ஓடும் ரயில்....

மற்றவர் - வந்ததெல்லாம் வாங்கியாச்சு!....பேப்பர் படிக்கணும்....ஏதையாவது வாயில் மென்றால்தான் படிக்க முடியும்!....
ஓடும் ரயில்....

அரங்கம்
 காட்சி - 1,
 இடம் - இரயில் பெட்டி,
 மாந்தர் - பயணிகள், பழம் கடலை விற்போர், முருகன்.
 (மருதூர் இரயில் நிலையத்தில் அந்த இரயில் வந்து நிற்கிறது. பயணிகள் விரைவாக வந்து ஏறுகின்றனர். ....பழம், பட்டாணி,
 நிலக்கடலை விற்பவர்கள் வந்து தொற்றிக் கொள்கிறார்கள். இரயில் புறப்படுகிறது)
 வியாபாரி - சாத்துக்குடி, சாத்துக்குடி....
 (வாங்கியவர்கள் தோலை உரிக்கிறார்கள்.... சுளையைத் தின்றுவிட்டுத் தோலை வண்டியிலேயே போடுகிறார்கள்.... விதைகள் அங்கும், இங்கும் சிதறுகின்றன..... வாழைப்பழம் விற்பவர் வருகிறார்....)
 வியாபாரி- வாழைப்பழம்.... வாழைப்பழம்....
 (பழத்தை வாங்கித் தின்றவர்கள், தோலைத் தம் காலடியிலேயே போடுகிறார்கள்....வண்டிக்குள் அங்கமிங்கும் விளையாடிய ஒரு குழந்தை தோலில் வழுக்கிக் கீழே விழுகிறது. ஒருவர் ஓடி வந்து பின் மண்டை அடிபடாமல் காப்பாற்றுகிறார்....)
 வாழைத் தோலைப் போட்டவர் : ரயில்லே குழந்தைகளை இப்படிப் பொறுப்பில்லாம விடறாங்க பாருங்க....
 மற்றவர் : (சாத்துக்குடித் தோலைக் கீழே போட்டவாறு...) வீடுன்னு நினைச்சுக்கிட்டு இப்படி விளாயாட விடறாங்க.....இது சரியில்லே....பொறுப்பு வேணும்.....
 (கடலை அணி வருகிறது....)
 வியாபாரிகள் - சூடான நிலக்கடலை,..... நிலக்கடலை.....பட்டாணி,....பட்டாணி....
 (கடலை வியாபாரம் சூடு பிடிக்கிறது....வாங்கியவர்கள் விரலால் மேல் தோலை அகற்றி, வாயால் ஊதுகிறார்கள்.... கீழே போடுகிறார்கள்....)
 பயணி - இந்த ஊர் நிலக்கடலை நல்லா இருக்கும்....
 மற்றவர் - ஒண்ணு ரெண்டுசொத்தை!.....அஞ்சு ரூபாய்க்கு பத்து கடலை கொடுக்கிறான்!....
 (தோல் காற்றில் பறக்கிறது....சிலருடைய கண்ணில் விழுகிறது.... முகத்தைச் சுளிக்கிறார்கள்....இருவர் அரசியல் பேசிக்கொண்டு வெற்றிலைப் பாக்கை மெல்கிறார்கள்....மீதிச்
 சுண்ணாம்பை ஜன்னலில் தடவுகிறார்கள்....)
 ---- முருகன் என்று ஒரு சிறுவன் அந்தப் பெட்டிக்கு வருகிறான்----
 
 காட்சி - 2,
 இடம் - இரயில் பெட்டி,
 மாந்தர் - பயணிகள், முருகன்.
 (முருகன் பதினொன்றாம் வகுப்பு மாணவன். எளிய தோற்றம். முகத்தில் தெளிவு. கண்களில் ஆர்வம்....அவன் கழுத்தில் ஒரு மூங்கில் கூடையைக் கயிற்றால் இணைத்திருக்கிறான்....)
 பயணி - என்ன தம்பி கூடையிலே?...
 மற்றவர் - வந்ததெல்லாம் வாங்கியாச்சு!....பேப்பர் படிக்கணும்....ஏதையாவது வாயில் மென்றால்தான் படிக்க முடியும்!....
 (அவன் வைத்திருந்தது வெறுங்கூடை!....)
 பயணி - (வலுவாக...) இதென்ன வியாபாரம்?....வெறுங்கூடையோட.....சரியான பைத்தியம் போலிருக்கு!....
 மற்றவர் - இது ஒரு வகையான பிச்சை!....
 (அவனைச் சரியாகக் கவனிக்காமல் நுனிப்புல் மேயும் குணத்தோடு சொற்கள் வருகின்றன..... அவன் அவற்றைக் காதில் வாங்கவில்லை....பழத்தோல்களை எடுத்துக் கூடையில் போடுகிறான்....கடலைத் தோலை ஒரு பிரஷ்ஷால் ஒன்று சேர்த்து அள்ளுகிறான்....தாள்களையும் பொறுக்குகிறான்....சுண்ணாம்புக் கறையை கவனிக்கிறான்.....ஒரு ஈரத்துணியால் துடைக்கிறான்....சிலர் வியப்போடும்... வேறு சிலர் வேடிக்கையாகவும் பார்க்கிறார்கள் )
 பயணி - அரசாங்கமே இப்படி ஒரு ஆளைப் போட்டிருக்காங்க போலிருக்கு....நல்ல ஸ்கீம்!.....சம்பளம் எவ்வளவோ....
 மற்றவர் - இந்தத் தோலையெல்லாம் எடுத்துப் போய் வேறு ஏதாவது பிஸினஸ் செய்வானுங்க..... எதாவது லாபமில்லாம இப்படிச் செய்வாங்களா என்ன?....
 ஒரு பெண்மணி - (தன் கணவரிடம் மெதுவாக...) காலம் கெட்டுக் கிடக்குங்க....பொருளையெல்லாம் பத்திரமா வெச்சுக்கணும்.... கவனமா இருங்க....
 (அவன் அந்தக் குரல்களைப் பற்றிக் கவலைப்படாமல் வேலையை முடிக்கிறான்.....அடுத்த பெட்டிக்குப் போக நினைக்கிறான்......... ஒரு அன்புக் குரல் கேட்கிறது!)
 
 காட்சி - 3,

 இடம் - இரயில் பெட்டி,
 மாந்தர் - முருகன், மூதாட்டி, பயணிகள்.
 மூதாட்டி - தம்பி வா!....கொஞ்ச நேரம்
 இப்படி உட்காருப்பா....
 (தயங்கியவாறே நிற்கிறான்)
 மூதாட்டி - கூடையைக் கீழே வெச்சிட்டு உட்காருப்பா.....
 முருகன் - வேலை பாக்கி இருக்கும்மா....
 (பெரிவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து இரயில் பெட்டியின் தூய்மையைக் கெடுக்கும்போது அந்த அரும்பு பொறுப்போடு நடந்து அதை அழகுபடுத்துவதை நினைத்து மூதாட்டி கண் கலங்குகிறார்...)
 மூதாட்டி - உனக்கு ஏம்ப்பா இந்த வேலை?....
 முருகன் - பலபேர் வீட்டைச் சுத்தமா வைக்கிறாங்க....ஆனா பொது இடங்களை,....பொதுச் சொத்துக்களை அசுத்தம் செய்யறாங்க.... இந்த ரயில் சென்னை போக இன்னும் ஆறு மணி நேரமாவது ஆகும்!.....ஏறி உட்கார்ந்த உடனே இப்படி அசுத்தம் செஞ்சா சுகாதாரக்கேடுதானே....மற்ற பயணிகளுக்கு எவ்வளவு தொல்லை?.....இது நல்லதா அம்மா?....
 (அவர் அவனுடைய தலையைப் பாசத்தோடு தொடுகிறார்....)
 முருகன் - பள்ளியிலே நாங்க உறுதி மொழி எடுக்கிறோம்.... "எனது நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன்....இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன்....என் நாட்டுக்கும், என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன்......அவர்கள் நலமும், வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.....இதிலே இருக்கும் ஒவ்வொரு செய்தியும் நான் உணர்வு பூர்வமா பார்த்து அதை உண்மையாகவே செயல்படுத்த நினைக்கிறேன்....ஆசிரியர்கள் எனக்குத் துணையா இருக்காங்க....எங்க தலைமை ஆசிரியர் சொன்ன ஒரு செய்தி எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது....அதைச் சொல்கிறேன்.....
 நீங்களே ஆச்சரியப்படுவீங்க....
 (அதைக் கேட்க அந்த மூதாட்டியும் ஆர்வமாக இருக்கிறார்...கேலி செய்தோரின் கவனமும் திரும்புகிறது...)
 
 காட்சி - 4,
 இடம் - இரயில் பெட்டி,
 மாந்தர் - முருகன், மூதாட்டி, பயணிகள்.
 முருகன் - ஜப்பானில் இரயிலில் பள்ளி மாணவன் ஒருவன் பயணம் செஞ்சான்.....அவனுக்கு எதிரே ஒரு பெரியவர் காலியாக இருந்த பலகையில் கால்களை நீட்டினார்.....தூக்கம் வந்தது....அப்போ அவரோட "ஷூ' இப்படியும், அப்படியும் அசைஞ்சா பெயின்ட் அடிச்சிருக்கிற அந்தப் பலகையிலே கீறல் விழும்....இந்த இரயில் என் நாட்டுச் சொத்து.... சேதம் வரக்கூடாதுன்னு யோசிச்சான்..... அவரோட காலைத் தூக்கித் தன்னோட மடியிலே வெச்சான்....(வியப்பில் அமைதியாக இருக்கிறார்கள்....) ...குப்பையைத் தொட்டியிலே போட்டாலும் பொது இடங்களைத் தூய்மையா வைச்சாலும் ஒரு மரக்கன்றை வளர்த்தாலும், பொதுச் சொத்தைக் காப்பாத்தினாலும் "நாட்டுப் பற்று' தானே?
 (அவரவர் தம் தவற்றை நினைக்கிறார்கள்)
 மூதாட்டி - நீ செய்யறது நல்ல வேலை....உன் படிப்பு பாதிக்காதா?....
 முருகன் - பள்ளி விட்டு வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு உதவியா வேலை செய்வேன்....பிறகு விளையாட்டு....அதுக்கப்புறமா இரயிலில் ஏறுவேன்....இரண்டு மணி நேரம் இந்த வேலை.... இதுக்கு ஒரு நல்ல மனுஷன் சீசன் டிக்கட் வாங்கித் தந்தாரு....
 பயணி - நீ இறங்கிப் போன பின்னால யாராவது குப்பையைப் போட்டா?...
 முருகன் - நான் ஒரு விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடியும்..... முழு நேரக் காவலா இருக்க முடியாது..... நல்ல எண்ணமும் பழக்கமும் எல்லோருக்கும் வரணும்....
 மூதாட்டி - முருகா, நீ நல்லா இருக்கணும்..... எதிர்காலத்திலே சிறந்த தலைவனா
 வரணும்.....
 (அன்போடு ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவனிடம் தருகிறார்...)
 முருகன் - (மறுத்து...) வேண்டாம்மா.... நீங்க காட்டின அன்பே போதும்....
 மூதாட்டி - சரி, இந்த ஆரஞ்சுப் பழத்தையாவது வாங்கிக்க.... (வாங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கிறான்).... தம்பி, யார் யாருக்கோ மாலை போடறாங்க....உன் மாதிரி உண்மையா தொண்டு செய்கிற பிள்ளைகளுக்குத்தான் மாலை போடணும்....
 (வாழ்த்துகிறார்.... அவன் வணக்கம் சொல்கிறான்... "பாம்' என்ற ஒலியோடு வண்டி அடுத்த நிலையத்திற்குள் நுழைகிறது.)
 திரை
 
சோழ மைந்தன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com