Enable Javscript for better performance
கருவூலம்: தஞ்சாவூர் மாவட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: தஞ்சாவூர் மாவட்டம்!

  By தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.   |   Published on : 24th March 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm9

  சென்ற வாரத் தொடர்ச்சி....

  கும்பகோணம் ஸ்ரீராமசுவாமி ஆலயம்

  தஞ்சை பகுதியை ஆட்சி செய்த மன்னர் ரகுநாத நாயக்கரின் கலை ஆர்வத்திற்கு சான்றாக தனித்தன்மையுடன் திகழ்கிறது இக்கோயில். கருவறையில் ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார். 

  இங்குள்ள தூண்களில் ராமாயண காவியத்தின் முக்கிய சம்பவங்களான் வாலி, சுக்ரீவன் சண்டை, விபீஷணன் பட்டாபிஷேகம், அகலிகை சாப விமோசனம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் அழகிய சிற்பங்களாக சாட்சியளிக்கிறது. 

  மேலும் கோயில் பிரகாரத்தில் ராமாயண காவியத்தின் மூலக் கதை முழுமையாக விளக்கங்களுடன் கூடிய ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் ஓவியங்களைப் பார்த்து மகிழ்வதுடன், கதையையும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

  சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயம்!

  கட்டுமலை குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோயில் முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று. கட்டுமலைக் குன்று என்பது செயற்கையாக கற்களைக் கொண்டு கட்டப்பட்ட குன்று. இக்கோயிலின் முதல் பிரகாரம் குன்றின் உச்சியிலும் இரண்டாவது பிராகாரம் மத்தியிலும் 3 ஆவது பிரகாரம் அடிவாரத்திலும் உள்ளன. 

  கும்பகோணம் சாரங்கபாணி கோயில்!

  108 திவ்ய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. காவிரி ஆறு பயணத்தில் பிரிந்து மீண்டும் சேர்வதினால் உண்டான நதித்தீவுப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5 விஷ்ணு கோயில்களில் இதுவும் ஒன்று! சன்னதி தேர்போல் வடிக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரணங்களும் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாலயத்தின் தேர் 500 டன் எடையும், 110 அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும்! 

  திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்!

  காசிக்கு சமமான காவிரிக்கரை ஆலயங்களில் இதுவும் ஒன்று. நெடிதுயர்ந்த கோபரங்கள், நீண்ட பிரகாரங்கள், சுற்றிலும் தேரோடும் நான்கு வீதிகள், அதன் நான்கு கோடிகளிலும் சிவன் கோயில்கள் என 1200 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சிறந்த அமைப்புடன் கூடிய பழமையான கோயில்! இவற்றைத் தவிர திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் ஆலயம், திருவையாறு ஐராப்பன் ஆலயம், உள்ளிட்ட பல சோழர் மற்றும் நாயக்கர் காலத்து ஆலயங்கள் இங்குள்ளன. ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளுவோரும், சிற்ப மற்றும் கட்டிடக் கலையில் ஆர்வமுள்ளோரும் இவ்விடங்களுக்கு சுற்றுலா வருகின்றனர். 

  நவக்கிரகக் கோயில்கள்!

  புகழ்பெற்ற நவக்கிரக ஸ்தலங்களான சூரியனுக்குரிய ஆடுதுறை சூரியனார் கோயில், சந்திரனுக்குரிய திங்களூர் கைலாசநாதர் ஆலயம், சுக்கிரனுக்குரிய கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், மற்றும் ராகுவிற்குரிய திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி ஆலயம் முதலியவை தஞ்சை மாவட்டத்திற்குள்தான் உள்ளன. 

  சந்திரப்பிரபா பகவான் ஜைனர் ஆலயம்!

  1905 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த சமணர் கோயில் கர்ப்பக்கிரகம், முக மண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடியது. எட்டாம் தீர்த்தங்கரர் சந்திரப்பிரபர் இந்த ஆலயத்தில் மூலவராக உள்ளார். 

