மரங்களின் வரங்கள்!

கொடுத்து சிவந்த கரங்கள்!
மரங்களின் வரங்கள்!

மருதாணி மரம்!

கொடுத்து சிவந்த கரங்கள்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் மருதாணி மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் லாசோனியா இனர்மிஸ் என்பதாகும். நான் லைத்ராசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மறுதோன்றி, அழவணம், ஐவனம், ஐனாஇலை, அட்டகர்ம மூலிகை, மெகந்தி, ஹென்னா என்ற வேறு பெயர்களும் உண்டும்.  துளசியைப் போன்று நானும் புனிதமானவன். என்னிடம் மகாலஷ்மி வாசம் செய்வதாக சொல்றாங்க.  என் இலை, பூ, விதை,  வேர் ஆகியன மருத்துவ குணம் கொண்டவை. 

நான் எல்லா வகை நிலங்களிலும் வளருவேன்.  என் பூக்கள் கொத்தாக ஏப்ரல், மாதங்களில் பூத்துக் குலுங்கும்.  வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா கலர்களில் வழக்கத்திற்கு ஏற்றாற் போல இருக்கும்.  என் காய்கள் உருண்டையாக இருக்கும்.  இது நல்ல மருத்துவ குணம் கொண்டது.  “மருதாணி இட்டு வந்தாளே மகராசி” என்ற பழமொழி என் பெருமையை உணர்த்தும். 

என் இலை மேக நோய்க்கு சிறந்த மருந்து.   என் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளித்தால்  வாய் புண் உடனே குணமாகும். அம்மைப் புண்கள், கட்டிகள் மீது பூசினால் சட்டுன்னு  குணமாகும்.  என் இலையிலிருந்து தைலம் தயாரிக்கிறாங்க. இது முடி வளரவும், இள நரையைப் போக்கவும் உதவும். குழந்தைகளே, இந்தத் தைலததை நீங்களே தயாரிக்கலாம். இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு என் இலைகளை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பா மாறும்.  நறுமணத்திற்காக கொஞ்சம் சந்தனத்தையும் போடுங்க.  இதோ, தைலம் ரெடி.  நீங்க தயாரித்த இந்தத் தைலம்  நாளும் தலைக்குத் தேய்த்து வந்தீங்கன்னா உங்க முடியும், இளநரையும் மறையும், நீங்க எழிலாகவும் இருப்பீங்க. 

குழந்தைகளே, படி, படின்னு சொல்லி உங்க பெற்றோர்கள் வற்புறுத்துவதால் மன அழுத்தத்தால் தூக்கம் வரவில்லையா, வருந்தாதீங்க.  என் பூக்களை ஒரு துணியில் சுற்றி,  உறங்கும் போது தலையணை மீது வைத்து படுத்தால் தூக்கம் வரும்.  ஏன்னா, என் பூவின் மணத்திற்கு தூக்கத்தை வரவழைக்கும் சக்தி இருக்கும். முக்கியமா கெட்ட கனவுகள் வராது.   

என்னை பற்றி குறிப்பிட வந்த  அகத்தியர், “மாப்பில் சூனியம், விருத்தாண்ட பேய் பூதம் மேவும்”  என்கிறார்.  நான் சனி பகவான் மூலிகை என்பதால் என்னைக் கண்டு, பேய், பூதம், துஷ்ட தேவதைகள் விலகி ஓடும். என் பூவையும், உலர்ந்த காயையும் பொடி செய்து சாம்பிராணியுடன் கலந்து திங்கள், வெள்ளி தினங்களில் புகைக்க பில்லி, சூனியம் உங்களை அண்டாதுன்னு பெரியவங்க சொல்றாங்க.  என் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.  நான் ஒரு கிருமிநாசினி.  கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை நான் அழிப்பேன். மழைக்காலங்களில், கைகள், கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை, அழுக்குப் படை, கட்டி வந்தால் என் இலையை மசிய அரைத்து அதன் மீது தடவினால்  புண்கள் போயே போயிடும்.  உங்கள் நகங்கள் சொத்தையாகவும், பளப்பளப்பு இல்லாமலும் இருந்தால், என் இலையை மய்ய அரைத்து  தொடர்ந்து 15 நாட்கள் இரவில் நகங்கள் மீது வைத்து, காலையில் கழுவினால், சொத்தை மாறுவதுடன், நகங்களும் பளப்பளப்பாக இருக்கும்,. நகசுத்தி இருந்த இடம் தெரியாது.  இப்ப எல்லாம்  என் இலை மற்றும் பூக்களை குஷ்டநோய்களுக்கும்  மருந்தா பயன்படுத்தறாங்க. 

குழந்தைகளே, மரங்கள் இறைவன் அளித்த வரங்கள்.  மரங்கள் இயற்கை மனிதனுக்கு கொடுத்த பொக்கிஷம்.  இனியேனும் மரங்கள் எனும் அட்சயபாத்திரத்தை அழிக்காமல் பாதுகாக்க உறுதி ஏற்போம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)


- பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com