அகில்குட்டியின் டைரி!: மழை!

அகில்குட்டியின் டைரி!: மழை!

காலை மழை! சுமார் 2 மணி நேரம் பெய்தது! நல்ல காலம் நானும் ரகுவும் பள்ளிக்குச் செல்லும்போது விட்டிருந்தது.  எதற்கும் நானும், ரகுவும்  ரெயின் கோட்டைப் போட்டுக்கொண்டு போனோம்! பின்னே!...


காலை மழை! சுமார் 2 மணி நேரம் பெய்தது! நல்ல காலம் நானும் ரகுவும் பள்ளிக்குச் செல்லும்போது விட்டிருந்தது.  எதற்கும் நானும், ரகுவும்  ரெயின் கோட்டைப் போட்டுக்கொண்டு போனோம்! பின்னே!... அன்னிக்கு அம்மா சொன்னதைக் கேட்காம போன அனுபவம் இருக்கே!.... சாலையில் தண்ணீர் தேங்கியிருந்திச்சு! சுமார் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. வாகனங்கள் மெதுவாகத்தான்  சென்றன.  தெருவில் எல்லோரும் குடையோடுதான் போனாங்க.... அப்போ ஒரு சின்ன லாரி வந்தது! அது தெருவின் ஓரம் போய்த் திரும்பின போது "க்டதக்'  னு ஒரு சத்தம்! அந்த லாரியோட பின் சக்கரம் தெரியவே இல்லே அது தண்ணிக்குள்ளே போயிடுச்சு! 

அங்கே ஒரு கழிவுநீர் குழாயை மூடியிருந்த மூடி உடைந்து விட்டது! அதிலேதான் அந்த லாரியோட சக்கரம் மாட்டிக்கிச்சு! எப்படி அந்த லாரியை எடுக்கப்போறாங்களோ! ஆனா நெறைய பேர் அங்கே கூடிட்டாங்க.... ஜாக்கியெல்லாம் போட்டுத் தூக்கினாங்க..... ஒரு வழியா லாரியோட சக்கரத்தை வெளியே எடுத்தாங்க.... வண்டியை ஸ்டார்ட் செய்தாங்க! அப்புறம் வண்டி போயிடுச்சு! இப்போ எனக்கு பயமா ஆயிடுச்சு! கீழே ரோடே  தெரியலே!.... அதான் முழங்கால்அளவு தண்ணி இருக்கே! எங்கே பள்ளம் இருக்குமோன்னு உதறல்! 

மெள்ள நடந்தோம்! அதுக்குள்ளே அங்கே ஒரு அங்கிள்  வந்தாரு! அவரு கையிலே ஒரு அரிவாள் இருந்தது! அவரு ஒரு காம்பவுண்டுக்குள்ளே இருந்த  வேப்ப மரத்திலேயிருந்து ஒரு பெரிய கிளையை வெட்டினாரு! அந்தக் கிளை பத்தடி உயரம் இருக்கும்! அதை நல்லா கழிச்சு விட்டாரு!அந்த பெரிய கிளையை, எங்கே வண்டி சக்கரம் மாட்டிக்கிச்சோ அந்தப் பள்ளத்திலே இறக்கினாரு! அந்த அங்கிள் தோளிலே ஒரு சிவப்புக் கலர்த் துண்டைப் போட்டுக்கிட்டிருந்தாரு!.... அதை அந்தக் கிளையிலே கட்டினாரு!.... இப்போ அதைப் பார்க்காம யாரும் சாலையிலே  போக முடியாது! சூப்பர் ஐடியா! அது மட்டும் இல்லே அவரு கையிலே இருக்கிற ஃபோன்லே கார்பரேஷன் ஆபீஸூக்கும் போன் செய்தாரு! எங்களுக்கு ஸ்கூலுக்கு நேரமாயிடுச்சு! நாங்க வேகவேகமா நடந்தோம்! சாயங்காலம் ஸ்கூல் விட்டது! ரோட்லே தண்ணியெல்லாம் வடிஞ்சு இருந்திச்சு! ரகு, என் கையைப் பிடிச்சுக்கிட்டு வந்தான்! அந்த லாரி காலையிலே மாட்டிக்கிச்சே! அந்த இடத்திலே இப்போ ஒரு புது மூடி  போட்டிருந்தாங்க! அந்த அங்கிளுக்குத்தான் எல்லோரும் தேங்ஸ் சொல்லணும்! யாரையும் ஆபத்திலே மாட்ட விடாம செய்த அந்தக் கிளைக்கும்தான் நன்றி சொல்லணும்! இந்த மூடியாவது உடையாம இருக்கணும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com