  கரந்தை ஆதிவராகசுவாமி ஜைனர் ஆலயம்!

  முதலாம் தீர்த்தங்கரரான ஸ்ரீரிஷபதேவரே இந்த ஆலயத்தின் மூலவர். இச்சிலை 600 ஆண்டுகளும், கட்டிட அமைப்பு 300 ஆண்டுகளும் பழமையானது. கருவறை, ராஜகோபுரம், அர்த்த மண்டபம், உள்ளிட்ட பல அமைப்புகளுடன் நந்தவனம், குளமும் தனியாகக் கொண்டதாக அமைந்துள்ளது. 

  பூண்டி மாதா பேராலயம்!

  புகழ் பெற்ற இத்தேவாலயம் 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. அப்பொழுது ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் எனப்பட்டது. இதனை 1955 இல் அருள்தந்தை லூர்து சேவியர் அவர்கள் மேரி மாதாவின் அருளினால் சீரமைத்துக் கட்டினார். அதன் பின் "பூண்டி மாதா பேராலயம்' என்றே அழைக்கப்படுகிறது. 

  அதிராமப்பட்டினம் மசூதி! 

  தஹ்லா மரக்காயர் என்பவரால் கி.பி. 1180-இல் கட்டப்பட்ட பழமையான மசூதி. 

  பிற சுற்றுலாத் தலங்கள்!

  தஞ்சாவூர் அரண்மனை!

  400 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இவர்களுக்குப் பின் ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் சில பகுதிகளை கட்டினர். அதன்பின் ஆங்கிலேயர்கள் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டிடக் கலையின் வடிவமைப்புகள் சேர்க்கப்பட்டன. 
  110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வளாகத்தில் மணி மண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்புக் கட்டிடம், நீதிமன்றம் என நான்கு முதன்மையான கட்டிடங்கள் இருக்கின்றன. தர்பார் மண்டபத்தை பல வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. 

  இப்பொழுது இந்த வளாகத்திற்குள்தான் சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம் மற்றும் அரசு அலுவலகம், பொறியியல் கல்லூரி, காவல் நிலையம், தொல்லியல் துறை போன்றவைகள் செயல்படுகின்றன. 


  தஞ்சைக் கலைக்கூடம்! (அருங்காட்சியகம்)

  இந்த அருங்காட்சியகம் உலகளவில் சிறப்பு பெற்றது. இங்கு 7 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த செம்பு வெண்கல திருமேனிகள், கற்சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சில சிலைகள் உலகில் எங்கும் காணக்கிடைக்காத சிறப்புடையது! 


  சங்கீத மஹால்!

  அரண்மனை வளாகத்திற்குள் உள்ள உயரமான தூண்களும் அழகிய வளைவுகளும் கொண்ட சங்கீத மஹால் கட்டிடத்தில் பலவகையான கைவினைப் பொருட்காட்சிகள் நிரந்தரமாக நடைபெறுகிறது. 


  மனோரா!

  தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியில் மல்லிப்பட்டினத்தில் இக்கட்டிடம் இருக்கிறது. அறுங்கோண வடிவில் பல அடுக்குகளாக உள்ள இக்கட்டிடம் 120 அடி உயரம் கொண்டது. உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகளும் உள்ளன. 

  1814-இல் நடந்த கடல் போரில் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வென்றனர். இதற்காக ஆங்கிலேயர்களை பாராட்டும் வகையில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் 1814 -இல் இதனைக் கட்டினார். இன்று சுற்றுலாத் தலமாக உள்ளது. 


  சிவகங்கை பூங்கா!

  தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் உள்ளது சிவகங்கை குளம். இது 11-ஆம் நூற்றாண்டில் பேரரசர் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. இதனை ஒட்டி உள்ள சிவகங்கை பூங்கா 1871-இல் உருவாக்கப்பட்டது. இப்பூங்காவிற்குள் பொம்மை ரயில், மோட்டார் படகு வசதிகள், நூலகம் மற்றும் சிறு விலங்கியல் தோட்டமும் அமைக்கப்பட்டு புகழ் பெற்ற பொழுதுபோக்கு பூங்காவாக தற்போது விளங்குகிறது. 

