துயரங்களைத் தீர்க்கும் தோழி அசோக மரம்

நான் தான் அசோகா மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சராகா இண்டிகா என்பதாகும் நான் சிசால்பீனியேஸி குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ் இலக்கியங்களில் என்னை பிண்டி எனவும்,
துயரங்களைத் தீர்க்கும் தோழி அசோக மரம்

மரங்களின் வரங்கள்!
 
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
 நான் தான் அசோகா மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சராகா இண்டிகா என்பதாகும் நான் சிசால்பீனியேஸி குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ் இலக்கியங்களில் என்னை பிண்டி எனவும், செயலை எனவும் குறிப்பிட்டிருக்காங்க. எனக்கு சரிபம், சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம், சுவரிலோத்ரம், சேந்து, சேலை, காகோளி, ஜோதி விருட்சம், அசோகு என்ற பெயர்களும் உண்டு. நான் அன்பின் அடையாளமாக இருக்கேன். மன்மதன் வைத்திருக்கும் அம்பில் ஐந்து வகையான பூக்களில் என் மரப் பூக்களிலான அம்பும் ஒன்று, மற்ற நான்கு தாமரை, மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.
 நான் பூக்கள் நிறைந்து அழகாகவும், உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் மரமாகவும் இருக்கேன். என் கிளையெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்கும். சினையெலாம் செயலை மலர் (15:31) என பரிபாடல் என்னை போற்றுகிறது. என் மரத்தின் பூ பட்டை, என அத்தனைப் பகுதிகளும் பெண்களைப் பாதிக்கும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை எனக்கு உண்டு. என் இலைகள் நீட்டு வாக்கில் கரும் பச்சை நிறத்தில் இருக்கும். என் இலையை இடித்துச் சாறு எடுத்து அதனோடு சிறிது சீரகத் தூளையும் கலந்து நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்றுப் புண் இருந்த இடம் தெரியாது.
 என் பூக்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறமாக இருந்து பின் சிவந்த நிறமாக மாறி நிறைந்த மணமுடையதாக இருக்கும். ஒரு பூவே பூங்கொத்து போல இருக்கும். பழங்கால மக்கள் என் பூக்களுக்கு தோஷங்களை அண்ட விடாத குணமுண்டு, என் பூவை அணிந்தால் பேய், பிசாசு அருகில் நெருங்காது என நம்பியிருக்காங்க. என் பூக்களை சாப்பிட்டால் உங்கள் வயிற்றுப் போக்கு கட்டுப்படும். என் பூவை இடித்து பசையாக்கி நீரில் சேர்த்து கலக்கி குடித்தால் இரத்த கசிவு, இரத்த சீதபேதி, இரத்த மூலம், வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது ஆகிய நோய்கள் குணமாகும். என் பூக்களை நீரிலிட்டு காய்ச்சிக் குடித்தால் அடிப்பட்ட காயம் குணமாகும். மூலநோயை குணப்படுத்தும் வல்லமை என் பூக்களுக்கு உண்டு.
 என் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் போஷாக்கு மிக்க திரவம், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து. என் பட்டையை இடித்து, பொடியாக்கி காலை, மாலையில் நீருடன் அருந்தினால் பெரும்பாடு எனப்படும் இரத்தப் போக்கு கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு பசியின்மை குறைப்பாட்டை நீக்கி, பசியைத் தூண்டும். என் பூக்களையோ, பட்டையையோ குடிநீராக்கி வயதானவர்கள் அவ்வப்போது அருந்தி வந்தால் அவர்களின் பல்வேறு உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். என் மரத்துப் பட்டை உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளியேற்றக் கூடியதாகவும், மேற்பூச்சு மருந்தாகி நீண்ட நாள் புண்களை ஆற்றுவதாகவும், வயிற்று கோளாறுகளை நீக்கிடும் அருமருந்தாகவும் உள்ளது.
 குழந்தைகளே, ஆசையே அழிவுக்குக் காரணம் என போதித்த புத்தர் பிரான் என் மரத்தடியில் பிறந்ததாக சொல்றாங்க. ஆகையால், சமணர்களும், பெüத்தர்களும் என்னை புனித மரமா கருதறாங்க. மாமன்னர் அசோகருக்கு பிடித்த மரமும் நான் தான். அசோகம் என்றால் சோகம் இல்லாதது என்று பொருள். நான் மனிதர்களின் துக்கம், மனவேதனை போன்றவைகளை நீக்குவேன் என்று நம்பப்படுகிறது. நம் அன்னை சீதாபிராட்டியின் துயர் துடைத்த மரம். ஏன்னா, அசோக மரங்கள் நிறைந்த வனத்தில் தான் சீதையை சிறைவச்சிருந்தாங்க. சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் நான் தான் என்பதால் எனக்கு "அ'சோக மரம் என்ற பெயர் வந்ததாக சொல்றாங்க. ஏன், நம்ம அக்கா தமயந்தியும் பூத்துக் குலுங்கும் என்னை பார்த்தவுடன், என் பெயரைக் கேட்டு, மிகவும் மகிழ்ந்து காணாமல் போன தன் கணவன் நளன் மீண்டும் வர வேண்டும் என்று வேண்டினார். எனக்கு உயிரும், ஆன்மாவும் உண்டு. அதாவது, மக்கள் துயரும் போது நானும் துயர் கொள்வேன். மகிழும் போது நானும் மகிழ்வேன். என் தமிழாண்டு சுக்ல. குழந்தைகளே, நானும் இப்போது அழியும் தருவாயில் தான் இருக்கேன், என்னை காப்பாற்றுங்க. என்னைப் போற்றி பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையல்லவா. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com