மூளையின் வேகம்!

"நீ நன்றாகத்தான் இருக்கிறாய்!.... ஆனால் உன் கால்கள் வளைந்திருக்கின்றன. அதனால் தடுக்கி விழுகிறாய்!...'' என்று கேலி செய்தது முயல்.
மூளையின் வேகம்!

ஒரு முயல் முள்ளம்பன்றியைச் சந்தித்தது.
 "நீ நன்றாகத்தான் இருக்கிறாய்!.... ஆனால் உன் கால்கள் வளைந்திருக்கின்றன. அதனால் தடுக்கி விழுகிறாய்!...'' என்று கேலி செய்தது முயல்.
 முள்ளம்பன்றிக்குக் கோபம் வந்துவிட்டது! உன்னுடைய நேரான கால்களைவிட என்னுடைய வளைந்த கால்களால் அதிக வேகமாக ஓட முடியும்!.... கொஞ்ச நேரம் இரு!.... நான் வீட்டிற்குப் போய் வருகிறேன்!.... பிறகு நீயும், நானும் ஓட்டப் பந்தயம் வைத்துக் கொள்ளலாம்!...'' என்றது.
 "சரி, சரி சீக்கிரம் வா!'' என்றது முயல் கிண்டலாய்!
 முள்ளம்பன்றி வீட்டிற்குச் சென்றது. தன் மனைவியிடம், ""நான் முயலுடன் பந்தயம் போட்டு ஓடப் போகிறேன்!.... '' என்றது.
 அதன் மனைவியோ, "உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?....முயலுடன் உன்னால் எப்படிப் போட்டி போட முடியும்?'' என்று கேலி செய்தது.
 முள்ளம்பன்றியோ, "என்னால் வேகமாக ஓட முடியாதுதான்!.... ஆனால் வேகமுள்ள மூளை இருக்கிறது!.... நீ, நான் சொல்கிறபடி செய். இப்போது நாம் வயலின் பக்கம் போவோம்!'' என்று மனைவியை அழைத்தது.
 இரண்டும் வயல் பக்கம் சென்றன. மனைவியிடம், "நீ இந்த வரப்பின் அருகிலுள்ள புதரில் மறைந்து கொள்!.... நானும் முயலும் எதிர்ப்பக்கமிருந்து ஓடி வருவோம்.... அது இந்தப் பக்கம் வந்தவுடன், நீ அதன் முன்னால் வந்து, "நான்அப்போதே வந்துவிட்டேன்!.... வெகு நேரம் உனக்காகக் காத்திருக்கிறேன்!..... ' என்று சொல்லு!.... முயலுக்கு நம் இருவரையும் அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாது! நீதான் நான் என்று எண்ணிக்கொள்ளும்! '' என்று சொன்னது.
 முள்ளம்பன்றியின் மனைவி புதரில் மறைந்து கொண்டது!
 எதிர்ப்பக்கத்திலிருந்து முயலும், முள்ளம்பன்றியும் ஓட்டப்பந்தயத்தைத் துவங்கின. முயல் ஓட ஆரம்பித்ததும், முள்ளம்பன்றி புறப்பட்ட இடத்திற்கே சென்று ஒரு புதரில் மறைந்து கொண்டது. முயல் எதிர்ப்பக்கத்தை அடைந்தபோது அங்கு முள்ளம்பன்றியின் மனைவி வரப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
 "இது என்ன மாய வித்தை?' என்று முயல் வியப்படைந்தது. "சரி, நாம் மறுபடி இங்கிருந்து ஓடுவோம்' என்று முள்ளம்பன்றியை முயல் அழைத்தது.
 ""நான் தயார்!'' என்றது பெண் முள்ளம்பன்றி.
 இரண்டும் ஓடத்தொடங்கின. பெண் முள்ளம்பன்றி வரப்பிற்குத் திரும்பிவிட்டது. முயல் மறுபக்கத்தை அடைந்தது. அங்கு அதற்கு முன்னால் முள்ளம்பன்றி சிரித்துக் கொண்டே நின்றது. "இது என்ன மாயம்?' எனத் திரும்பவும் முயல் வியந்தது. "சரி, நாம் இங்கிருந்து இன்னும் ஒரு முறை ஓடுவோம்!...' என்று முயல் மீண்டும் போட்டிக்கு அழைத்தது. முள்ளம்பன்றியும், "தயார்!'' என்றது. முன்பு நடந்த கதைதான் நடந்தது! முயல் ஓடிக் களைத்துவிட்டது! தன் தோல்வியை ஒப்புக்கொண்டது.
 - திருமலை
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com