  ராஜராஜன் மணி மண்டபம்!

  1995-இல் நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது கட்டப்பட்டது. சோழர் கால கட்டிட பாணியில் கட்டப்பட்ட இந்த அழகிய மணிமண்டபத்தைச் சுற்றி பூங்காக்களும், செயற்கை நீரூற்றும், உள்ளன. கீழ்தளத்தில் சோழர்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னர் ராஜராஜசோழனின் சிலையும் இருக்கிறது. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளின் ஓளியில் இதனை காண்பது சிறப்பு. 

  மேலும் சில தகவல்கள்!

  சுவாமி மலை பஞ்சலோக விக்கிரகங்கள்!
  சோழர்காலம் முதற்கொண்டு இவ்வூரில் விக்கிரகங்கள் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் விக்கிரகங்கள் உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. 

  கும்பகோணம் - அரசு கவின் கலைக் கல்லூரி!

  1887-இல் சென்னை மாகாண அரசாங்கத்தால் கைவினைத் தொழில் பள்ளியாக கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. பல மாற்றங்களுக்குப் பிறகு இன்று 1979-இலிருந்து கலைக்கல்லூரியாக செயல்படுகிறது. இங்கு சிற்பக்கலை, ஓவியக் கலை, விளம்பரக்கலை போன்றவை கற்பிக்கப்படுகிறது. 

  வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்!

  சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் நடத்திய தண்டி உப்பு சத்தியாகிரகத்தைப் போன்று, தமிழகத்தில் 1930, ஏப்ரல் 13 ஆம் நாள் திருச்சிராப்பள்ளியில் தொடங்கி, தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யம் வரை 150 மைல்கள் தூரத்திற்கு நடந்து உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். 

  ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம்!

  பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஸ்ரீபாலைவனநாதர் கோயிலின் உட்புறத்தில் அச்சுதப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. 35 அடி உயரமும் 80 அடி சுற்றளவும் கொண்ட இக்களஞ்சியம் ஆசியாவின் பெரிய நெற்களஞ்சியம் என்று கூறப்படுகிறது. 

  பெரிய கோயில் தேரோட்டம்!

  தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் ஒரு காலத்தில் மிகவும் பிரபலம்! மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜிதான் 5 தேர்களையும், அவை ஓடுவதற்கு 4 ரதவீதிகளையும் அமைத்தார். 

  அக்காலத்தில் நடந்த தேரோட்டங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைத்துள்ளன. கி.பி. 1809-இல் நடந்த விழாவில் தேரை இழுக்க பல ஊர்களிலிருந்து 25000 க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

  காலப்போக்கில் தேர்கள் சிதிலமடைந்ததால் சுமார் 80 வருடங்கள் விமரிசையாக நடந்த தேர்த்திருவிழா நடைபெறவில்லை. 

  2015-இல்தான் புதிய தேர் செய்யப்பட்டு தோரோட்டம் நடைபெறுகின்றது.

  திருபுவனம் பட்டு நெசவுத் தொழிலில் சிறப்பு பெற்றது. திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம்தான் இந்தியாவின் அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கம். 

  கும்பகோணத்தில் கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு தேசிய அருங்காட்சியகமாக உள்ளது. சோழமன்னர்களின் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தரின் நினைவு மண்டபம் இங்கு உள்ளது. 

  மன்னர் ராஜராஜ சோழன் முடிசூடிக் கொண்ட நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதயத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

  தமிழகத்தின் கலைகள், ஒவியம், இசை, நாட்டியம் என பல வகைகளிலும் சிறப்பு பெற்ற மாவட்டம்! சோழர்களின் கட்டிடக் கலைக்கு அழகிய சான்றாக விளங்கும் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்டது. காவிரி பாயும் வளமான பூமி! பலவிதங்களில் மனதைக் கவரும் தஞ்சாவூர் மாவட்டம்!

  முற்றும்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai