பானைக்குள் போன யானை! 

பானைக்குள் போன யானை! 

அரங்கம்
காட்சி -1 
இடம் - வீடு, மாந்தர்கள் - ( பப்லுவின் அம்மா, அப்பா, பப்லு)
(ஐந்து வயது பாலுவை செல்லமாக "பப்லு' எனக் கூப்பிடுவர். படங்கள் நிறைந்த எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் உடனே அதை அம்மாவிடம் காண்பித்து நிறைய கேள்விகள் கேட்கத் தொடங்கிவிடுவான் பப்லு) 
பப்லு: (குயிலைக் காண்பித்து) அம்மா... இது கடிக்குமா? கடிக்காதா?
அம்மா: கடிக்காது கண்ணா...
பப்லு: (பூனையைக் காண்பித்து) இது கடிக்குமா? கடிக்காதா?
அம்மா: நீ அதைப் பிடிக்கப் போனாலோ, அதற்கு சிரமம் கொடுக்க நினைத்தாலோ அது கடிக்கும். 
இல்லையென்றால் கடிக்காது.
பப்லு: (அம்மியைக் காண்பித்து) இது கடிக்குமாம்மா...?
அம்மா: கடிக்காது
பப்லு: (புலியைக் காண்பித்து) இது கடிக்குமா? கடிக்காதா?
அம்மா: கடிக்கும்... கடிக்கும். பப்லு கண்ணா, சமையல் அறையில் எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ சொல்லிக்கொண்டே இரு, நான் அங்கிருந்து உனக்கு பதில் சொல்றேன்(என்று கூறி சமையல் அறை சென்றுவிட்டார்)
பப்லு: அம்மா... இந்த யானை, இந்தப் பானைக்குள்ள போகுமாம்மா..?
அம்மா: போகாது கண்ணா... எப்படிப் பானைக்குள்ள யானை போகும்? யானை எவ்வளவு பெரிய மிருகம். அது பானைக்குள் போனால், பானை உடைந்துவிடுமே...?
பப்லு: அப்ப... பானைக்குள்ளே யானைப் போகவே முடியாதாம்மா...?
அம்மா: முடியாது கண்ணா...
பப்லு: (ஆலமரத்தைக் கையால் தொட்டு) அம்மா இது கடிக்குமா? கடிக்காதா?
அம்மா: கடிக்கும் கண்ணா... (பப்லு எதைக் காண்பிக்கிறான் என்பதைப் பார்க்காமலேயே சமையல் அறையிலிருந்தபடி சொன்னார்) 
(அவன் வரவேற்பறையில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், சமையல் அறையிலிருந்தபடியே "கடிக்கும் கடிக்காது' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பப்லுவுக்கு அருகில் வந்து அவன் தந்தை உட்கார்ந்தார்)
பப்லு: (உடனே) அம்மா இது (அப்பா) கடிக்குமாம்மா? (என்று தந்தையைக் காட்டிக் கேட்டான். அதை கவனிக்காத அவர்)
அம்மா: கடிக்கும்பா. நீ சொல்ற எல்லாமே கடிக்கும்... 
(பப்லுவின் அப்பா மகனை வியப்போடு பார்த்து சிரித்தார். அவனும் அப்பாவை ஒருவித பயத்தோடு பார்த்துச் சிரித்தான்.
பப்லு: அம்மா.... அப்பாவும் கடிப்பாரா?
(உடனே சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்த பப்லுவின் அம்மா, பப்லு கடைசியாகக் கேட்டது அவனுடைய அப்பா என்பதை அறிந்து கொள்ளாமலேயே "கடிக்கும்' என்று கூறியதை நினைத்து வெட்கப்பட்டார்)
பப்லுவின் அப்பா: குழந்தை கேள்வி கேட்டால் என்ன, ஏது என்று யோசிக்காமல் இப்படியா பதில் சொல்வது? 
அம்மா: மன்னிச்சுக்கோங்க ... எனக்கு நிறைய வேலை இருக்கு. இவனோ எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். எனக்கு பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிடுச்சு... 
(சொல்லிவிட்டு மீண்டும் சமையல் அறைக்குப் போய்விட்டார். அன்றிரவு கணவன்-மனைவி இருவரும் பப்லுவைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினர். நிறைய கேள்விகள் கேட்கிறான், அதிகக் குறும்புத்தனம் செய்கிறான், பிடிவாதம் வேறு. இவனை சமாளிக்கவே முடியலையே... மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்று ஆலோசனை கேட்டால் என்ன என்று பலவாறு யோசித்து, மறுநாள் குழந்தைகள் மனநல மருத்துவரைப் பார்ப்பது என முடிவெடுத்தனர்)
காட்சி-2
இடம் - மன நல மருத்துவ இடம்.
மாந்தர்கள்: குழந்தைகள் மனநல மருத்துவர் மகேந்திரன், பப்லுவின் அம்மா, அப்பா, பப்லு)

மருத்துவர் மகேந்திரன்: வாங்க சார், என்ன விஷயம்? 
பப்லுவின் அப்பா: எல்லாம் இந்தச் சுட்டிப் பயலைப் பற்றிய கவலைதான்.
மருத்துவர் அப்படி என்ன செய்கிறான்?
பப்லுவின் அப்பா: நிறைய கேள்வி கேட்கிறான். அதுதான் பிரச்னையே! குறும்புத்தனமும் அதிகம். அம்மாவினால் அவனை சமாளிக்க முடியலை, சில சமயம் பொறுமை இழந்துடறாங்க...
மருத்துவர்: இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? இப்படியெல்லாம் குழந்தைகள் இருந்தால்தான் நல்ல ஆரோக்கியமா இருக்காங்கன்னு அர்த்தம். சொல்றேன்னு தப்பா நினைக்கக் கூடாது. பெரியவங்க உலகம் வேறு, குழந்தைகள் உலகம் வேறு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்ததுதானே... அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அன்பா, பொறுமையா பதில் சொல்ல இன்றைய பெற்றோருக்குத் தெரியவில்லை. அப்படிச் சொல்ல அவங்களுக்கு நேரமும் இல்லை. 
பப்லுவின் அம்மா: அதில்லே டாக்டர்... எப்பப் பார்த்தாலும் அது என்ன, இது என்ன? இது கடிக்குமா...அது கடிக்காதா... நிலா ஏன் கீழே விழாம இருக்கு, ஒட்டகத்துக்கு கழுத்து நீளமா ஏன் இருக்குன்னு கேட்டா என்ன டாக்டர் பண்ண முடியும்? 
மருத்துவர்: உண்மையான பதிலைச் சொல்லுங்க. முடிஞ்சா அறிவியல் பூர்வமாக அவனுக்கு எடுத்துச் சொல்லுங்க... 
பப்லுவின் அப்பா: அதெல்லாம் சொன்னா இந்த வயசுல எப்படி டாக்டர் அவனுக்குப் புரியும்? 
மருத்துவர்: ஏன் புரியாது? "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? மனதில் பதிய வைக்கக்கூடிய சரியான வயது இதுதான். ஐந்து வயதில் நீங்கள் விதைக்கும் விதைதான் பிற்காலத்தில் நல்ல விளைச்சலை, பலனைக் கொடுக்கும்.

குழந்தைகள் கேள்வி கேட்கத் தொடங்கும்போதுதான் அவர்கள் அறிவு ஆழமாகவும், அகலமாகவும், விசாலமாகவும் வளர்கிறது. குழந்தைக்கு பதில் சொல்லும் அளவுக்குப் பெற்றோர் தங்கள் பொது அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் பள்ளியில் பிள்ளையை சேர்க்கும்போது "பெற்றவர்கள் நன்றாகப் படித்தவர்களா என்று கேட்டுவிட்டு சேர்க்கிறார்கள். 
பப்லுவின் அப்பா: நாங்கள் இருவருமே டிகிரி படிச்சவங்கதான் டாக்டர்?

மருத்துவர்: டிகிரி வாங்குவது வேறு, பொது அறிவை வளர்த்துக் கொள்வது வேறு. "நிலா ஏன் வானத்திலிருந்து கீழே விழாமல் இருக்கு?' என்று கேட்கும் உங்கள் மகனின் கேள்விக்கு அறிவியல் ரீதியில் நீங்கள் பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பொது அறிவும் அறிவியல் அறிவும் மிக மிக அவசியம். இன்றைக்கு அறிவியல் இல்லாமல் எதுவுமே இல்லை. செல்போனில் நீங்கள் உங்கள் மகனுக்கு அனைத்தையும் காண்பிக்கலாம். ஆனால், அந்த செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் என்பதையும் நாம் சொல்லிக் கொடுப்பது அவசியம். முதலில் குழந்தைகளைக் குழந்தைகளாக வளர விடுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை. அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, இங்கேக் கிறுக்காதே, சத்தம் போடாதே என்று எப்போதும் எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லி தடையோ, முட்டுக்கட்டையோ போடாதீர்கள். அவர்கள் முன்பு நேர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள்.அவர்கள் விருப்பம் போல அவர்களை வளர விடுங்கள். அப்படி வளர்ந்தால்தான் அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். தாய்-தந்தைதான் குழந்தையின் முதல் ஆசான் என்பதை மறந்துவிட வேண்டாம். கேள்வி கேட்கும் குழந்தைகள், குறும்புத்தனம் செய்யும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளராக உருவாகிறார்கள். உங்கள் மகன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான். கவலைப்பட வேண்டாம். 


(மருத்துவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட கையோடு மூவரும் புத்தகக் கடைக்குச் சென்று பொது அறிவு நூல்களையும், பப்லுவுக்கு ஓவியம் வரையும் புத்தகத்தையும் வாங்கினர்) 


காட்சி - 3
இடம் - வீடு, (மாந்தர்கள் - பப்லுவின் அம்மா, பப்லு
பப்லு: அம்மா... பானைக்குள்ளே யானை போகாதுன்னு சொன்னியே... சீக்கிரம் இங்கே வந்து பாரேன்...பானைக்குள்ள யானை போயிடுச்சே....(என்று கூறி சிரித்தான்)
அம்மா: என்னது... பானைக்குள்ள யானை போயிடுச்சா.... எப்படிப் போச்சு கண்ணா...? 
பப்லு: போயிடுச்சே.... போக வச்சுட்டேனே.... 
(வியப்போடு ஓடி வந்த பப்லுவின் அம்மா, பப்லு வரைந்து வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து வியந்து போனார்)
(சிறிய பானை ஒன்றை வரைந்து அதில் சிறிய யானையும், பெரிய பானை ஒன்றை வரைந்து பெரிய யானையும் வரைந்து வைத்திருந்த மகனின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவனை அப்படியே அள்ளி அணைத்துக்கொண்டு முத்தமிட்டு மகிழ்ந்தாள்)
- திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com