தினேஷின் உலகம்!: பிள்ளையார்! - 12

கோவில் திருவிழாவிற்காக பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என உறவினர்கள் வந்து சேர்ந்தனர். மறு நாள்..... தினேஷ் எதிலும் சுவாரசியமே இல்லாமல் சோர்ந்து இருந்தான்.
தினேஷின் உலகம்!: பிள்ளையார்! - 12

கோவில் திருவிழாவிற்காக பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என உறவினர்கள் வந்து சேர்ந்தனர். மறு நாள்..... தினேஷ் எதிலும் சுவாரசியமே இல்லாமல் சோர்ந்து இருந்தான். அவன் மனது முழுவதும் வேப்பமரமே நிறைந்திருந்தது. 

"" ஏன் தினேஷ் ஒரு மாதிரி இருக்கே?.....உடம்பு சரியில்லையா?....'' என்று எல்லோரும் அவனைக் கேட்டபடியே இருந்தனர். பதிலே பேசாமல் மெüனமாய் இருந்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது. வாசலுக்குக் கோலம் போட வந்த அம்மா, ""இங்கே வந்து இந்த அதிசயத்தைப் பாருங்களேன்!.....'' என்று எல்லோரையும் அழைத்தார்.  பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா, அப்பா, பாட்டி என்று எல்லோரும் ஓடி வந்து பார்த்தனர்.  தினேஷும்தான்!

அழகிய விநாயகப் பெருமானின் சிலை ஒன்று வேப்பமரத்தடியில் கம்பீரமாக இருந்தது. அதை யார் அங்கு வைத்துவிட்டுச் சென்றார்கள் என்று தெரியவில்லை!.... பாட்டி உள்ளே சென்று சூடத் தட்டும், மணியும் கொண்டு வந்தார். பெரியப்பா, தன் பெட்டியிலிருந்து புதுத் துண்டு ஒன்றை எடுத்து வந்து விநாயகப் பெருமானின் சிலையின் இடுப்பைச் சுற்றிப் போர்த்தினார். அதற்குள் ஒரு சிறிய பூச்சரத்தைக் கொண்டுவந்து சார்த்தினார் அத்தை!
சிறிய சிலையாக இருந்தாலும் கமபீரமான அழகுடன் இருந்தார் பிள்ளையார்! பாட்டி சூடம் ஏற்றி தீபாராதனை செய்தவுடன் அனைவரும் பயபக்தயோடு வணங்கி நமஸ்கரித்தனர். அப்பாவுக்குக் குழப்பமாக இருந்தது. 

""இது என்ன கூத்து?.... யார் கொண்டு இங்க வெச்சிருக்கான் இதை?'' என்றார் கையைப் பிசைந்தபடி.

""இதை யார் கொண்டு வந்து வெச்சிருப்பாங்களோ நமக்குத் தெரியாது!.... ஆனா நல்ல முகூர்த்த நாள்லே அந்த விநாயகப் பெருமானே நம்ம வீட்டைத் தேடி வந்திருக்கார்! அதனாலே இந்த மரத்தை இனிமே வெட்டக்கூடாது!.... கார் பார்க்கிங்கும் வேணாம்!.... கடையும் வேணாம்!.... அதுக்கு பதிலா சின்னதா ஒரு கோயில் கட்டி பிள்ளையாரை இங்கேயே பிரதிஷ்டை பண்ணிடலாம்!'' என்றார் பெரியப்பா!

 ""ஆமாம்!.... நீ சொல்றதுதான் சரி!....'' என்று முந்திக்கொண்டார் பாட்டி!

""எவனோ ஒரு திருட்டுப்பயல் இந்த சிலையை எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்து வெச்சுட்டுப் போயிருக்கான்!.... இதைப் போய் பெரிசு படுத்தறீங்களே!.... வேணும்னா இந்தச் சின்ன விக்ரஹத்தைப் பிள்ளையார் கோயில் குருக்கள் கிட்டே கொடுத்துடுவோம்!.... அவரே இதையும் கோயில்லே வெச்சுப் பூஜை பண்ணட்டும்!'' என்றார் அப்பா. 

உடனே பெரியப்பா, ""அதெல்லாம் இந்த சிலையை இங்கிருந்து  எடுக்கவும் கூடாது!.... மரத்தை வெட்டவும் கூடாது!.... நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்! '' என்றார். தனது அண்ணனின் பேச்சை மறுத்துப் பேச முடியாத அப்பா, ""ம்'' என்று வேறு வழியில்லாமல் தலையை ஆட்டினார்! தினேஷுக்கு அப்பொழுதுதான் சிரிப்பே வந்தது! 

""தாங்க் யூ! பிள்ளையாரப்பா!'' என்று கூறி நமஸ்கரித்தான்.  

அதற்குள் விஷயத்தைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தில்  உள்ளோரெல்லாம் கூடி வந்து விநாயகப் பெருமானை வணங்கத் தொடங்கினர். 
பிள்ளையார் கோயில் குருக்களின் வீடு, குருக்களின்  மனைவி அவரிடம் வேகமாக ஓடிவந்து,

"" ஸ்வாமி அலமாரியிலே இருந்த சின்ன பிள்ளையார் விக்ரஹத்தைக் காணோம்!..... '' என்றார் பதட்டத்துடன்! 

""பயப்படாதே!.... நான்தான் அதை ஒரு எடத்திலே கொண்டு வெச்சிருக்கேன்!.... இனிமே அவருக்கு அங்கதான் தினமும் பூஜை நடக்கும்!.... பாவம்!.... அந்தக் குழந்தை ஆசைப்பட்டபடி இனிமே அந்த மரத்தை யாரும் வெட்டமாட்டாங்க!..... ஏதோ என்னாலான ஒரு சின்ன உதவி!...'' என்றார் புனிசிரிப்புடன்.

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com