கார்

ராம், மீனா, அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.... சுண்டல் சர்க்கரை பொங்கல் வாளி எடுத்து வாங்க!
கார்

அரங்கம்
 காட்சி 1
 இடம் - இல்லம்
 மாந்தர் - அலுவலக ஊழியர் வைத்தியநாதன்.
 அவர் மனைவி பாக்கியம், மகன் மாணவன ராம்,
 மகள் மாணவி மீனா. (நடுத்தரக் குடும்பம்)
 பாக்கியம் : என்னங்க. ஆபீஸில் ஊதிய உயர்வு தந்திருக்காங்கன்னு சொன்னீங்களே..கார் வாங்கலாங்க....
 ராம், மீனா : அப்பா, அப்பா! கார் வாங்குங்கப்பா!... குடும்பத்தோட போக ரொம்ப செüரியமா இருக்கும்!...
 வைத்தியநாதன் : வாங்கலாம். நாம வாங்கின பின் அதை பராமரிக்க முடியுமான்னும்,.... காருக்கு தினசரி தேவை இருக்குமா என்கிறதும்தான் என் யோசனை."
 பாக்கியம் : கோயிலுக்குப் போகலாம்!.....சினிமாவுக்குப் போகலாம்!.... ஊருக்குப் போனால் லக்கேஜ் எடுத்துப் போகலாம்!...
 வைத்தியநாதன் : நம்மை மாதிரி நடுத்தர வர்க்கத்தினருக்கு கார் என்பது தேவையில்லாத ஒன்று. கார் வெறுமனே இடத்தை அடைக்கும் பொருளா மாறிடக் கூடாதேன்னு தான் யோசிக்கறேன். பெட்ரோல் செலவு.... வண்டி பராமரிப்புச் செலவு இதெல்லாம் வேறே....அதான் யோசிக்கிறேன்!....

காட்சி 2
 இடம் - இல்லம்
 மாந்தர் - வைத்தியநாதன், பாக்கியம், ராம், மீனா.
 
 (புத்தம் புதிய கார் வாசலில் நிற்கிறது. குழந்தைகளுக்கு ஒரே குதூகலம். ஒரு வாரம் கோயில் சினிமா என்று எல்லோரும் போய் வருகிறார்கள். "கார்தான் இருக்கே' என்பதற்காக எடுத்ததற்கெல்லாம் அதில் வெளியே செல்லும் பழக்கம் வந்துவிடுகிறது----இப்படியே ஒரு வருடம் கழிகிறது---)
 
 பாக்கியம் : என்னங்க ஏதோ இன்ஷூரன்ஸ் கம்பெனியில் இருந்து தபால் வந்திருக்கு!....
 வைத்தியநாதன் : ஆமாம்!.... எட்டாயிரம் இன்ஷூரன்ஸ் புதுப்பிக்கக் கட்டணம் கட்டச்சொல்லி இருக்காங்க!.....போனவாரம் சர்வீஸ் விட்டதுக்கு மூவாயிரம் ஆச்சு!....
 பாக்கியம் : அடப் பாவமே!.... கார் வாங்கி ஒரு வருடத்துகக்குள்இத்தனை செலவா?..... கார் நிறுத்த பார்க்கிங் கட்டிய செலவு ஒரு லட்சம் ஆயிடுச்சே!.... இதைத் தவிர வெளியூர் போனா டோல் கட்டணங்கள் வேறே!.... . இது என்ன யானை. கட்டி தீனி போடற மாதிரி இருக்கே!....
 வைத்தியநாதன் : பேட்டரியில் மின்சாரம் தங்க வாரம் ஒரு தரம் பத்து கிலோமீட்டராவது ஓட்டச் சொல்றாங்க.... தேவையோ இல்லையோ ஓட்டியாகணும்!....
 பாக்கியம் : அவசியம் தேவை என்பவர்கள்தான் கார் வாங்கணுங்க.... நமக்கு இது சுமையா மாறிடுச்சே!.... இப்போ என்ன செய்யறது?...
 வைத்தியநாதன் : வித்திடலாமா?....
 (குழந்தைகள் முகம் வாடிவிடுகிறது)
 
 ராம், மீனா : அப்பா!.... விக்க வேணாம். யாராவது டிரைவர் வச்சு டாக்ஸியாக ஓட்டலாம்பா!....
 பாக்கியம் : நம்ம வேலைக்கார அம்மா சரசுவோட மூத்த பையன் பாலு, பிளஸ் டூ படிச்சுட்டு டிரைவரா இருக்கான். சொந்தமா கார் வாங்க வசதி இல்லாததால் குறைச்ச சம்பளத்துக்கு ஒரு கடையில் வேன் ஓட்டறான். அவனை டிரைவரா வச்சு டிராவல்ஸ் நடத்தலாம்."
 வைத்தியநாதன் : சரி,... வரச் சொல்லு!.... கேட்டுப் பார்ப்போம். இதை வித்தாலும் பாதி விலைக்கு தான் போகும்ன்னு கார் புரோக்கர் என் நண்பர் சொல்றார்."

காட்சி 3
 இடம் - வீடு
 மாந்தர் - டிரைவர் பாலு, பாக்கியம்
 வைத்தியநாதன் ஆகியோர்.
 
 வைத்தியநாதன் : இந்தாப்பா பாலு!.... கார் சாவி. டேஷ்போர்டில் காரை டிராவல்ஸ் காரா மாத்தின காகிதங்கள் இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கு."
 பாலு : கவலையே படாதீங்க சார்!.... என் சொந்த வண்டியா ஜாக்கிரதையா ஓட்டறேன். (அப்போது பாலு கைபேசி ஒலிக்கிறது.) ஆமாங்க,.....எங்கே காஞ்சிபுரம் போகணுமா?... போகலாங்க. போகவர கிலோமீட்டருக்கு பத்து ரூபாங்க. சரி பத்து நிமிஷத்தில் வண்டி வந்திடும்.... ஐயா, முதல் சவாரி ஒரு கல்யாண பார்ட்டி.போயிட்டு வரேன்....
 வைத்தியநாதன் : போயிட்டு வாப்பா!...

காட்சி 4
 இடம் - டிராவல்ஸ் கம்பெனி.
 மாந்தர் - வைத்தியநாதன்
 (இப்போது வைத்தியநாதன் மெள்ள மெள்ள டிராவல்ஸ் நடத்தும் அனுபவம் பெற்று இன்னொரு காரும் பாக்கியம் டிராவல்ஸ்கம்பெனியில் சேருகிறது)
 
 வைத்தியநாதன் : ( போன் ஒலிக்கிறது.... பேசுகிறார்.... பாக்கியம் டிராவல்ஸ் தாங்க.... எங்கே ஏர்போர்ட் போகணுமா..பத்து மணிக்கா வந்திடுங்க....
 
 (மிகச் சரியான கட்டணம் பராமரிப்பு இவற்றால் பாக்கியம் டிராவல்ஸ் பெரிய கம்பெனியாக மாறுகிறது. மூன்று வருடங்களில் நான்கு கார்கள் மேலும் சேர்ந்து விட்டன. வைத்தியநாதன் இப்போது முழு நேர கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபட தன் உத்தியோகத்தையும் விட்டு விட்டார்)

காட்சி 5
 இடம்- பாக்கியம் டிராவல்ஸ் கம்பெனியில் ஆயுத பூஜை
 மாந்தர் : வைத்தியநாதன், டிரைவர் பாலு,
 பாக்கியம், ராம், மீனா.
 வைத்தியநாதன் : என்னப்பா பாலு டிரைவர்கள் பத்து பேரும் வந்தாச்சா?...
 டிரைவர் பாலு : எல்லோரும் வந்தாச்சுங்க ஐயா!.... வண்டி எல்லாம் கழுவி பூஜைக்கு தயாரா இருக்குங்க ஐயா!....
 வைத்தியநாதன் : பாக்கியம் பூஜை சாமான்கள் எல்லாத்தையும் கொண்டு வா!.... பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி எல்லாம் ரெடியா?,.... சுண்டல் பிரசாதம் ரெடியா? .... கொண்டுவா!....
 பாக்கியம் : இதோ ரெடிங்க!....
 பாக்கியம் : ராம், மீனா, அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.... சுண்டல் சர்க்கரை பொங்கல் வாளி எடுத்து வாங்க!.... பாலு, சிதறு தேங்காய் இந்தாப்பா!.... உடைச்சு பூஜையை ஆரம்பிங்க!...
 வைத்தியநாதன் : ( பிள்ளைகளிடம்) பசங்களா!.... நம்ம கம்பெனி இந்த அளவு பெரிசா வளர நீங்க தான் ஐடியா தந்தீங்க..... இன்னும் ரெண்டு வண்டி வாங்கப் போகிறோம்!.... பேங்கில் உத்தரவு வந்திருக்கு!....
 (பாக்கியம் .எல்லோருக்கும் பூஜை முடிந்ததும் வாழை சருகு தொன்னையில் பிரசாதம் வழங்குகிறார்.)
 (எல்லோர் முகத்திலும் சந்தோஷம்!)
 
 (திரை)
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com