பாராட்டுப் பாமாலை!  51: நடத்துனர் நாயகம்!

மன்னுதிரு நெல்வேலி மாவட் டத்தில்வரகுண  நாதபுரம் வரத ராசன்நன்னெறியில் பேருந்தை மட்டு மின்றி 
பாராட்டுப் பாமாலை!  51: நடத்துனர் நாயகம்!

மன்னுதிரு நெல்வேலி மாவட் டத்தில்
வரகுண  நாதபுரம் வரத ராசன்
நன்னெறியில் பேருந்தை மட்டு மின்றி 
நாடிவரும் மாணவரை நடத்திச் செல்வார்.

மாணவரைக் கண்டாலே மனம் வெறுத்து 
வசை பாடும் மற்றவர்தம் நிலைக்கு மாறாய்
பேணித் தன்  பிள்ளைகளாய்ப் பிரியம் காட்டிப் 
பேரன்பால் அவர் மனங்கள் பெரிதும் ஈர்ப்பார்!

பயணிக்கும் நேரத்தைப் பாழாக்காமல் 
படித்துயரப் பல நூல்கள் பரிவாய்த் தந்து 
பயன்மிக்க நடமாடும் நூலகம் போல் 
பணியாற்றும் பேருந்தில் புதுமை செய்தார்!

தான்கற்ற நற்கருத்தை நகல்கள் ஆக்கித்  
தந்துதவி தவறாமல் படிக்கச் செய்வார்!
தேன் பெற்ற சிட்டுகளாய்ச் சிறுவர் தாமும் 
தித்திக்க வாசிக்கும் திறமை கொண்டார்!

நாளுக்கோர் வழித்தடத்தில் பணிமேற் கொள்ளும் 
நடத்துநராய் இல்லாமல் வரத ராசன்
நீளுமொரு முப்பதுவாம் ஆண்டு முற்றும் 
நிலையாக ஒரு தடத்தில் நிறைவாய்க் கண்டார்!

தடம் சார்ந்த ஊரெல்லாம் தனதா யிற்று!
தகுதி சான்ற மாணவர்தாம் சீடர் ஆனார்!
இடம் சார்ந்த பயணிகளுக் கினியர் ஆனார்!
எல்லோர்க்கும் வரதராசன் உறவினர் ஆனார்!

இடைநிற்கும் ஏழைச் சிறார் நிலையைக் காணில் 
ஈகையுடன் பொருளீந்து இன்னல் தீர்ப்பார்!
கிடைக்கும் தன் ஊதியத்தில் சமபாகத்தைக் 
கிஞ்சித்தும் குறையாமல் தொண்டுக்கீவார்!

வசிக்கின்ற இல்லத்தில் நூல்கள் சேர்ப்பார்!
வாசிக்க வருவர் பலர் படித்துச் செல்வர்!
விசித்திரமே திருமணத்தை விரும்பவில்லை!
வேட்கைமிகு பொதுப்பணிக்கு இடையூறென்று!

விடுமுறைசேர் நாட்களிலே சிறுவர் தம்மை
விருப்புடனே கோயில்களில் கூடச் செய்து 
அருமறையாம் திருக்குறளில் போட்டி வைத்து 
அன்பான பரிசுகளால் ஊக்குவிப்பார்!
 
பேருந்தின் நடத்துனராம் வரதராசன் 
பிறர் நலமே பேணுமோர் பெருந் தியாகி!
சீருடனே வாசிப்பைச் செழிக்கச் செய்தார்!
செகம் மெச்ச பல்லாண்டு வாழ்க! வாழ்க!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com