ஆஸ்திரேலியா ஓஷியானிக் கண்டம்!

மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் குறைவாக உள்ள உலகின் ஆறாவது சிறிய கண்டமான இதன் பரப்பளவு 7,713,000 ச.கி.மீ.
ஆஸ்திரேலியா ஓஷியானிக் கண்டம்!

கருவூலம்

மக்கள் தொகையும், மக்கள் நெருக்கமும் குறைவாக உள்ள உலகின் ஆறாவது சிறிய கண்டமான இதன் பரப்பளவு 77,13,000 ச.கி.மீ.

பூமியின் பரப்பளவில் 5.2 சதவிகிதம் இக்கண்டம்.

இந்தியப் பெருங்கடலுக்கும், தென் பசிபிக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இக்கண்டம் முழுவதுமே ஒரு நாடாக அமைந்துள்ளது. 

மிகத் தாழ்வானதும், மண்ணியல் ஆய்வுப்படி மிகப் பழமையானதுமான இக்கண்டத்தில் 120 வகையான கங்காரு இனங்கள் உள்ளன. 

"மேய்ப்பவர்களின் கண்டம்' என்றழைக்கப்படும் இக்கண்டத்தில் நாகரீகத்தின் சாயல் ஏதுமில்லாத மக்கள் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.  இக்கண்டத்தில்,

1. ஆஸ்திரேலியா
2. நியூசிலாந்து
3. சாமோயா
4. நெளரு
5. ஃபிஜி
6. டோங்கா
7. பாப்புவா நியூகினியா
8. தூவளு
9. சாலமன் தீவுகள்
10. கிரிபாதி
11. வனுவட்டு
12. மார்ஷல் தீவுகள்
13. மைக்ரோனேசியா
14. பலாவ் - ஆகிய ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 14 தீவு நாடுகளும், ஏராளமான சிறு சிறு தீவுகளும் அடங்கி உள்ளது. தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்நாடுகள் "ஓஷியானிக் கண்ட நாடுகள்' என்றழைக்கப்படுகின்றன. 

1. ஆஸ்திரேலியா (COMMONWEALTH OF AUSTRALIA)

தலைநகரம் - கான்ஃபெரா.
பரப்பளவு - 76,86,850 ச.கி.மீ.
நாணயம் - ஆஸ்திரேலியன் டாலர்.
தேசிய மிருகம் - கங்காரு
பேசும் மொழி - ஆங்கிலம் மற்றும் பழங்குடியின மொழிகள்.
ஆட்சி மொழி - ஆங்கிலம்.
சமயம் - கிறிஸ்தவம்
சுதந்திர தினம் - 1.1.1901.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவுக் கண்டம் "ஆஸ்திரேலியா'. இதை 1830-இல் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் என்பவர் கண்டுபிடித்து பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார். இதோடு நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா, குவீன்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மேனியா ஆகிய ஆறு பிரிட்டிஷ் காலனிகளும் ஒன்றிணைந்து 1901-இல் காமன்வெல்த் ஆஃப் ஆஸ்திரேலியாவாக மாறியது. ஒரு தேசிய அரசாங்கம் மற்றும் மேற்கூறிய ஆறு மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு கூட்டாட்சி அரசு நடைபெறுகிறது. 

இந்து மகா சமுத்திரத்திற்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் மத்தியில் அமைந்துள்ள இந்நாட்டை ஜேம்ஸ் குக் கண்டறிந்த காலத்தில் நாகரீகம் பற்றி அறியாத பழங்குடியின மக்களே வாழ்ந்து வந்தனர். அதன்பின் 1770 முதல் ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடாக மட்டுமே இருந்து வந்த ஆஸ்திரேலியாவில் காலப்போக்கில் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்த மக்கள் குடியேற ஆரம்பித்தனர். 

நிலக்கரி, இரும்புத்தாது, ஈயம், பாக்சைட், யுரேனியம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல், காரீயம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு முதலிய கனிமங்கள் கிடைக்கின்றன. 

முர்ரே, டார்லிங், முர்ரம் பிரிட்ஜ், லாச்லான், ஃபிளிண்டர்ஸ் நதிகள் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகின்றன. கோதுமை உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. ஓட்ஸ், பார்லி, நெல், கரும்பு, உருளைக்கிழங்கு, ஆப்பிள், காய்கறிகள் விளைபொருட்களாகும். 

நவீன தொழிற்சாலைகளால் நாடு முன்னேற்றமடைந்திருந்த போதிலும் விவசாயமும், கால்நடை வளர்ப்புமே பிரதான தொழிலாக உள்ளது. கம்பளியும், பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தவிர சுரங்கம் தோண்டுதல், எஃகு, ஜவுளி உற்பத்தி, கப்பல் கட்டுதல், மின்சாதனங்கள் உற்பத்தி, ஆகாய விமானங்கள் கட்டுதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், இரசாயன உரங்கள் தயாரித்தல் முதலிய தொழில்களும் உள்ளன. 

நாட்டின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் மட்டுமே விவசாயம் நடைபெறுகின்றது. மிகக் குறைந்த அளவு பனிப்பொழிவு உடைய நாடாக இருப்பதால் நாட்டின் பெரும்பகுதி தரிசு நிலங்களாகவே உள்ளன. மிகப்பெரிய பாலைவனமான விக்டோரியா பாலைவனம் இந்நாட்டில் உள்ளது. மக்கள் நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்றவர்கள்.

சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலைய்ட், ஹோபர்ட், பெர்த் நகரங்கள் தேசிய அரசின் கீழ் உள்ள ஆறு மாநில அரசாங்கங்களின் தலைநகரங்களாகும். 

1. சிட்னி

ஆஸ்திரேலியாவின் பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றான சிட்னி நியூ செளத் வேல்ஸின் தலைநகரமாகும். நகரின் வடபகுதி மக்கள் வாழும் இடமாகவும், தென்பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. 

உடல் நலத்திற்கேற்ற தட்பவெப்ப நிலை நிலவும் இந்நகரில் ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு இருந்து கொண்டேயிருக்கும். உலகின் மிகச் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக சிட்னி துறைமுகம் விளங்குகின்றது. 


2. மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன் ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்ற போது அதன் தலைநகரமாக இருந்தது. தற்போது விக்டோரியா மாநிலத்தின் தலைநகரமாக விளங்குகின்றது. 

1837-இல் அப்போதைய கவர்னராக இருந்த பூர்க்கே என்பவர் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மெல்போர்ன் பிரபுவின் பெயரை இந்நகருக்குச் சூட்டினார். அதற்குமுன் இந்நகர் பேர்ப்ராஸ், கிளெநெல்க் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டது. 

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் மெல்போர்ன் 1842-இல் நகரமாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கம்பளிகளில் பெருமளவு இங்கிருந்தே தயாரித்து அனுப்பப்படுகின்றன. 1854-இல் ஆஸ்திரேலியாவில் முதல் இரயில் பாதை இந்நகரத்திற்கும், இதன் துறைமுகத்திற்கும் இடையில் அமைக்கப்பட்டது. 

"பூங்கா நகரம்" என்று சொல்லும் அளவுக்கு நூறு ஏக்கரில் அமைந்த பூங்காக்கள், தேசிய அருங்காட்சியகங்கள் நகரை அழகு படுத்துகின்றன. பாரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரையடுத்து அமைந்துள்ள குன்றுப் பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. 

3. பிரிஸ்பேன்

குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் இந்நகரம் பிரிஸ்பேன் நதிக்கரையில் அமைந்துள்ளது. நதி துறைமுகமாக கடல் மட்டத்திலிருந்து 134 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரிஸ்பேன் உலகின் நான்காவது பெரிய நகரமாகும். இதன் பழைய பெயர் "எடென்க்ளாஸ்ஸீ". கவர்னர் பிரிஸ்பேனுக்குப் பிறகு இந்நகரம் அவர் நினைவாக பிரிஸ்பேன் என அழைக்கப்பட்டது. 

1859-இல் நகரமாக அறிவிக்கப்பட்ட இந்நகரில் மின் வசதியும், நீர்வளமும் மிகுதி. அதனால் கப்பல் கட்டுதல், இரப்பர் பொருட்கள், ஜவுளி தயாரித்தல், படகு தயாரித்தல், பிளைவுட் உற்பத்தி முதலிய தொழில்கள் பிரதான இடம் வகிக்கின்றன. தென்கிழக்காக 214 மைல் நீளத்திற்கு இந்நகரின் வழியே பாயும் பிரிஸ்பேன் நதி மார்டென் வளைகுடாவில் சென்று கலக்கின்றது. 

4. அடிலெய்ட்

ஆஸ்திரேலிய நகரங்களில் நான்காவது பெரிய நகரமான அடிலெய்ட் தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகராக விளங்குகின்றது. இந்நகரை 1836-இல் சார்லஸ் ஸ்டர்ட், வில்லியம் லைட் ஆகிய இருவரும் நிர்மாணித்தனர். நான்காம் வில்லியம் மன்னரின் மனைவியான ராணி அடிலெய்ட்டின் பெயரை தன்னால் நிர்மாணம் செய்யப்பட்ட இந்நகருக்கு வில்லியம் லைட் சூட்டினார். 

லாஃப்டி மலைத்தொடருக்கும், ஜெயிண்ட் வின்சென்ட் விரிகுடாவுக்கும் இடையில் பாய்ந்தோடும் டார்ரென்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் சதுரமான அமைப்பைக் கொண்டது. மாநில தலைநகரங்களிலேயே குறைந்தளவு மழை இங்கு பெய்கிறது. 

1840-இல் நகரமாக அறிவிக்கப்பட்ட அடிலெய்ட் ஆஸ்திரேலியாவிலேயே பழைய நகராட்சி ஆகும். தவிர குதிரைகளால் இழுக்கப்படும் ட்ராம் கார்களைப் பயன்படுத்திய முதல் நகரம், ஆஸ்திரேலியாவை தந்தியினால் இலண்டனோடு இணைத்த முதலாவது பெரிய நகரம் என்ற பெருமைகள் இந்நகருக்கு உண்டு. 
டார்ரென்ஸ் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையால் பெரிய நீர்த்தேக்கம் பரந்த ஏரிபோல காட்சி தருகிறது. தோட்டங்களும், பூங்காக்களும், காடுகளும் நிறைந்துள்ள அடிலெய்ட் நகரில் நடக்கும் கலைத் திருவிழா உலகப் பிரசித்தம். இவ்விழா இரண்டாண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு மார்ச் மாதமும் நடைபெறுகிறது. 

5. ஹோபர்ட்

தாஸ்மேனியாவின் தலைநகரமான ஹோபர்ட் நகரம் ஆஸ்திரேலியாவின் எட்டாவது பெரிய நகரமாகும். டெர்வெண்ட் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள இத்துறைமுக நகரத்திலிருந்து பிப்ரவரி மாதத்துக்கும், மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலங்களில் ஆப்பிள், பீர் முதலியன அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

1842-இல் நகரமாக அறிவிக்கப்பட்ட ஹோபர்ட்டில் ஜாம், சாக்லேட், மிட்டாய் தயாரிப்பு, மதுபான உற்பத்தி, பர்னிச்சர்கள் தயாரித்தல், கண்ணாடி பெயிண்ட், பைப் தயாரித்தல், ஜவுளி உற்பத்தி பிரதான தொழில்களாக உள்ளன. அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் நிறைந்த இந்நகரில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் படகுப்போட்டி உலகப் பிரசித்திப் பெற்றது. 

6. பெர்த்

மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான இந்நகரம் ஆஸ்திரேலியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நான்காவது பெரிய நகரமாக விளங்குகின்றது. 
ஸ்வான் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரை 1829-இல் கேப்டன் ஜேம்ஸ் ஸ்டெர்லிங் நிறுவினார். கம்பளி பெருமளவு தயாரிக்கப்படுவதோடு, பால் பொருட்கள் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி முதலிய தொழில்கள் பிரதான இடம் வகிக்கின்றன. 

விளக்குகளின் நகரம்" என்றழைக்கப்படும் அளவுக்கு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளின் அலங்காரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். உலகில் மக்கள் வாழ்வதற்கேற்ற நகரங்களுள் ஒன்றாக 2011-இல் பெர்த் தேர்வு செய்யப்பட்டது. 

மேற்கூறிய ஆறு மாநிலங்கள் தவிர நோர்ஃபோக் தீவு, பவளக்கடல் தீவு, ஆஸ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள், கோரல் கடல் தீவு, கோகஸ் தீவுகள், கிரிடிமாட்டி தீவு, ஆஸ்திரேலிய அண்டார்டிக் பகுதி, மெக்டொனால்டு தீவு, தி ஹெர்டு தீவு முதலியவைகளும் ஆஸ்திரேலிய மேலாதிக்கத்தின் கீழ் உள்ளன. இவையனைத்தும் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்துள்ள தீவுகளாகும். 

தொகுப்பு : கோபிசரபோஜி, இராமநாதபுரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com