மரங்களின் தாய்!
By DIN | Published On : 27th April 2019 11:06 AM | Last Updated : 27th April 2019 11:06 AM | அ+அ அ- |

பாராட்டுப் பாமாலை! 37
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
கர்நாடக குக்கிராமம் ஒன்றில்
கல்குவாரி ஒன்றினில் பணி செய்யும்
கர்நாடகப் பெயரினையே பெற்ற
"திம்மக்கா' எனும் பேர் உடைய
நிர்வாகத் திறமையது கொண்ட
நங்கையவள் படிப்பறிவே இல்லாள்!
ஓரு நாளும் பள்ளிக்கே செல்லாத
அவருக்கோ "நூற்றியேழு' அகவை!
திருமணமும் செய்தேதான் வாழ்ந்தாள்!
ஒரு மழலை இன்றி அவள் தவித்தாள்!
ஒரு சமயம் தற்கொலைக்கே துணிந்தாள்!
அவர் கணவர் தடுத்து அவரைத் தேற்றி
விருப்பமதை இயற்கையொடு இணைத்தார்!
வாஞ்சையோடு மரங்களையே நட்டார்!
திறமாக அவர் நட்ட மரங்கள்
தொகையினிலே நீண்டதுவாம் கேளீர்!
ஆலமரம் மூந்நூற்றெண்பத் தைந்தாம்!
அவை இன்று அவர் பேரே சொல்லும்!
கோலமிகு "திம்மக்கா' அவற்றை
மழைக்காலம் தன்னில்தான் நடுவார்!
ஞாலமிதில் இதுவரையில் நட்ட
மரங்களது தொகைஎட் டாயிரம்!
சாலைகளில் மரங்களையே நட்டு
சிறப்பாகப் பசுமை வளம் செய்கிறார்!
"சாலுமரதா திம்மக்கா' இன்று
சனநாயக நாட்டின் உயர் விருதாம்
"பத்மஸ்ரீ' பெற்றுள்ளார் கேளீர்!
பண்பட்ட அவர் பணியைப் பாரீர்!
ஆலமரம் நட்டவரே வாழி!
அவர் வழியில் நாமெல்லாம் செல்வோம்!
ஞாலமதில் அவர் பெயரே வாழ்க!
நாமும் மரம் வளர்த்திடுவோம் நன்றாய்!
- இளம்விழியன்
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...