளம்புகிறது.........-சாந்தி அருகில் சென்றதும் பின்னால் அமர்ந்திருக்கும் கபாலி செயினை ஒரு கொக்கியில் மாட்டி அறுக்கிறான்-- )


  சாந்தி: ஐயோ!.... செயின் திருடன்!... பிடிங்க!... பிடிங்க!..... 

  (மோட்டார் சைக்கிள் வேகமாகச் செல்ல....)


  சாந்தி: (கூடையில் இருந்து தன் கை பேசியை எடுத்து) மேடம் கறுப்பு ஜீன்ஸ் போட்டு ஒருத்தன் ஓட்டறான். ஹெல்மெட் போட்டிருக்கான். பின்னால் பிரவுன் கலர் டீ ஷர்ட் காரன் செயினை அறுத்தான். என் கைபேசி காமிராவில் படம் எடுத்திட்டேன்!
  இசைவாணி: நாங்க தெருமுனையில் தான் கண்காணிக்கிறோம். நாங்க ஒரு புதிய காரில் ஒரு படையோட இருக்கோம். நீ ஸ்டேஷனுக்குப் போ.

  (இசைவாணி, கமிஷனர், அவர் ஆபீஸ் ஆயுதப் படை வீரர்கள் நால்வர் ஒரு வெளி நாட்டு கறுப்புக் காரில் கதவுகள் மூடி உள்ளே இருக்க.)


  கமிஷனர்: இசைவாணி அந்த மோட்டார் சைக்கிளில் இருந்து செயினைத் தூக்கி ஒரு ஆம்னி வேனுக்குள் போடறான் அறுத்தவன்..... இப்போ இவங்களை பிடிப்போம்! 

  (வெளியே இறங்கி ஒரு பெரிய விசில் அடிக்க சாலையின் குறுக்கே ஒரு மெல்லிய உறுதியான கம்பியைக் காவலர்கள் கட்டி இருக்கின்றனர். அது தெரியாமல் கபாலியும் ரங்கனும் மோட்டார் சைக்கிளில் போக அது தடுக்கி விழுகின்றனர்.) 

  கமிஷனர்: ம்,.... கைது பண்ணுங்க!.....

  இசை வாணி: (போனில் ஜெய்சங்கர் குரல்) மேடம்!..... செயினில் உள்ள நானோ சிப் தகவல் அனுப்புது. அது இப்போ ராம் நகர் ரவுண்டானா வட்ட வளைவை நெருங்குது!

  (இந்த செய்தி அனைத்து காவலர் ஊர்திகளில் உள்ள ஒலி பெருக்கியில் ஒலிக்கிறது)


  கமிஷனர்: தன் வாக்கி டாக்கியில்..... ம்..., ராம் நகர் ரவுண்டானா அருகில் வரும் ஆம்னியை மடக்குங்க!......

  வாக்கிடாக்கியில்: சார் வேனை மடக்கிட்டோம்! செயின் இருக்கு!

  ஜெய்சங்கர்: இப்போ நுளம்பாக்கம் ரயிலில் அறுபட்ட செயினில் இருந்து சிக்னல் வருது! 

  இசைவாணி : ஓ!.... கவிதாவிடம் கைவரிசை நடந்திடுச்சு!.... சொல்லுப்பா, இப்போ எங்க இருக்கு செயின்?

  ஜெய்சங்கர்: நுளம்பாக்கம் ரயில்வே பிளாட்பாரம்.... .. இப்போ நடை மேம்பாலத்தைக் காட்டுது!

  (இந்தச் செய்தியும் அனைத்து காவல் வாகனங்களிலும் ஒலிக்க......சற்று நேரத்தில்)


  ஒலி பெருக்கி குரல்: கமிஷனர் சார்!.... மேம்பாலத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பழைய கேடி மொட்டை பூபதி!.... கைது பண்ணிட்டோம்!..... செயின் அவன் பாக்கெட்டில் இருக்கு!

  கமிஷனர்: கபாலிக்கு மொட்டை மாடியில் இருந்து நபர்கள் பற்றி துப்பு தந்த குட்டி என்னும் ராசுக்குட்டியை அவன் கைபேசி கோபுர சிக்னலை வச்சு பிடிச்சிட்டாங்க.

  இசைவாணி: மூணாவதா பஸ்ஸில் பிரயாணம் செஞ்ச சந்திரா கிட்டே இருந்து போன் வரலியே. அவ என்ன ஆனாள்?

   
  காட்சி 3

  ராம் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்
  மாந்தர் - கமிஷனர், இசைவாணி, கவிதா, சாந்தி


  கமிஷனர்: பலே!..... இசைவாணி மேடம்!..... உங்க திட்டத்தால் செயின் அறுக்கும் ஒரு கோஷ்டியே சிக்கிட்டாங்க. நூற்றுக்கணக்கான செயின்கள் அந்த ஆம்னி வேன்காரன் வீட்டில் அகப்பட்டது! உங்க டீம் ஆக்ஷன் பற்றி செய்தி சேகரிக்க நிருபர்கள் கூட்டமா வந்திட்டாங்க!

  இசைவாணி: சந்திரா என்ன ஆனாள்?

  (அப்போது சந்திரா ஒரு ஆட்டோவில் வந்து இறங்குகிறாள்.)


  இசைவாணி: (முக வாட்டத்துடன் இருக்கும் சந்திராவிடம்) என்ன சந்திரா?.... ஏன் இப்படி டல்லா வர்றீங்க?

  சந்திரா: மேடம்,..... நானும் கூட்டமான பஸ் எல்லாத்திலும் ஏறி ஏறி இறங்கிட்டேன்...... யாரும் அறுக்கலே......என் கிட்டே யாருமே வரலே அதான் ஒரே கவலை.....

  (கமிஷனர், இசைவாணி, கவிதா, சாந்தி, மற்ற அதிகாரிகள் சிரிக்கிறார்கள்)


  இசை வாணி: அட அசடு!.... திருடு போகலியேன்னு வருத்தப்படுற ஒரே ஆள் இந்த உலகத்தில் நீ தான்!.....

  திரை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai