நீரின்றி அமையாது உலகு! 

தினேஷ் தூக்கக் கலக்கத்துடனேயே பற்களைத் துலக்கிக் கொண்டிருந்தான். வாஷ்பேசினில் இருந்த குழாய் திறந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அங்கு ஏதோ வேலையாக வந்த பாட்டி,
 நீரின்றி அமையாது உலகு! 

தினேஷின் உலகம்! 10

 தினேஷ் தூக்கக் கலக்கத்துடனேயே பற்களைத் துலக்கிக் கொண்டிருந்தான். வாஷ்பேசினில் இருந்த குழாய் திறந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அங்கு ஏதோ வேலையாக வந்த பாட்டி, ""குழாயை மூடிட்டு பல்லைத் தேய்ச்சாத்தான் என்ன?...'' என்று கடிந்தபடியே குழாயை இறுக்கமாக மூடினார்.
 தினேஷ் எப்பவும் இப்படித்தான்! வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்திற்கு ரப்பர் குழாயைக் கொண்டு நீர் பாய்ச்சுவான். ஆனால் விளையாடும் எண்ணம் தோன்றிய மறு நிமிடமே, அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவான். குழாயை மூடவே மாட்டான்! அப்பாவோ, அம்மாவோ, பாட்டியோ அதை மூடினால்தான் உண்டு!
 இது மட்டுமல்ல!.... கொல்லைப் புறத்தில் இருக்கும் குழாயையும் சரியாக மூடமாட்டான்!.... இதனால் தண்ணீர் சொட்டு, சொட்டாக வீணாகிக் கொண்டே இருக்கும்!. "தண்ணீரை வீணாக்காதே!....'' என்று எத்தனையோ முறை அறிவுறுத்தினாலும் அவன் பொருட்படுத்தவே மாட்டான்!
 "ஒரு நாளைக்குக் குடிக்கத் தண்ணி இல்லாமத் தவிக்கும்போதுதான் அவனுக்கு புத்தி வரப் போகுது!'' என்றார் அப்பா வேதனையுடன்.
 இந்த முறை பள்ளியில் களப் பயணமாக சென்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஏற்கெனவே சுற்றுலா செல்ல முடியாமல் தவித்த தினேஷ், இந்தப் பயணத்தை இழக்க விரும்பவில்லை. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தான். நல்ல பிள்ளையாக முதல் நாளே தனக்குத் தேவையான பொருட்களைத் தானே தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். பலமுறை அவன் தனது பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். முரளி அண்ணனுடன் கடற்கரையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு முறை சென்றிருக்கிறான். இருந்த போதும், இந்த முறை பள்ளி நண்பர்களுடன் செல்வது அவனுக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது!
 பள்ளி வாகனத்திலேயே அனைவரும் சென்னை கடற்கரையை அடைந்தனர். பள்ளியின் வரலாற்று ஆசிரியரும், அவனது வகுப்பாசிரியரும், உதவி ஆசிரியரும் உடன் வந்திருந்தனர். அனைவரும் பள்ளி வாகனத்திலேயே உணவு, மற்றும் குடிநீர் பாட்டில்களை வைத்துவிட்டுக் கீழே இறங்கினர்.
 வரலாற்று ஆசிரியர், அவர்கள் அனைவரையும் உழைப்பாளர் சிலைக்கு அழைத்துச் சென்று, ""டியர் ஸ்டூடன்ட்ஸ்!... இங்கே மெரீனா பீச்சுலே மொத்தம் 17 சிலைகள் இருக்கு!.... இந்த உழைப்பாளர் சிலைதான் முதன்முதலா நிறுவப்பட்டது! மே மாதம் முதல் தேதியை தொழிலாளர் தினமாக உலகெங்கு கொண்டாடுகிறோம்! 1923 - ஆம் ஆண்டு மே மாதம் எம்.சிங்காரவேலர் அப்படிங்கற தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளர்களோட முக்கியத்துவத்தை உணர்த்த ஒரு பேரணியை இங்கே மெரீனா கடற்கரையிலிருந்து துவக்கினார்.
