Enable Javscript for better performance
கருவூலம்: ஆஸ்திரேலியா ஓஷியானிக் நாடுகள்!- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: ஆஸ்திரேலியா ஓஷியானிக் நாடுகள்!

  By DIN  |   Published on : 31st August 2019 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  sm8


  7. பாப்புவா நியூ கினியா
  INDEPENDENT STATE OF PAPUA NEWGUINEA

  தலைநகரம் - போர்ட் மோர்ஸ்பை 
  பரப்பளவு - 4,62,840 ச.கி.மீ.
  நாணயம் - கினா 
  பேசும் மொழி - ஆங்கிலம், மோட்டு, டோக்பிசின்
  ஆட்சி மொழி - ஆங்கிலம்
  சமயம் - கிறிஸ்தவம், பழங்குடி இன சமயம்
  சுதந்திர தினம் - 16.09.1975
  நியூகினியாவின் கிழக்குப்பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள 600 சிறு தீவுக் கூட்டங்களும் சேர்த்து பாப்புவா நியூகினியா என்றழைக்கப்படுகிறது.  மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாடு பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.  இதன் கிழக்கில் சாலமன் தீவுகளும், மேற்கில் இந்தோனேசியாவும், தெற்கில் ஆஸ்திரேலியாவும் எல்லைகளாக அமைந்துள்ளது. 
  தங்க உற்பத்தியில் உலகில் முன்னணி வகிக்கிறது.  தவிர, செம்பு, வெள்ளி, எண்ணெய், எரிவாயு முதலிய கனிமங்களும் உள்ளன.  கனிம வளம் செறிந்திருந்த போதும் அவைகளை வெளியில் எடுத்து பயன்படுத்துவதற்குப் பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 
  கரும்பு, ஜவ்வரிசி, காப்பி, கோகோ, தேயிலை, சர்க்கரைக் கிழங்கு, தேயிலை, கொப்பரை முதலியன விளைபொருட்களாகும்.
  விவசாயம் தவிர தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் தயாரித்தல், சுரங்கம் தோண்டுதல், மீன்பிடித்தல் முதலிய தொழில்களும் உள்ளன.   அடர்த்தியான காடுகளிலிருந்து மரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. 18 - வயது முடிந்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் நாடுகளுள் ஒன்றாக திகழும் இந்நாட்டில் மிகப்பழமையான பழங்குடி இன மக்கள் ஏழ்மையான நிலையில் நாட்டின் உள்பகுதியிலேயே வசிக்கின்றனர். 

  8. தூவளு
  TUVALU


  தலைநகரம் - ஃபுனா ஃபூதி
  பரப்பளவு - 26 ச.கி.மீ.
  நாணயம் - ஆஸ்திரேலியன், தூவளு டாலர்
  பேசும் மொழி - தூவளுவன், ஆங்கிலம் 
  ஆட்சி மொழி - தூவளுவன்
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 1.10.1978
  தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 9 முக்கிய தீவுகள் உட்பட பல்வேறு பவளப்பாறைகளின் தொகுப்பே தூவளு என்றழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் “எல்லீஸ் தீவு” என்றழைக்கப்பட்ட இதன் வடக்கில் கிரிபாதியும், தெற்கில் ஃபிஜியும், தென் மேற்கில் 4000 கிலோ மீட்டரில் ஆஸ்திரேலியாவும் அமைந்துள்ளது.  நில எல்லைகள் இல்லை.
  உலகில் உள்ள சிறிய சுதந்திர நாடுகளுள் ஒன்றாகவும், உலகின் நான்காவது சிறிய தீவாகவும் திகழும் இந்நாடு பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.  கனிம வளங்கள் இல்லை.
  தேங்காய் மட்டுமே விளைகிறது.  
  நாட்டின் வருவாய் மூலங்களுள் ஒன்றான சுற்றுலா தவிர மீன்பிடித்தல், கால்நடை வளர்த்தல், கொப்பரை ஏற்றுமதி முதலிய தொழில்களும் உள்ளன. 
  சர்வதேச அறக்கட்டளை மூலமும், தபால் தலை மற்றும் நாணய விற்பனை மூலமாகவும் கிடைக்கும் வருவாய் இதர வருவாய் மூலங்களாகத் திகழ்கின்றன.  


  9. சாலமன் தீவுகள்
  SOLOMON ISLANDS

  தலைநகரம் - ஹோனியாரா
  பரப்பளவு - 28,450 ச.கி.மீ.
  நாணயம் - சாலமன் தீவுகள் டாலர் 
  பேசும் மொழி - ஆங்கிலம், மலேசியன், பாப்புவான்.
  ஆட்சி மொழி - ஆங்கிலம்
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 7.7.1978
  தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பதினைந்து பெரிய தீவுகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளையும் உள்ளடக்கிய பகுதி சாலமன் தீவுகள் என்றழைக்கப்படுகிறது.  நில எல்லைகள் ஏதுமில்லாத இந்நாட்டிற்கு அருகில் பாப்புவா நியூகினியா உள்ளது. 
  1568 முதல் பெரு நாட்டின் படைத்தளமாக இருந்த நாடு 1890 - இல் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  
  தாமிரம், துந்தநாகம், பாக்சைட் முதலிய கனிமங்கள் கிடைக்கின்றன. நெல், பீன்ஸ், தேங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கோகோ, காய்கறிகள் விளைபொருட்களாகும்.
  மீன் பிடித்தல் தவிர  சுரங்கம் தோண்டுதல், பனை எண்ணெய் தயாரித்தல் முதலிய தொழில்களும் உள்ளன. 
  காடுகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் விலையுயர்ந்த மரங்களின் ஏற்றுமதி நாட்டின் வருவாயாக உள்ளது. காட்டில் மரம் வெட்டிய பின் அந்த இடத்தில் ஒரு புதிய மரக்கன்றை நட வேண்டும் என்ற கொள்கை 
  இந்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது.  

  10. கிரிபாதி
  REPUBLIC OF KIRIBATI

  தலைநகரம் - தராவா
  பரப்பளவு - 811 ச.கி.மீ.
  நாணயம் - ஆஸ்திரேலியன் டாலர்.
  பேசும் மொழி - ஆங்கிலம், கில்பெர்டீஸ் 
  ஆட்சி மொழி - ஆங்கிலம்
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 12.07.1979
  தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 33 சிறு தீவுக் கூட்டங்களின் தொகுப்பே கிரிபாதி என்றழைக்கப்படுகிறது.  நில எல்லைகள் ஏதுமில்லாமல் நெüரு தீவுக்கும், தூவளு தீவுக்கூட்டத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்நாடு பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. 
  இயற்கை வளங்கள் மிகக் குறைவாகவே இருந்தபோதும் பாஸ்பேட் கனிமம் மட்டும் மிகுதியாக உள்ளது. 
  தேங்காய், காய்கறிகள், பீட்ரூட், சர்க்கரைக் கிழங்கு விளைபொருட்களாகும்.
  பிரதான தொழிலாக மீன்பிடித்தல் மட்டுமே நடைபெறுகிறது. 
  மீன் மற்றும் தேங்காய் ஏற்றுமதி மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது.  


  11. வனுவட்டு
  REPUBLIC OF VANUATU

  தலைநகரம் - விலா 
  பரப்பளவு - 12,200 ச.கி.மீ.
  நாணயம் - வட்டு 
  பேசும் மொழி - பிரெஞ்சு, ஆங்கிலம், பிஸ்லாமா
  ஆட்சி மொழி - பிரெஞ்சு, ஆங்கிலம், பிஸ்லாமா 
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 10.7.1980
  தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 12 பெரிய தீவுகள், 70 சிறிய தீவுகள் கொண்ட பகுதி வனுவட்டு என்றழைக்கப்படுகிறது.  மொத்தத் தீவுக் கூட்டத்தில் 16 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.  நில எல்லைகள் இல்லாத இதன் கிழக்கில் ஃபிஜியும், தென் கிழக்கில் 1200 மைல் தொலைவில் ஆஸ்திரேலியாவும் அமைந்துள்ளது. 
  பிரிட்டன், பிரெஞ்சு, கூட்டு ஆதிக்கத்திலிருந்த வனுவட்டு ஆரம்பத்தில் “நியூ ஹெப்ரிட்ஸ்” என்று அழைக்கப்பட்டது.  சுதந்திரம் பெற்ற பின்னரே ”வனுவட்டு” எனப் பெயர் மாற்றம் கண்டது. 
  மாங்கனீஸ் என்ற கனிமம் மட்டும் கிடைக்கிறது. 
  தேங்காய், தேயிலை, காப்பி, பழங்கள், கொப்பரை, சேனைக் கிழங்கு, காய்கறிகள் விளைபொருட்களாகும்.
  மீன்பிடித்தல் பிரதான தொழிலாக உள்ளது.  தவிர சுற்றுலா, கால்நடை வளர்த்தல், இறைச்சி பதப்படுத்துதல், மரங்களில் உருவங்கள் செதுக்குதல் முதலிய தொழில்களும் உள்ளன. 
  மிகச் சிறிய அளவிலான விவசாயத்தை மட்டுமே வருவாய்க்காக மக்கள் நம்பியிருக்கின்றனர். 

  12. மார்ஷல் தீவுகள்
  REPUBLIC OF MARSHAL ISLANDS

  தலைநகரம் - மஜீரோ
  பரப்பளவு - 181 ச.கி.மீ.
  நாணயம் - யு.எஸ்.டாலர் 
  பேசும் மொழி - ஆங்கிலம், மார்ஷலீஸ்
  ஆட்சி மொழி - ஆங்கிலம், மார்ஷலீஸ்
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 21.10.1986.
  வடக்கு பசிபிக் பெங்கடலில் அமைந்துள்ள 5 பெரிய தீவுகள், 31 சிறிய தீவுகள், 1150 சிறு, சிறு பவளப் பாறைகள் சேர்ந்த பகுதி மார்ஷல் தீவுகள் என்றழைக்கப்படுகிறது.  நெüரு மற்றும் கிரிபாதி தீவுகளுக்கும், மைக்ரோனேசியா தீவுக்கும் இடையில் அமைந்துள்ள இந்நாட்டை இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானிடமிருந்து அமெரிக்கா கைப்பற்றியது. 
  1947 முதல் தன் ஆளுகையின் கீழ் இருந்த இந்நாட்டிற்கு ஓர் உடன்படிக்கையின் வழி அமெரிக்கா சுதந்திரம் வழங்கியது. 
  பாஸ்பேட் மட்டும் கனிமவளமாக கிடைக்கிறது.  
  தேங்காய், தக்காளி விளைபொருட்களாகும்.
  பிரதான தொழிலாக மீன்பிடித்தல் உள்ளது.  தவிர, தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் மட்டையிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்தல் முதலிய தொழில்களும் உள்ளன. 
  அமெரிக்காவின் பொருளாதார உதவியை மட்டும் நம்பியிருக்கும் இந்நாட்டிற்கு வளர்ந்து வரும் சுற்றுலா மூலம் சமீபமாக வருவாய் கிடைத்து வருகிறது.

  13. மைக்ரோனேசியா
  FEDERAL STATES OF MICRONESIA

  தலைநகரம் - பாலிகிர்
  பரப்பளவு - 702 ச.கி.மீ.
  நாணயம் - யு.எஸ். டாலர் 
  பேசும் மொழி - ஆங்கிலம், டிரகீஸ்
  ஆட்சி மொழி - ஆங்கிலம். 
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 3.11.1986
  மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 607 தீவுக்கூட்டங்கள் அடங்கிய தொகுதியே மைக்ரோனேசியா என்றழைக்கப்படுகிறது.  யாப், டிரக், ஃபான்பெய், கோஸ்ரே என்ற நான்கு தனித்தனி கூட்டமைப்பான இந்நாடு ஆரம்பத்தில் “கரோலின் தீவுகள்” என்றழைக்கப்பட்டது.  1979 மே மாதம் 10 - தேதி முதல் பெடரல் மைக்ரோனேசிய நாடுகள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 
  அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகள், வறண்ட நிலங்களால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் கனிம வளங்கள் ஏதுமில்லை. 
  மிளகு, காய்கறிகள், பழங்கள் விளைபொருட்களாகும்.
  பிரதான தொழிலான மீன் பிடித்தல் தவிர சுற்றுலா, கட்டுமான பொருட்கள் உற்பத்தி, கால்நடை வளர்த்தல் முதலிய தொழில்களும் உள்ளன. 

  14. பலாவ்
  REPUBLIC OF PALAU

  தலைநகரம் - மெலிகியோக்
  பரப்பளவு - 458 ச.கி.மீ.
  நாணயம் - யு.எஸ். டாலர் 
  பேசும் மொழி - ஆங்கிலம், பலாவுவன் 
  ஆட்சி மொழி - ஆங்கிலம், பலாவுவன் 
  சமயம் - கிறிஸ்தவம்
  சுதந்திர தினம் - 1.10.1994 
  மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள 26 தீவுகளையும், 30-க்கும் மேற்பட்ட பவளப்பாறைத் திட்டுகளையும் கொண்ட பகுதி பலாவ் என்றழைக்கப்படுகிறது.  மொத்த தீவுக் கூட்டங்களில் 9 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். 
  மைக்ரோனேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்நாடு ஆரம்பத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1886 - இல் ஸ்பெயின் ஜெர்மனிக்கு விலைக்கு விற்றது.  1914 - இல் இந்நாட்டை ஜப்பான் ஆக்ரமித்து தன் வசப்படுத்தியது.  இரண்டாம் உலகப் போரின் போது 1944 - இல் ஜப்பானிடமிருந்து அமெரிக்கா கைப்பற்றித் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது.  1981 - இல் தன்னாட்சிக் குடியரசான பலாவ் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 
  ஆழ்கடலின் அடியில் தரைப்பகுதியிலிருந்து கனிமங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. 
  ஏராளமான மரவளங்கள் நிறைந்துள்ளன.  தவிர, தேங்காய், கேங்காஸ், கொப்பரை, சர்க்கரைக் கிழங்கு முதலியவைகள் விளைபொருட்களாகும்.
  1500 வகையான மீன் இனங்கள் இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றி வாழ்வதால் மீன்பிடித்தல் பிரதான தொழிலாக உள்ளது.  தவிர, விவசாயம், சுற்றுலா, தேங்காய் உற்பத்தி முதலிய தொழில்களும் உள்ளன. 

  தொகுப்பு : கோபிசரபோஜி,  இராமநாதபுரம்.

  kattana sevai