Enable Javscript for better performance
அரங்கம்: பூங்காவில் ஒரு தினம்!- Dinamani

சுடச்சுட

  
  sm2

  காட்சி- 1

  இடம் - குளத்தங்கரை 
  மாந்தர் - பாலன், குமணன், 

  (குளத்தங்கரை ஆலமரத்தின் கீழ் இருந்த கல்லில் பாலன் அமர்ந்திருக்கிறான். குமணன் வருகிறான்)

  குமணன்: பாலன்....ஏன் முகத்தை இப்படிச் சோர்வா வெச்சுகிட்டு இருக்கே?...
  பாலன்: என்னை எப்படி உனக்குத் தெரியும்? 
  குமணன்: நீ படிக்கிற அதே பாரதி பள்ளியிலேதான் நானும் படிக்கிறேன்.....நானும் பத்தாம் வகுப்புதான். ஆனா நான் "இ' பிரிவு....,நீ "அ' பிரிவுதானே! 
  பாலன்: ஆமா, இனிமே நாம் நண்பர்கள்....என் சோர்வா இருக்கேன்னு கேட்டியே.....எனக்கு இந்தப் படிப்பே பிடிக்கலே.....எங்கேயாவது கூலி வேலை கிடைச்சா போயிடுவேன்.....
  குமார்: அதுக்கும் பட்டதாரிங்க தாயாரா இருக்காங்க.....நாம பத்தாம் வகுப்பு.....அங்கேயும் கடைசியிலேதான் நிற்கணும்.....
  பாலன்: சரி,....நான் என்னதான் செய்யறது?....புத்தகத்தைப் பிரிச்சாலே ஒரே தலைவலி....
  குமணன்: விளையாட்டுத் திடல்ல ஆடி ஓடி ஆனந்தமா குதிக்கிறோம்.....ஆனா படிப்புன்னா அந்த மகிழ்ச்சி இருக்காது. இது உனக்கு மட்டுமில்லே.....பலருக்கும்தான்!
  பாலன்: அதுவும் இந்தத் தேர்வுன்னு ஒண்ணு வைக்கிறாங்க பார்....அவ்வளவு அலுப்பா இருக்கு.....அதுக்கு பதிலா விளக்கெண்ணெய் வேப்ப எண்ணெய் ரெண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் குடிக்கலாம்!....
  குமணன்: சரி வா,....அதெயெல்லாம் மறந்திட்டு நாம் பக்கத்திலே இருக்கிற பூங்காவுக்குப் போகலாம்!

  (போகிறார்கள்)


  காட்சி - 2

  இடம் - பூங்கா
  மாந்தர் - தோட்டக்காரர் சிவராமன், குமணன், பாலன். 

  (பூங்காவில் பாலன் பார்த்த காட்சி அவனை வியப்புக்குள்ளாக்குகிறது)

  பாலன்: (குமணனிடம்) விளக்குப் போட்டுட்டாங்க.....ராத்திரி....இந்த மனுஷன் இன்னும் எதையோ கொத்திக்கிட்டு இருக்காரே...

  (அவர் புதிய புல் பத்தைகளை அழகாகப் பதிக்கிறார்..., பூச்செடிகளை நட்டு, நீர் ஊற்ற வசதியாக சுற்றிலும் மண்ணை அணைக்கிறார். ஒரு துண்டுத்தாள் தென்பட்டாலும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்.)

  குமணன்: இந்தப் பூங்கா போன மாதம் எப்படி இருந்தது தெரியுமா? 
  பாலன்: தெரியும்....செடியெல்லாம் காய்ஞ்சுபோய்க் குச்சிதான் நின்னுது.....இருந்த மரங்கள்ல பாதிக்குமேல் பட்டுப் போச்சு!.....புல்தரை கட்டாந்தரையா இருந்தது. எல்லா இடமும் ஒரே குப்பை....கூளம்.
  குமணன்: எல்லாத்தையும் நல்லா கவனிச்சிருக்கியே....
  பாலன்: ஒரு நாள் பள்ளிக்கூடம் போய் வந்தாலே ஒரே சலிப்பா இருக்கு....இவருக்குச் சலிப்பே வராதா? 
  குமணன்: வராம எப்படி இருக்கும்? அதை அவரிடமே கேட்போம்!...

  காட்சி - 3

  இடம் - பூங்கா
  மாந்தர் - சிவராமன், குமணன், பாலன். 

  குமணன்: ஐயா..., இந்த இடத்தைப் பசுமையா அழகா மாத்திட்டீங்க....குழந்தைங்க இனிமே வருவாங்க....இந்த இடத்தை விட்டுப்போன அணில், குருவிகள், பறவைகள் எல்லாம் மறுபடி வரும்!....
  சிவராமன்: நந்தியாவட்டை, அரளி, செம்பருத்தி, கனகாம்பரம், மல்லிகை, முல்லைன்னு புதுசாப் பல செடிகள்....இதெல்லாம் கொஞ்ச நாளில் மொக்கு விட்டுப் பூக்கும்.

  (அவருடைய முகத்தில் மலர்ச்சி)

  சிவராமன்: ஓடற எந்திரம் சலிப்படைஞ்சா சத்தம் போடும். கொஞ்ச நேரம் நிறுத்தி மசகு எண்ணெய் போட்டு மறுபடி ஓடவிட்டா அதோட வேலையைச் செய்யும்!....எனக்கும் அப்படித்தான்!.....களைப்பு வரும்....என்ன வேலை இதுன்னு சலிப்பு வரும்.....அந்த நினைப்பு கொஞ்ச நேரம்தான்!
  பாலன்: பிறகு? 
  சிவராமன்: மோர்....இல்லேன்னா தேநீர் குடிப்பேன்...கொஞ்சநேரம் ஓய்வு.....மறுபடி வேலையிலே இறங்கிடுவேன்!
  குமணன்: முன்னே ஒருத்தர் இங்கே இருந்தாரே....யாராவது அதிகாரிங்க வர்றாங்கன்னா செடிக்குத் தண்ணீர் ஊற்றுவார்!
  பாலன்: அப்புறம் அவர் என்ன ஆனார்? 
  குமணன்: இந்தப் பூங்காவைப் பொட்டல் வெளியாக்கிவிட்டு சொல்லாமலே வேலையை விட்டு நின்னுட்டார்! 
  சிவராமன்: ஒவ்வொரு இடமும் ஒரு பூங்காதான்....அதை அழகா வைக்கறதும்....அலங்கோலமா மாத்தறதும் அந்தப் பொறுப்பிலே இருக்கறவங்க கையிலேதான் இருக்கு.....வேலையை ஆர்வமா செஞ்சா சலிப்பு ஒடிடும்! மாற்றத்தைக் கொண்டு வரணும்கிற துடிப்பு இருந்தா களைப்பு பறந்திடும்!நம்ம மனசிலே ஒரு தனி நிம்மதி கிடைக்கும்! நம் உழைப்புக்கான கூலியைக் கடவுள் ஒருநாள் இல்லேன்னாலும் இன்னொருநாள் ஏதாவது ஒரு வடிவத்திலே தருவார். 
  (பாலன் அவர் சொல்வதை அமைதியாகக் கவனிக்கிறான்) ....படிப்பையே எடுத்துக்குங்க....சிலருக்கு வேப்பங்காய் மாதிரி கசப்பா இருக்கும்....அதே வேப்பங்காய் பழமாகி அதன் கொட்டையை மண்ணிலே போட்டு மரமான பின்னால அது தர்ற நிழல் எவ்வளவு குளிர்ச்சியா,...ஆனந்தமா இருக்கு!....சலிப்பா இருக்கு....எரிச்சலா இருக்குன்னு அந்தக் கல்விச் செல்வத்தை வேண்டாம்னு சொல்லலாமா?...அப்புறம் எதிர்காலமே இருளாயிடுமே...

  (பாலன் அந்தக் கருத்து அவனுக்காகவே அவர் மூலம் வந்தது என நினைக்கிறான்)

  குமணன்: பாலன்....தினமும் நமக்கு என்ன வேலை இருந்தாலும் இங்கே வருவோம்! பாலன்: நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்!


  காட்சி - 4

  இடம் - வீடு
  மாந்தர் - பாலன், கவிதா, கமலா.

  ( தாய் கமலாவிடம் மகள் கவிதா ஓடி வருகிறாள்)

  கவிதா: அம்மா!...., நம்ம வீட்டிலே ஒரு அதிசயம் நடக்கு!
  கமலா: என்ன அது?
  கவிதா: அண்ணன் பாலன் எப்போதும் இல்லாதபடி காலையிலேயே எழுந்து குளிச்சிட்டு,....தோட்டத்திலே செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினான்....
  கமலா: நேரத்திலே எழுந்ததே அதிசயம்!....
  கவிதா: ஆமாம்மா....நீங்க நம்பவே முடியாத இன்னொரு விஷயம்....மொட்டை மாடிக்குப் போய் அமைதியா உட்கார்ந்து பாடத்தைப் படிக்கிறான்!
  கமலா: இனிமே நமக்கு நல்ல காலம்தான்!
  கவிதா: ஒரே நாளில் இவன் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவே இல்லே!.....

  (பாலன் கீழே வருகிறான்....எப்போதும் புத்தகங்களைக் கண்ட இடத்தில் போடும் அவன் எல்லாவற்றையும் தேடி எடுத்து அலமாரியில் வைக்கிறான்! தேவையானதைப் பாடவேளை அட்டவணையைப் பார்த்து எடுத்துப் பையில் வைக்கிறான்)

  கமலா: பாலா....இன்றைக்கு நீ புது ஆளா மாறிட்டே!.....
  பாலன்: எனக்கு இனிமே படிப்பு கசக்கவே கசக்காது!.....படிப்பு மேலே எனக்கு ஆர்வம் வந்திடுச்சு!
  கமலா: படிப்புன்னு சொன்னாலே உனக்கு எரிச்சல் வரும்.....எப்படி மாறினே? 
  பாலன்: அதை நான் பள்ளி விட்டு வந்ததும் சொல்றேன்...

  (....வந்ததும் குமணனையும் அவர்களையும் அந்தப் பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறான்....தோட்டக்காரர் சிவராமனை அறிமுகம் செய்கிறான்......அவருடைய உழைப்பில் உருவான அந்தப் பூங்காவும் அவருடைய சொற்களும் அவனிடம் ஏற்படுத்திய மாற்றத்தை ஆர்வத்தோடு கூறுகிறான்.)

  திரை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai