Enable Javscript for better performance
அரங்கம்: உப்பு- Dinamani

சுடச்சுட

  
  sm12

   

  காட்சி 1   
  இடம் இல்லம்,    மாந்தர்  -  சண்முகம், அவர் மனைவி மரகதம்,  மகன் கார்த்திக், மகள் இனியா,  தாயார் லோகாம்பாள்

  கார்த்திக்  -  அம்மா.. சட்னியில் உப்பு இல்லே
  மரகதம்  -  இந்தா துளி போடறேன்.  நல்லா கலக்கிக்க.
  பாட்டி லோகாம்பாள்  - மருமகளே.. துளி உப்பை சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரில் கலக்கி அப்புறமா சட்னி கிண்ணத்தில் ஊற்றிக் கலக்கு.  தேவைப்படும் அளவுக்கு துளித் துளியா ஊற்று.. அது தான் முறை.
  மரகதம் -  அப்படியே செய்யறேன் அத்தே !
  சண்முகம்  - உப்பிலாப் பண்டம் குப்பையிலே..
  கார்த்திக் -  உப்பிட்டவரை உள்ளளவும் நினை..நானும் பழமொழி சொல்வேன்.
  லோகாம்பாள் -  சோற்றுக்கு முன்னே உப்பு.. பேச்சுக்கு முன்னே பழமொழின்னு கிராமத்து ஆலமரத்தடி நாட்டாமை கூட்டங்களில் அந்தக் காலத்தில் தலைவர் ஒரு பழமொழியோடத்தான் பேச்சை ஆரம்பிப்பாரு. பந்தியில் இலையில் முதலில் உப்பை இடது ஓரத்தில்  பரிமாறுவது வழக்கம்.
  சண்முகம்  - வள்ளுவரும் உப்பை முதல் வார்த்தையாக வச்சு குறள் எழுதி இருக்கார்.. பைபிளில் உப்பைப் பற்றிய வசனக் குறிப்புகள் உள்ளன, சும்மா எப்போ பார்த்தாலும் உபதேசம் பண்ணிக்கிட்டே இருக்கிறவங்களுக்கு என்றே ஒரு பழமொழி இருக்கு..
  லோகாம்பாள் -  அது என்ன பழமொழி ?
  சண்முகம்  - உப்பும் உபதேசமும் கேட்காமல் தரக் கூடாது. அது மட்டுமா.. மனிதனுக்கு கோபம் வரும் போது மற்றவரை ஏச “நீ உப்பு போட்டு தானே சாப்பிடறே”, என சொல்லம்பு வீசுவது வழக்கம். சீனாவில் ஒரு மனிதனின் குணாதியசத்தை நிர்ணயிப்பது அவன் உடலில் உள்ள உப்பின் அளவு என நம்புகிறார்கள். நமது பழக்க வழக்கத்தில் உப்பை மகாலட்சுமியாக செல்வத்தின் சின்னமாகக் கருதுவதால் உப்பை சிந்தக் கூடாது என்பர். உப்பைத் தின்னவன் தண்ணிகுடிப்பான். அது ஒரு உப்புப் பெறாத விஷயம் எனச் சொல்லும் வழக்கும் உள்ளது.
  மரகதம்  -  ஒருத்தர் வீட்டில்  சாப்பிட்டால் அவர்களுக்குத் துரோகம் நினைக்கக் கூடாது என்பதற்கு அவன் வீட்டு உப்பைத் தின்னுருக்கோம்..என்பார்கள்
  மகள் இனியா -  அப்பா.. சுதந்திரப் போராட்டக் காலத்தில் 12 மார்ச் 1930 -இல் உப்புக்கு வெள்ளைக்கார அரசு வரி போட்டாங்க.. காந்தி அடிகள் தண்டியாத்திரையில்  லட்சம் தொண்டர்கள் சூழ உப்பைக் காய்ச்சி எதிர்ப்பைத் தெரிவித்தார்.
  லோகாம்பாள் தமிழகத்தில் நடந்த போராட்ட த்தில் மூதறிஞர் ராஜாஜி வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக் கிரகம் நடத்திக் கைதானார்.
  கார்த்திக்  - அப்பா உப்பு மனிதர்கள் பயன் பாட்டுக்கு எப்போது வந்தது ?
  சண்முகம் -  ஆய்வாளர்கள் கி மு 5500 ஆண்டு வாக்கிலேயே உப்பின் பயன் பாடு இருந்த தாகச் சொல்றாங்க.  உணவைப் பதப் படுத்தவும், சுவைக்கும் பயன் படுத்தி இருந்தாங்க.. உப்பு ஒரு காலத்தில் விலை மிக்கதாக இருந்தது தெரியுமா.
  இனியா -  அப்படியா அப்பா
  சண்முகம் -  நாணய முறை பயன் பாட்டுக்கு வரு முன் உப்பு தான் பண்டமாற்றாக இருந்துள்ளது.  அரசாங்கத்தில் சம்பளம் உப்பாகத் தான் தரப்பட்டது.  "ஸாலரி' என்ற சம்பளப் பதம் "ஸால்ட்' என்ற பதத்தை ஒட்டியே வந்தது.
  அம்மா மரகதம் -  சரி சரி பசங்களா பள்ளிக்குக் கிளம்புங்க ஆட்டோ வர்ற நேரம்.. டிபன் பாக்ஸில் உப்புமா வச்சிருக்கேன் மதியத்துக்கு.
  குழந்தைகள் இருவரும்  -  அம்மா.. உப்புமாவா..?
  அம்மா  - இல்லே தப்பா சொல்லிட்டேன்.  ரவா கிச்சடி வச்சிருக்கேன்.சரியா
  குழந்தைகள்  - ஓ கே அம்மா, எனக்குப் பிடிக்கும்.
  (அவர்கள் போனதும்) மரகதம் -  ஹும்.. நாலு தக்காளி துண்டு கொஞ்சம் மஞ்சள் தூள் பூண்டுப் பல், காய்கறித் துண்டுகளைப் போட்டால் உப்புமா கிச்சடி ஆயிடுது)

  காட்சி 2   
  இடம் பள்ளி வகுப்பறை,    மாந்தர் -  
  ஆசிரியர்  வேணுகோபால், கார்த்திக் மற்றும் மாணவ மாணவியர்

  ஆசிரியர் வேணுகோபால் -  மாணவர்களே.. இன்னிக்கு சாதாரண உப்பைப் பற்றி அறிவோம் .  உப்பின் முக்கிய பயன் என்ன ?
  கார்த்திக் -  உணவின் ருசிக்கும், கெட்டுப் போகாமல் பதப் படுத்தும் முறைக்கும்  பல் துலக்கவும் பயன் படுது சார். மீன் செத்தா கருவாடு ங்கிறது கீறி உள்ளே உப்பு வச்சாதான்..ஸார்
  (சிரிப்பலை)

  ஆசிரியர்  -  உப்பு கடல் நீரில் இருக்கு என எல்லோருக்கும் தெரியும்.  என்ன அளவில் இருக்கு தெரியுமா.. ஒரு லிட்டர் கடல்  நீரில் மூணரை கிராம் உப்பு உள்ளது. உலகின் மொத்தக் கடல் நீரும் ஆவியாகி விட்டால் உப்பின் அளவு இரண்டு கோடி கன கிலோ மீட்டர் அளவுக்கு  குவிந்து இருக்கும்.  அதாவது மொத்த ஐரோப்பா கண்டத்தைப் போல பதினைந்து மடங்கு இருக்கும் என என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. உப்பின் மருத்துவப் பயன் என்ன தெரியுமா
  ஒரு மாணவி - விஷக் கடிகளுக்கு உப்பும் மிளகும் சேர்த்து சாப்பிட்டால் விஷம் முறியும் என பாட்டி சொல்வாங்க சார்.
  ஆசிரியர் -   வயிற்றுக் கோளாறால் நிற்காமல் பேதியானால் உடலில் இருந்து நீர்ச்சத்து வெளியேறி விடும், அப்போது ஒரு லிட்டர் சுத்த நீரில் 25 கிராம் சீனியும் 3 கிராம் உப்பும் கலந்து சிறிது சிறிதாககக் குடிக்க வேண்டும்.. மருத்துவரைப் பார்க்கு முன்.  ஓ ஆர் எஸ் எனப்
  படும் இந்தக் கரைசல் மருந்துக் கடைகளில் எலெக்ட்ரால் என்று பொட்டலமாகவும் கிடைக்கும். உப்பின் விலை என்ன இப்போது சொல்லுங்க.
  ஒரு மாணவன்  - சாதாரண தூத்துக்குடி கல் உப்பு ஒரு கிலோ பாக்கெட் பத்து ரூபா சார்.. அயொடின் சேர்த்த கம்பெனி அயொடைஸ்டு உப்பு பதினெட்டு ரூபா சார்.. அரசு அங்காடிகளில் அதுவே பத்து ரூபா சார்.. கல் உப்பு அஞ்சு ரூபா சார்.
  ஆசிரியர் -  இன்றைக்கு  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மூரிஷ் நாடோடி மக்கள் உப்பை எடைக்கு எடை தங்கம் தந்து வாங்கி இருக்கிறார்கள். 1789 ஆண்டு  பிரெஞ்சுப் புரட்சிக்கு பல காரணங்கள் அவற்றுள் முக்கிய காரணம் ஆட்சியாளர்கள் உப்புக்கு வரி விதித்தது தான், உப்பின் இரசாயனப் பயன் களைச் சொல்லு தேவி
  தேவி -  உப்புக்கரைசலை மின் பகுத்தல் செய்து சோடியம் ஹைடிராக்ஸடு, குளோரின் வாயு தயாரிக்கிறார்கள்,  சோப்புத் தொழிலில், கண்ணாடி தொழிலில், உலோக உருக்கில் உப்பு பெரும் பங்காற்றுகிறது,
  ஆசிரியர் -  மாணவர்களே உப்பு ருசிக்கு முக்கியம் தான் என்றாலும் அதை அதிகம் உண்டால் இரத்த அழுத்தம் கூடி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்வரும். ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த் என்ற ஆஸ்திரேலிய சுகாதார ஆய்வு நிறுவனம் 19 வயதுக்கு மேற்பட்டவர்கள்  ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக் கூடாது எனச் சொல்கிறது.  அந்த நிறுவன ஆய்வில் உலகில் இந்தியர்கள் குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கில் வாழ்பவர்கள் உப்பை அதிகம் உண்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறது. திரிபுராவில் 14 கிராமும் தென்னிந்தியாவில் 11 கிராம் அளவிலும் ஒரு நாளைக்கு உப்பு சாப்பிடுகிறார்கள்.  உப்பில் உள்ள சோடியம் இருக்க வேண்டிய அளவைத் தாண்டினால் கேடு செய்யும்.  அது பொட்டாசியம் சத்து சேர்வதைத் தடுக்கும்.  பொட்டாசியம் தான் முக்கியமானது.
  (அப்போது வகுப்பு வாசலில் பள்ளி பியூன் வந்து ஆசிரியர் காதில் ஏதோ சொல்ல)

  ஆசிரியர் -  கார்த்திக் உன் அப்பா உன்னை அழைச்சுப் போக ஆபீஸ் வாசலில் காத்திருக்கார். புத்தக மூட்டையுடன் கிளம்பு.
  (என்ன ஏது எனத் தெரியாமல் கார்த்திக் கிளம்புகிறான்)

  (ஆபீஸ் ரூம் வாசலில்)

  அப்பா சண்முகம் -  வா கார்த்திக்.. பாட்டிக்கு திடீரென மாரடைப்பு மாதிரி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்.  உன்னையும் இனியாவையும் பார்க்கணும்ன்னு சொன்னாங்க.. வா போகலாம்.
  (கிளம்புகிறார்கள்)

  காட்சி 3
  இடம்  -  மருத்துவ மனை,    மாந்தர் -  இதயநோய் நிபுணர் தமிழரசன்,  படுக்கையில் நோயாளி லோகாம்பாள், சண்முகம், மரகதம், இனியா, 
  செவிலியர்கள்

  டாக்டர் தமிழரசன்  -  பேரப் பிள்ளைகள் குரலைக் கேட்டதும் பாட்டி தலையைத் தூக்கிப் பார்க்கிறதைப் பாருங்க.. சரியான நேரத்தில் பாட்டியை இங்கே அழைச்சு வந்தீங்க.  கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் மூளையில் இரத்தக் குழாய் வெடிச்சு கை கால் செயல் இழந்திருக்கும்.  உயர் இரத்த அழுத்தம் குறைய மருந்துகள் தந்திருக்கோம்.  இவங்க அதிகம் உப்பு சேர்த்துக்குவாங்களா.
  மரகதம் -  ஆமாம் டாக்டர் . உப்பு ஊறுகாய் என்றால் பிரியமா சாப்பிடுவாங்க. தயிர் சாதத்துக்கு மத்தவங்களை விட உப்பு கொஞ்சம் கூடுதலாகத் தான் வேணும் அவங்களுக்கு.
  டாக்டர் -  இனி உப்பே கண்ணில் காட்டாதீங்க. அதிக உப்பு இதயத்துக்கு கேடு விளைவித்து இரத்தக் குழாய்களில் படிந்து விடும்.  வீட்டில் உப்புத் தண்ணீர் காரணமாக குழாய்களில் உப்பு படிந்து  அடைப்பு உண்டாக்கி தண்ணீர் ஓட்டத்தைப் பாதிக்கும் இல்லையா.. அது போலத்தான், கொழுப்பு மற்றும் உப்புப் படிவு சீராக இரத்தம் உடல் முழுக்கச் செல்வதைத் தடுக்கும்.
  சண்முகம் -  அதனால் என்ன பாதிப்புகள் வரும் டாக்டர் ?
  டாக்டர் -   இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் மூளையில் இரத்தம் செல்வது தடை பட்டு மாரடைப்பு, சுவாசக் கோளாறு, சிறு நீரக  பாதிப்பு ஏற்படும். அதிகம் உப்பு சாப்பிடுபவர்கள் கை கால் வீங்கி இருக்கும். சோகை என்பார்கள்.  அது சிறுநீரகச் செயல்பாடு குறைவதால் இரத்தத்தில் கழிவுகள் பிரிக்கப்படாமல் கை கால்களில்  நீர் சோரும். அப்புறம் வெளியே மெஷின் வச்சு டயாலிஸிஸ் என்ற முறையில் கழிவைப் பிரிக்க நேரிடும். இப்போ பாட்டி ஓகே பயமில்லை.  சாயந்திரம் இவங்களை அனுப்பிடறேன்.  நடை பயிற்சி செய்யச் சொல்லுங்க.  இனிப்பு உப்பு இனி வேண்டாம்.
   
  காட்சி 4 
  இடம் இல்லம்,     மாந்தர் - சண்முகம் மற்றும் 
  குடும்பத்தார்,    காலம் -  இரவு -  உணவு நேரம்

  மரகதம் -  வாங்க  எல்லாரும்..இன்னிக்கு சப்பாத்தி சாப்பிடலாம்
  கார்த்தி -  தொட்டுக்க என்னம்மா ?
  மரகதம் -  செள செள போட்டுப் பருப்புக் கூட்டு..  பாட்டிக்கு அது தான் நல்லது
  இனியா -  சரிம்மா.. அதையே நாங்களும் சாப்பிடறோம்..முந்தி எல்லாம் பாட்டி சப்பாத்திக்குக் கூட ஊறுகாயை வச்சுக்குவாங்க இல்லே.
  சண்முகம்  -  டிவியில் சோப் பவுடர் விளம்பரத்தில்  ஊறுகாயை வெள்ளை கோட் மேலே கொட்டிக் கிட்டு இந்தக் கறையையும் எளிதில் போக்கிடும்ன்னு காட்டுவாங்க.. வெளிக் கறை போயிடும்.. சாப்பிட்டால் உள்ளே உண்டாகும் உப்பு காரம் தாக்குதலை எதை வச்சு நீக்குறது.?
  பாட்டி லோகாம்பாள் -  வயசானவங்க தன் ஆரோக்கியத்தை நாவைக் கட்டுப் படுத்தி ஏன் பாதுகாப்பா  வச்சுக்கணும்ன்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்.  ஒரு நாளில் சண்முகம் ஆபீஸ் போறது, குழந்தைகள் பள்ளிக் கூடம் எல்லாத்துக்கும் இடைஞ்சல்.  மரகதம் கிட்டவே இருந்து என்ன பிரயாசை..எத்தனை அலைச்சல். ஆஸ்பத்திரியில் அங்கே இங்கேன்னு ஒரே ஓட்டம். எத்தனை டெஸ்ட், ஸ்கேன், மருந்து மாத்திரை,  ஸலைன் எல்லாம். எத்தனை செலவு. எல்லோரும் ஓய்வெடுங்க.  நான் இனி என்னை ஜாக்கிரதையா வச்சுக்குவேன். குழந்தைகளா உங்க நண்பர்களுக்கு ஃபோன் பேசி.. வீட்டுப் பாடம் என்னன்னு கேட்டுஅதை  எழுதுங்க போங்க,..!

  - திரை-

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai