கருவூலம்: கன்னியாகுமரி மாவட்டம்!

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையரால் கி.பி. 63 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தின் பழமையான  முதல் கிறிஸ்துவ தேவாலயம்.
கருவூலம்: கன்னியாகுமரி மாவட்டம்!

திருவிதாங்கோடு அரப்பள்ளி!

இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையரால் கி.பி. 63 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தின் பழமையான  முதல் கிறிஸ்துவ தேவாலயம். இதனை புனித தோமையார் சர்வதேச வழிபாட்டு நிலையமாக அறிவித்துள்ளார். 

ஆரஞ்சுப் பழத்தோட்டம்! - சுற்றுச் சூழல் பூங்கா

31 ஏக்கர் அரசு பழத்தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நீரூற்று, சிறுவர் பூங்கா, மூங்கில் பூங்கா, மூலிகைத் தோட்டம், பலவகை மரங்களோடு கூடிய பூந்தோட்டம் உட்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

அருவிக்கரை!

குமரி மாவட்டத்தின் அழகிய ஆற்றுப் பகுதிகளில் முதன்மையானது அருவிக்கரை.  மாத்தூர் தொட்டிப் பாலத்தின் கீழ் பகுதி வழியாக வரும் பரளியாறு, அருவிக்கரை வழியாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வளாகத்தைத் தொட்டவாறு "மூவாற்று முகத்தில்' கோதையாற்றுடன் இணைகிறது.  இவ்விடம் கண்களுக்குத் திகட்டாத விருந்தாகும். 

தேரூர் பறவைகள் சரணாலயம்!

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம்,  தேரூர், பறக்கை குளப்பகுதிகள் பறவைகள் சரணாலயமாகத் திகழ்கின்றன. 

முட்டம் கடற்கரை!

இக்கடற்கரையில் அலைகளின் வேகம் அதிகம்! மேடுபள்ளமான நிலப்பரப்பும், செம்மண் அகழி என இயற்கை எழில் மிக்க கடற்கரை. இங்குள்ள கலங்கரை விளக்கம் மிகப் பழமையானது. நாட்டில் உள்ள 193 கலங்கரை விளக்குகளில் இதுதான் முதலில் கட்டப்பட்டது. பழையான சர்ச் ஒன்றும் இங்குள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலம்.

சொத்தவிளை கடற்கரை!

நாகர்கோவிலுக்கு மிக அருகில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். அழகிய புல்வெளிகள், சிறுவர்பூங்காக்களோடு ஒரு காட்சி கோபுரமும் உள்ளது. 4 கி.மீ. நீளமுள்ள அழகிய கடற்கரை. 

வட்டக்கோட்டை!

திருவிதாங்கூர் அரசால் கடற்கரைப் பகுதியை பாதுகாக்க 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் செங்கல் கோட்டையாக இருந்தது. பின்னர் கல்கோட்டையாக மாறியது. 3.5 ஏக்கர் பரப்பில் 25 மீ உயரம் கொண்ட கோட்டையின் ஒரு பகுதி கடல் வரையிலும் மற்றொரு பகுதி மலைப்பகுதி வரையிலுமாக இருந்தது. தற்போது சில பாகங்கள் கடலுக்குள் உள்ளன. 

அமைதியான சூழ்நிலை, ஒருபுறம் கடல் அலைகள். மற்றொருபுறம் மலை என காட்சியளிக்கும் சுற்றுலாத்தலம். 

உதயகிரிக்கோட்டை!

புலியூர்க்குறிச்சி என்னும் இடத்தில் இக்கோட்டை உள்ளது. திருவாங்கூர் அரசர்கள் இதனை ராணுவத்திற்காக பயன்படுத்தினர். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 90 ஏக்கர் பரப்புள்ள இக்கோட்டை மார்த்தாண்ட வர்மரால் புதுப்பிக்கப்பட்டது.  உள்ளேயே 200 அடி உயரக் குன்று உள்ளது. 

பாரதமாதா கோயிலும், ராமாயணக் காட்சிக்கூடமும்!

 கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ளன. சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் ராமாயணக் காட்சிக் கூடம், பாரத மாதா கோயில் மற்றும் வீர ஆஞசநேயர் சிலை ஆகியன ஒரே வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு முழு ராமாயணமும் 108 நிகழ்வுகளாக ஆறு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்ட அளவில் ஓவியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முகப்பில் 27 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை உள்ளது.  மண்டபத்தின் மேல் மாடியில் வெண்கலத்தாலான 15 அடி உயர பாரதமாதா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பல தெய்வச் சிற்பங்களும், ஓவியங்களும், அலங்காரப்பூங்காவும், நீரூற்றும் உள்ளன.  

தேங்காய் பட்டினம்!

மகேந்கிர மலையில் உற்பத்தியாகும் பழையாறு  கடலுடன் சேரும் இடம்! அடர்ந்த தென்னந்தோப்புகள் உள்ளன. 

கடுக்கரை!

மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு நடுவில் ஒரு சிறிய குன்றின் கீழ் அமைந்துள்ளது. சிறிய அழகிய கிராமம். பசுமை மாறாக் காடுகளும், வற்றாத ஓடைகளும், வடக்கே உலக்கை அருவியும் உள்ளன. கண்ணுக்கினிய சுற்றுலாத் தலம்!

சங்குத்துறை!

நாகர் கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவிலேயே உள்ள சுற்றுலாத்தலம். குழந்தைகள் பூங்காவோடு இருக்கும் கடற்கரை. 

சுவாமி சிலைகள் ஊர்வலம்!

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் பத்மநாபபுரம்  அரண்மனையில் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் 1840 இல் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நவராத்திரி விழாவின்போது 3 ஆலயங்களின் 3 சுவாமி விக்கிரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு மேளதாளத்தோடு  செல்கின்றன. 

சிவாலய ஓட்டம்!

சிவராத்திரியின்போது கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டங்களுக்கு உட்பட்ட 12 சிவாலயங்களுக்கு சுமார் 110 கி.மீ. தூரத்திற்கு,

""கோவிந்தா!....கோபாலா!' என்ற முழக்கத்துடன் ஒடிச் சென்று இறைவனை வணங்குகிறார்கள். சைவ, வைணவ ஒற்றுமைக்காக ஏற்பட்ட வழக்கம் இன்று வரை தொடர்கிறது!

தமிழறிஞர் சிலைகள்!

பழம்பெரும் இலக்கண நூல்களை தந்த தொல்காப்பியருக்கு காப்புக்காட்டிலும், பண்டைத் தமிழறிஞர்கள் அதங்கோட்டாசானுக்கும், அதங்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழறிஞர் பனம்பாரனார் எழுதிய "பனம்பாரம்' என்ற நூலில் சில பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. அவருக்கு பனம்பழஞ்சியில் சிலை வைப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. 
குமரிக் கண்டம்! - சில தகவல்கள்!

இன்றுள்ள இந்தியாவின் தென் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் இருந்த நிலப்பகுதியே "குமரிக் கண்டம்' என்று கூறப்படுகிறது. தமிழ் இலக்கிய நூல்களில் இது குறித்த பல தகவல்கள் உள்ளன. பிற மொழி நூல்களிலும் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் சில தகவல்கள் உள்ளன. தமிழர்களின் பெருமைக்குரிய வரலாறு கி.மு. 10,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருதப்படுகிறது. இதனைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டதாகவும் முதல் மற்றும் இரண்டாம் தமிழ்ச் சங்கங்கள் குமரிக் கண்ட பகுதியில்தான் கூடியதாகவும் கூறப்படுகிறது. 

மொத்தம் நான்கு முறை ஏற்பட்ட  ஆழிப் பேரலைகளால் இப்பகுதி கொஞ்சம், கொஞ்சமாக கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்தவர்கள்தான் தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும்.

நாம் அன்றாடம் பார்க்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் கன்னியாகுமரியில் பார்க்கும்போது அற்புத அழகுடன் காட்சியளிக்கும்! அதிலும் பெளர்ணமி நாளில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! கடற்கரையில் உள்ள 58 அடி உயர தொலை நோக்கியுடன் பார்த்தால் தத்ரூபமாகப் பார்க்கலாம்!

நதிநீர் இணைப்பு!

மகேந்திரகிரி மலையில் உற்பத்தியாகும் பறவையாற்றையும், அதே மலையில் உற்பத்தியாகும் பழையாற்றையும்  கி.பி. 900 இல் பாண்டிய மன்னர் இரண்டாம் ராஜசிம்மன் இணைத்தார். பறவையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் நீண்ட பாறைகளைக் கொண்டு அணை கட்டப்பட்டது. உயரமான குன்றுகளைக் குடைந்து சுமார் 20 மைல் நீளத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் மூலம் பறவையாற்றின் நீர் பழையாற்றுக்கு வந்து சேர்ந்தது. 

ஆராய்ச்சி நிலையம்!

மலர் சாகுபடி ஆராய்ச்சிக்கென்று 2008 இல் "தோவாளை' யில் இந்நிலையம் ஏற்படுத்தப்பட்டது.  நெல் சாகுபடி ஆராய்ச்சிக்கான நிலையம் "திருப்பதிச் சாரம்' என்னுமிடத்தில் உள்ளது

"மருத்துவாழ் மலை!' எனப்படும்
 "மருந்து வாழ் மலை!'

அநுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றபோது விழுந்த பல துண்டுகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.  அரிய வகை மூலைகள் நிறைந்த மலை! இம்மலையில் சுமார் ஒரு கி.மீ. நீளத்திற்கும் மேலான குகைப் பாதை உளளது. மேலும் குகையினுள் 800 அடி வரை உயரம் உள்ள இடமும் உள்ளது! இங்குதான் ஸ்ரீ நாராயணகுரு சில ஆண்டுகள் தவமிருந்தார். கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றுகிறார்கள்.   

ஸ்ரீ நாராயணகுரு!-(1855-1928)

இவர் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீக ஆசான்களில் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். இவர் கேரளா, கர்நாடகா, தென் தமிழகப் பகுதிகளில் பல கோயில்களைக் கட்டி சாதி மத பேதமின்றி அனைவரும் வழிபட ஏற்பாடு செய்தார். ஏராளமானோர் இவரது போதனைகளைப் பின்பற்றி வருகின்றனர்.  "சுவாமி தோப்பு இந்த அமைப்பின் தலைமையிடமாகும். 

கைவினைப் பொருட்கள் தயாரித்தல்

தேனீ வளர்ப்பு, கற்சிற்பங்கள் செய்தல், நெசவுத் தொழில்,  மீன்பிடித்தொழில், விவசாயம், பூ விற்பனை, ரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், பனை ஓலைகளில் கலையழகுடன் கூடிய கைவினைப் பொருட்கள் தயாரித்தல், போன்ற பலவகைத் தொழில்களும் நிறைந்த மாவட்டம் இது! 
இயற்கைக் காட்சிகள் நிறைந்த  கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாச் செல்பவர்கள் வாழ்வில் மறக்க இயலாத மிக அழகிய ஆன்மீக  இடமும் கூட! 
முற்றும்.

தொகுப்பு :கே. பார்வதி திருநெல்வேலி டவுண் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com