 அந்த நிகழ்ச்சியின் நினைவாக இந்த உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது 1959 - ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் நிறுவப்பட்டது. இந்த சிலை ""தேவி பிரசாத் ராய் செளத்ரி'' என்கிற கை தேர்ந்த சிற்பக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது.
 அவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். தன்னுடைய மாணவர்களையே இந்தச் சிற்பத்திற்கு மாடலாக நிற்க வைத்து இந்த சிலையா உருவாக்கியிருக்கிறார்!'' என்று கூறினார். இப்படி ஒவ்வொரு சிலையைப் பற்றியும் நிறைய சுவாரசியமான தகவல்களை அளித்துக் கொண்டே வந்தார்.
 மாணவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மதிய உணவு நேரம் வந்தது. கடற்கரையை ஒட்டி இருந்த புல்வெளியில், மர நிழலில் தமது மதிய உணவை எடுத்து வந்து சாப்பிடத் துவங்கினர்.
 தினேஷின் உணவு அன்று ஏனோ மிகவும் காரமாக இருந்தது. இரண்டு வாய் சாப்பிட்ட உடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்தது! தண்ணீரோ மிகவும் சூடாக இருந்தது! அது தினேஷின் காரத்தைப் போக்குவதாக இல்லை! காரத்தை அதிகப்படுத்தியது! தினேஷ் தன் சக தோழர்களிடம் தண்ணீர் கேட்டான். எல்லோருடைய பாட்டில்களிலும் தண்ணீர் சுட்டெரித்தது! காரணம், அத்தனை நேரமும் பள்ளி வாகனம் வெயிலில் நிறுத்தப்பட்டிருந்ததுதான்!
 எல்லோருக்குமே தண்ணீர் குளிர்ச்சியாக் குடிக்க வேண்டும் போல் இருந்தது! தினேஷுக்கு காரம் வேறு! அனைவரும் ஜில்லென்று நீர் குடிக்கவே விரும்பினர். கையில் நீர் இருந்தும் குடிக்க முடியாத நிலை. குளிர்ந்த தண்ணீர் வாங்க வேண்டுமானால் சாலையைக் கடக்க வேண்டும்!
 ஆசிரியர்களுள் ஒருவர் வேகமாகச் சென்று தண்ணீர் பாக்கெட்டுகளையும், சில பாட்டில்களையும் வாங்கி வந்தார். தினேஷ் ஒரு பாக்கெட் தண்ணீரை வாங்கி வாயிலும், முகத்திலும் தெளித்துக் கொண்டான். இன்னொரு பாக்கெட் தண்ணீர் வேண்டுமென்று கேட்டான்! ஆசிரியர்கள், அனைவரையும் குளிர் பானக்கடைக்கே அழைத்துச் சென்று தண்ணீர் வாங்கிக் கொடுத்தனர்.
 தினேஷ் எதிரே இருந்த கடலைப் பார்த்தான். பாட்டி சொல்லும் விடுகதை நினைவுக்கு வந்தது.
 "ஊருக்கே பெரிய அண்டாவாம்!.... அண்டா நிறையத் தண்ணீராம்!.... ஆனா தவிச்ச வாய்க்கு ஒரு சொட்டுக்கூட குடிக்க முடியாதாம்! அது என்ன?'' என்பார்.
 "அது கடல்!'' என்பான் தினேஷ்!
 மேலும் பகீரதன் பெருமுயற்சி செய்து கங்கையை பூமிக்கு வரவழைத்த கதையையும் கூறுவார். "தண்ணீர்தான் விலை மதிக்க முடியாத பொருள். அந்தத் தண்ணீர்தான் உணவுப் பொருளையும் விளைவிக்குது!.... தானே ஒரு உணவுப் பொருளாகவும், மருந்தாகவும் இருக்கு!.... மனிதனுக்கு உணவுக்குத் தேவையான உப்பையும் இந்தத் தண்ணீர்தான் கடல் மூலமாத் தருது!.... தண்ணீரும், உப்பும்தான் விலை மதிக்க முடியாத பொருட்கள்! தங்கமோ, வைரமோ இல்லை! அது எல்லோருக்கும் எளிமையாக் கிடைக்கணும்னுதான் பூமிக்கு அருகிலேயே கிடைக்கும்படி படைச்சார் கடவுள்! அதை ஒரு நாளும் வீணடிக்கக் கூடாது!'' என்று பாட்டி கூறியது எவ்வளவு உண்மை! இப்போது புரிந்து கொண்டான் தினேஷ்!
 லக்ஷ்மி பாலசுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com