Enable Javscript for better performance
மரங்கொத்தி முத்தமிட்ட உலகம்!- Dinamani

சுடச்சுட

  
  sm14

  நான், பிறந்து சில நாட்களே ஆன ஒரு குஞ்சுப் பறவை. அம்மா மரங்கொத்தியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறேன். அம்மாவின் அலகு, கூர்மையாகவும் திடமாகவும் இருக்கும். என்னுடைய அலகு மிருதுவாகவும் சிறியதாகவும் உள்ளது.
  இப்போது நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன். ஒரு நாள், அம்மா எனக்கு மரம் கொத்தும் கலையைக் கற்றுத் தந்தார். மரங்களைக் கொத்தித் துளையிடுவதைக் கற்றுக்கொண்டேன். என் முயற்சியைப் பார்த்து வியந்த அம்மா பெருமிதம் அடைந்தார். 
  மற்றொரு நாள், அம்மா என்னை ஒரு கருங்காலி மரத்துக்குக் கூட்டிச் சென்றார். "டொக்..டொக்' என்று மரத்தைக் கொத்தி பட்டையைத் தனியாகப் உரித்தார். பட்டையைப் பிரித்தெடுத்த பகுதியில் நிறையப் புழுக்களும், பூச்சிகளும் ஊர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். இருவரும் சேர்ந்து ஆசைதீரப் புழுக்களைச் சாப்பிட்டோம். அம்மா, அந்த மரத்தைக் குடைந்து, ஒரு பெரிய துவாரத்தை உருவாக்கினார். அன்று முதல் நாங்கள் அந்தப் பொந்தில் வசிக்கத் தொடங்கினோம்.
  ஒருநாள், நான்அம்மாவிடம்,""அம்மா! உச்சிக் கிளையில் ஒரு பச்சைநிறப் பறவை உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்தப் பறவையும் மரத்தைத் துளையிடுமா? அதிலுள்ள புழுப் பூச்சிகளைச் சாப்பிடுமா?''என்றேன்.
  ""அதன் பெயர் பச்சைக்கிளி. கிளிகள் மரத்தில் காய்க்கும் பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவை. மரங்கொத்திகளைத் தவிர மற்ற பறவைகளுக்கு மரத்தைக் கொத்தித் துளையிடத் தெரியாது''என்றார் அம்மா. அதைக் கேட்டு பெருமிதம் அடைந்தேன். 
  ""சில மரங்கொத்திகள் பழவகைகளை உண்டு வாழ்கின்றன. நமது குடும்பத்தைச் சேர்ந்த மரங்கொத்திகள் மட்டும் புழு, பூச்சிகளை மட்டுமே வேட்டையாடிச் சாப்பிடுகிறோம்'' என்று விவரித்துச் சொன்னார் அம்மா.
  ஒரு நாள், அம்மா வெளியே சென்றிருந்த நேரத்தில், நான் தனியாக மரத்தின் பட்டையை பிரித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சத்தம் மரத்தில் வாழும் வேறுசில பறவைகளின் அமைதியைக் குலைத்தது. அவை அனைத்தும் ஒன்றுகூடி ""கிக்கிக்கீ! குக்..கொக்..குக்'' என்று பேசிக்கொண்டன. என்னை கோபத்தோடு வெறித்துப் பார்த்தன. எனக்குள் பயம் பற்றிக்கொண்டது. திடீரென்று பறந்து வந்த ஓர் ஆந்தை எனக்கு அருகில் உட்கார்ந்து என்னை மிரட்டியபடி, ""குஞ்சு மரங்கொத்தியே! பகல் நேரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் என் குஞ்சுகள், நீ எழுப்பும் சத்தத்தால் தூங்கமுடியாமல் போகின்றன. இப்போது நீ மரங்கொத்துவதை நிறுத்துகிறாயா? அல்லது நான் உனது வயிற்றைக் கொத்தி குடலை உருவட்டுமா?'' என்றது. 
  நான் பயந்து பதுங்கிக்கொண்டேன். கடைசியில் யோசித்துப் பார்த்தேன். ஆமாம்! ஆந்தை சொன்னது என்னவோ உண்மைதான். இரவெல்லாம் கண் விழித்திருந்த குஞ்சு ஆந்தைகளின் தூக்கம், மரத்தைக் கொத்தி சத்தம் எழுப்புவதால் கலைந்துபோகிறது. 
  மைனா, இருவாய்க் குருவி, கருஞ்சிட்டு, காக்கா, குயில் போன்ற மற்ற பறவைகளும் என்னைக் கண்டு விலகிப் போயின. நான் மனம் உடைந்து போனேன். அழுகை வந்துவிட்டது. 
  உச்சிக் கிளையிலிருந்து என்னை கண்காணித்த பச்சைக்கிளி பறந்துவந்து அருகில் உட்கார்ந்து, ""குஞ்சு மரங்கொத்தியே! அழாதே! உனக்கு நான் உதவி செய்கிறேன். உன்னை எனது நண்பனாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தப் பழத்தைச் சாப்பிடு''என்ற கிளி, தன் கையிலிருந்த ஒரு கொய்யாப் பழத்தைத் தந்தது. 
  ""ஐயோ! எனக்குப் பழங்களைச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. புழுப் பூச்சிகள் மட்டுமே சாப்பிட்டுப் பழக்கம்!'' என்றேன்.
  இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் என் அறிவு கூர்மையைச் என்னிடம் ஒரு கேள்வி கேட்டது!
  ""காடு முழுதும் மரங்கள் எப்படி வளர்ந்தன தெரியுமா?''
  நான் யோசித்துப் பார்த்தேன்.....சரியான பதிலைச் சொல்லத் தெரியாமல் திணறினேன்.
  ""முயற்சி செய்து பார். மறுபடியும் நாளைக்குச் சந்திக்கலாம்!''என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்துபோனது. 
  மாலையில், பொந்துக்குத் திரும்பிய அம்மா அவர் கவ்வியிருந்த புழுவைத் தந்து சாப்பிடச் சொன்னார். உணவு கிடைத்த சந்தோஷத்தில் கிளிகேட்ட கேள்விக்கான பதிலை அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள மறந்தே போனேன். கடைசியில் அம்மாவின் சிறகுகளுக்குள் நுழைந்து படுத்து உறங்கிப்போனேன். 
  மறுநாள் காலையில் வருவதாகச் சொன்ன பச்சைக்கிளி மறுபடியும் வந்தபோதுதான் அது கேட்ட கேள்வி எனக்கு ஞாபகத்தில் வந்தது. கிளியிடம் பேசுவதற்கு வெட்கமாக இருந்தது. என்னைப் பார்த்தவுடன் ஏதோ புரிந்துகொண்ட கிளி, இதோ வந்து விடுகிறேன்.என்று சொல்லிவிட்டுப் பறந்துபோனது. 
  மாலையில் தனது கூட்டுக்குத் திரும்பிவந்த ஒரு சாம்பல் சிட்டுக் குருவியை அழைத்து, ""காடு முழுக்க மரங்கள் எப்படி வளர்ந்தன தெரியுமா?'' என்று கேட்டேன். ""செடிகளிலிருந்து முளைத்தன!'' என்று பதில் சொல்லிவிட்டு அந்தக் குருவி கூட்டுக்குள் சென்று மறைந்தது. ஆமாம்! அதுவும் சரிதான். சிறுசிறு செடிகள்தான் மரமாக வளர்கின்றன. உடனே நான் கருங்காலி மரத்துக்கு அருகில் உள்ள செடிகளை சென்று பார்த்தேன். மனசுக்குள் மற்றொரு கேள்வி பிறந்தது.
  ""இந்தச் செடிகள் எப்படி முளைத்தன?''
  இந்த கேள்விக்கான பதிலை யாரிமிருந்து தெரிந்துகொள்வது? மரக்கிளை ஒன்றில் அமர்ந்திருந்த காகத்துக்குப் பக்கத்தில் பறந்து உட்கார்ந்தேன். 
  ""வணக்கம் காகமே! என்மீது கோபமென்றால் என்னை மன்னிக்கவும். நீ ஒரு சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டும். செடிகள் இங்கு எப்படி முளைத்தன?''என்று கேட்டேன். காகம் அமைதியாக இருந்தது. அதற்குள், அங்கொரு குயில் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு புறா, கரிச்சான் குருவி என மரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் கூடின. சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்த காகம் சொன்னது.
  மரங்களில் காய்க்கும் பழங்களைக் காட்டிலுள்ள பறவைகள் சாப்பிடுகின்றன. பறவைகள் எச்சமிடும் வேளையில் அதன் விதைகள் நிலத்தில் எச்சத்துடன் சேர்ந்து விழுகின்றன. அவை பிறகு மண்ணில் புதைந்து செடியாக வளர்கின்றன.என்றது.
  காகத்தைத் தொடர்ந்து பேசிய குயில், ""சுற்றுப்புறத்தில் வீசும் காற்று, நிலத்தில் விழும் விதைகளை காட்டின் பல இடங்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் உதவியாக இருக்கிறது!''என்றது. சரியான விளக்கத்தைச் சொன்ன காகத்துக்கும் குயிலுக்கும் நன்றி சொன்னேன். மரத்தில் வாழும் மற்ற பறவைகளுடன் சேர்ந்து பொழுதைக் கழித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.
  அடடே! என்ன ஆச்சரியம். காட்டு மரங்கள் வளர்வதற்கு சிறுசிறு பறவைகளும் ஒரு காரணமா? உடனிருந்த பறவைகள் சொன்ன தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். 
  பறவைகளின் உதவியால் வளர்ந்த மரங்கள், பறவைகள் தங்குவதற்காக இருப்பிடம் தருகின்றன. உண்ண உணவும் தருகின்றன எனவும் அங்கிருந்த பறவைகள் கற்றுத் தந்தன. பறவைகளாகிய நாம் ஒற்றுமையுடன் வாழ்வோம் என்ற உறுதியுடன் நாங்கள் பழகத் தொடங்கினோம்.
  அன்று மாலை வீடு திரும்பிய அம்மாவிடம் சொன்னேன்: ""அம்மா! பறவைகள் இல்லாத உலகம் அழிவைச் சந்திக்கும்'' என்றேன். அம்மா, என்னை அரவணைத்து முத்தமிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai