Enable Javscript for better performance
முத்திரை பதித்த முன்னோடிகள்:வலியா மன்னத்தால் ஹம்சா!- Dinamani

சுடச்சுட

  

  முத்திரை பதித்த முன்னோடிகள்: வலியா மன்னத்தால் ஹம்சா!

  By தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.   |   Published on : 24th March 2018 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm12

  (VALIA MANNATHAL HAMZA)

  அதிசயத்தின் மறுபெயர் "அமேசான்' என்றால் அது மிகையில்லை. இதுவே உலகின் மிக நீளமான நதிகளுள் ஒன்றாகும். பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், பெரு, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளின் வழியாகப் பாய்ந்தோடி வரும் ஜீவநதியாகும். இந்நதிக்குக் கீழே பூமிக்கு அடியில் ஏறத்தாழ 4 கி.மீ. ஆழத்தில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் மற்றொரு நதி ஓடிக் கொண்டிருப்பதை "வலியா மன்னத்தால் ஹம்சா' அவர்களின் தலைமையிலான குழு ஒன்று கண்டறிந்துள்ளது!

  பல்வேறு நாட்டின் புவியியல் வல்லுனர்களும் இவர்களது கண்டுபிடிப்பு உண்மைதானா என்று அறிய பல சோதனைகளை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். இறுதியில் இத்தகவல் உண்மைதான் என்பதை அறிந்தனர்!

  1970 களிலிருந்து 1980 வரை பிரேசில் நாட்டின் "பெட்ரோ பிராஸ்' ((VALIA MANNATHAL HAMZA)) என்ற நிறுவனம் ஹைட்ரோ கார்பன் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்காக 241 இடங்களில் எண்ணைக் கிணறுகளைத் தோண்டியது. ஆனால் அவற்றில் எதுவும் கிடைக்காததால் திட்டத்தைக் கைவிட்டது. 

  உலக வெப்பமயமாதல் மற்றும் புவியின் உள்வெப்பநிலை ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய ஆய்வை எல்லா நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பிரேசிலின் "தேசியப் புவியியல் ஆய்வகம்' (NATIONAL GEOGRAPHIC OBSERVATORY) அந்த எண்ணெய்க் கிணறுகளின் தட்ப வெப்ப நிலையை அறிய ஆய்வு மேற்கொண்டது. 

  இப்பணிக்குப் பேராசிரியர் ஹம்சா தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆய்வில் அமேசான் நதிக்கு அடியில் ஏறத்தாழ 4 கி.மீ. ஆழத்தில் நிலத்தடியில் ஆறு ஒன்று ஓடுவதைக் கண்டறிந்தனர். இதில் அதிசயம் என்னவெனில் இந்த ஆறும் அமேசான் போலவே 6000 கி.மீ. நீளம் ஓடுகிறது என்ற செய்திதான்!
  நம்ப முடியாத இத்தகவலை சோதிக்கவே பல நாடுகளும் பிரேசிலில் கூடின! ஏனெனில் பூமிக்கு அடியில் ஆறுகள் இருப்பது இயற்கைதான் என்றாலும் இத்தனை நீளமான ஆறு இருப்பது சாத்தியமில்லை என்பது வல்லுனர்கள் கருத்து!

  இந்நதி "ஹம்சா' வால் கண்டுபிடிக்கப்பட்டதால் பிரேசில் நாடு இந்நதியை "ஹம்சா ஆறு' (HAMZA RIVER) என்றே அழைக்கிறது. ஆராய்ச்சித் துறையில் இந்தியர்களின் பங்களிப்பில் இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும்!

  கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் வலியா மன்னத்தால் ஹம்சா.' சிறு வயதில் தான் ஒரு அறிவியல் அறிஞராக வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்தது. இவரது உறவினர் ஒருவர் புவியியல் பற்றிப் படிக்குமாறு கூறினார். அதன்படியே கேரள பல்கலைக்கழகத்தில் புவியியல் முதுகலைப் பட்டம் பெற்றார். 1966 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் பணியைத் தொடங்கினார். 

  அந்நாட்களில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர். எனவே ஹம்சா முனைவர் பட்டம் பெற விரும்பினார். தமது ஆய்வின் மூலப் பொருளாக ஆறுகளை எடுத்துக் கொண்டார். கனடா நாட்டில் புவியியலுக்கான உயர்கல்வித் துறை மிகச் சிறப்பாக இயங்கி வந்தது. எனவே 1968 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள "ஒன்டாரியோ' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு முனைவர் பட்டமும் பெற்றார். 

  அமேசான் ஆறு இவரை எப்பொழுதும் வசீகரிக்கும் ஒரு விஷயமாக இருந்தது. எனவே 1974 ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள தேசிய புவியியல் ஆய்வகத்தில் பணிக்குச் சேர்ந்தார். புவி வெப்பமயமாதலின் காரணங்களை அறிதல் மற்றும் அமேசான் ஆறு பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுதல் போன்றவை இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. 

  அமேசான் நதியில் இருந்து ஆவியாகும் நீர்த்துளிகள் நீராவியாக மாறி இந்நதிக்கு மேலே வானில் பல கிலோ மீட்டர்கள் தொலைவில் மிதந்தபடியே இருக்கின்றன என்ற உண்மையை இவர் கண்டறிந்தார். எனவே அதற்குப் "பறக்கும் ஆறு' என்று பெயரிட்டார். அவை மீண்டும் அமேசான் நதியின் மீதே மழையாகப் பொழிவதையும் இவர் கண்டறிந்தார். இந்த அதிசய கண்டுபிடிப்புகளால் மகிழ்ந்த பிரேசில் அரசு இவரை தேசிய புவியியல் கழகத்தின் தலைவராக நியமித்தது!

  மேலும், அமேசான் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அட்லாண்டிக் கடலின் உப்புத் தன்மை மிகக் குறைவாக இருக்கும். இது ஏன் என்று எந்த நாட்டு வல்லுனர்களாலும் கூற முடியவில்லை! புரியாத இந்த புதிருக்கும் விடை கண்டறிந்தார் ஹம்சா! பூமிக்கடியில் ஓடும் ஹம்சா நதியும் அமேசான் நதியும் ஒரே இடத்தில் கடலில் சங்கமிக்கின்றன. ஆகவே அப்பகுதியில் கடல் நீரில் உப்புத் தன்மை (SALINITY) குறைவாக உள்ளது என்று கூறினார். இது அத்தனை நாட்டு வல்லுனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

  இப்பெருமைமிகு இந்தியர் தற்பொழுது ரியோ - டி - ஜெனீரோவில் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். உலகின் பல நாட்டு அறிவியல் கழகங்களும் இவருக்குப் பல விருதுகளை வழங்கியபடியே இருக்கின்றன. சிறப்புரை ஆற்ற இவரை அழைத்தபடியே இருக்கின்றன. 

  தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

  அமேசான் நதியின் நீளமும் ஹம்சா நதியின் நீளமும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் ஹம்சா நதியின் அகலம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது! ஆம்! 200 கி.மீ. முதல் 400 கி.மீ. வரை பரவியுள்ளது!

  ஏறத்தாழ 40 ஆண்டுகள் அயல்நாட்டில் வசித்தாலும் திரு ஹம்சா இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். 

  அமேசான் நதியின் அதிசயங்கள் பற்றிப் பேசும்பொழுது "இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்திரா, நர்மதை நதிகள் அமேசானைவிட அதிக ரகசியங்களைத் தம்முள் கொண்டவை! அவற்றை ஆராய ஒரு மனித ஆயுள் போதாது!' என்று கூறுகிறார்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai