Enable Javscript for better performance
முத்திரை பதித்த முன்னோடிகள்: ராக்கேஷ் சர்மா- Dinamani

சுடச்சுட

  

  முத்திரை பதித்த முன்னோடிகள்: ராக்கேஷ் சர்மா

  By தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.   |   Published on : 31st March 2018 03:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm1

  1984ஆம் ஆண்டு இந்தியர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வு நடந்தது. 
  அதுதான் இந்தியர் ஒருவரின் விண்வெளிப்பயணம். அவர்தான் திரு ராக்கேஷ் சர்மா ஆவார்.அமெரிக்கா, பிரிட்டன்,ஜப்பான் போன்ற நாடுகள் வியப்படைந்தன. பாராட்டின. 
  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) பல ஆண்டுகளாகவே இந்தியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. தற்பொழுது இருப்பது போன்ற தொழில்நுட்ப வசதிகள் அந்நாட்களில் இல்லை. எனவே விண்வெளி ஆய்வின் முன்னோடியான ரஷ்யாவின் துணையோடு இந்தியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தது. இதற்கு "இன்டர் காஸ்மோஸ் ப்ரொக்ராம்' என்று பெயரிட்டனர். 
  இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் மற்றும் தலைமை விமானியாக இருந்த திரு ராக்கேஷ் சர்மா இதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 13-1-1949 அன்று பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பிறந்த ராக்கேஷ் சர்மா ஹைதராபாத்தில் கல்வி பயின்றார். தனது 18 ஆவது வயதில் 1966 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்புக் கழகத்தில் (NATIONAL DEFENCE ACADEMY) விமானப்படைப் பிரிவில் பயிற்சி பெற்றார்.
  1970 ஆம் ஆண்டு பைலட் ஆகத் தேர்ச்சி பெற்றார். இந்திய விமானப்படையில் 1971 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தயாராகும் விமானங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விமானங்களை ஓட்டிப்பார்த்துப் பரிசோதிக்கும் விமானியாக ((TEST PILOT) பணியாற்றினார். இதனால் உலகில் இருந்த எல்லா வகையான விமானங்களையும் இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. MIG எனப்படும் (MIKOYAN GUREVICH) வகை விமானங்களை அதிகத் திறமையோடும், நேர்த்தியோடும் இயக்கினார். 1982 ஆம் ஆண்டு விண்வெளியில் பயணிக்கத் தேர்வு செய்யப்பட்டார்!
  கசகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இவருக்குக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதற்காக அவரும் அவர் மனைவியும் ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டனர். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் "சோயுஸ் - டி -11' (SOYUZ - T - 11) என்ற விண்கலத்தில் ரஷ்ய வீரர்கள் "யூரி மாலிஷேவ்' (YURI MALYSHEV) மற்றும் தலைமைப் பொறியாளர் "கென்னடி ஸ்ட்ரெக்காலோவ்' (GENNADI STREKALOV) உடன் விண்வெளிக்குப் பயணம் செய்தார்! 
  இவர் 7 நாட்கள், 21 மணி 40 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தார். அச்சமயத்தில் இவர்களது குழு பயோ மெடிசின் -(BIO-MEDICINE) மற்றும் ரிமோட் சென்சிங் -(REMOTE SENSING) ஆகிய துறைகளில் பல ஆய்வுகளை மேற்கொண்டது! 
  விண்வெளியில் இருந்தபடியே அவர்கள் மாஸ்கோவில் இருந்த ரஷ்ய அதிகாரிகளையும் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களையும் சந்தித்தனர். இப்பெருமை மிகு நிகழ்ச்சி தூர்தர்ஷன் மூலமாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பானது! பல நாடுகள் இம்முயற்சியை ப் பாராட்டின! இந்திய வரலாற்றில் இது ஒரு மாபெரும் சாதனையாகும்! 
  விண்வெளியில் இருந்த ராக்கேஷ் சர்மாவிடம் பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி, ""விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படித் தெரிகிறது?'' என்று கேட்டார்! அதற்கு அவர், ""எல்லா நாடுகளையும்விட மேன்மையானது எங்கள் பாரத நாடு!'' என்ற பெயருடைய ""சாரே ஜஹான் சே அச்சா'' என்ற பாடலைப் பாடினார்! இந்திய தேசமே கை தட்டி ஆர்பரித்தது! 
  ""வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!'' என்ற பாரதியின் வரிகள் அன்று நனவானது! 
  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய வரிசையில் இந்தியா 14ஆவது இடம் பெற்று வரலாறு படைத்தது! இச்சாதனைக்குப் பிறகு 1987 ஆம் ஆண்டு "ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' கம்பெனியில் அவ்ர விமானங்களைப் பரிசோதிக்கும் விமானியாகப் பணியாற்றினார்! இந்தியாவிலேயே தயாரான இலகு ரக போர் விமானம் "தேஜஸ்' ஸின் (LIGHT COMBAT AIR CRAFT "TEJAS") வடிமமைப்பிலும் செயலாக்கத்திலும் பெரும் பங்கு வகித்தார். 
  இவரது சாதனைக்காக சோவியத் அரசு "சோவியத்தின் கதாநாயகன்' (HERO OF SOVIET UNION) என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தது! இந்திய அரசு இவருக்கும், இவருடன் பணிபுரிந்த இரு சோவியத் வீரர்களுக்கும் "அசோக் சக்ரா' விருது வழங்கி சிறப்பித்தது! 

  அறிந்து கொள்வோம் வாருங்கள்!

  1. விண்வெளிக்குச் சென்ற 128 ஆவது மனிதர் ராக்கேஷ் சர்மா ஆவார்! 
  2. அஹமதாபாத்தைச் சேர்ந்த சிறிய வெற்றிலை வியாபாரி ஒருவர் ஆண்டுதோறும் ராக்கேஷ் சர்மாவிற்கு மூன்று வாழ்த்து அட்டைகளைத் தவறாமல் அனுப்பி வருகிறார்! புத்தாண்டுக்கு ஒன்று! அவரது பிறந்த நாளுக்கு ஒன்று! அவர் விண்வெளிக்குச் சென்ற ஏப்ரல் 2 ஆம் நாளுக்கு ஒன்று! 
  3. இந்திய விண்வெளி ஆய்வு மையம் விமானப்படையின் திறமை மிக்க 150 விமானிகளை விண்வெளிப் பயணத்திற்கெனத் தேர்வு செய்தது. அவர்களுள் இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராக்கேஷ் சர்மா மற்றும் ரவீஷ் மல்ஹோத்ரா ஆகிய இருவர் மட்டுமே! ஆனால் கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ராக்கேஷ் சர்மா மட்டுமே தகுதியானவர் என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் தேர்ந்து எடுத்தது! 
  4. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களா தேஷ் போரில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். 
  5. விண்வெளிப் பயணத்திற்கு முன் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். அவற்றுள் ஒன்று புவி ஈர்ப்பு விசை அற்ற (ZERO GRAVITY) தனி அறையில் சில மணி நேரம் இருப்பது. இது கடுமையான தலைவலி, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ரத்த அழுத்தம் ஒரே சீராக இருக்காது. அந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட சமயத்தில் இவர் சில யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டார். இதன் மூலம் தனது உடல் நிலை மற்றும் மன நிலை போன்றவற்றை சமநிலைப் படுத்த முடிந்தது என்று தலைமை ரஷிய அதிகாரியிடம் கூறினார். இதற்குப் பின்னரே விண்வெளி வீரர்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. 
  6. ராக்கேஷ் சர்மா ஓய்வு பெறும் சமயத்தில் "விங் கமாண்டர்' என்ற பதவியை வகித்தார். தற்பொழுது குன்னூரில் வசித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai