ஏற்றுமதிக்கு ஏற்ற மரம் - பெரு மரம்

நான் தான் பெருமரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் செக்குவாய் டெண்ட்ரான் ஜைகாண்டியா மற்றும் ஐலாந்தஸ் எக்ஸெல்ஸா என்பதாகும். என்பதாகும்.
ஏற்றுமதிக்கு ஏற்ற மரம் - பெரு மரம்

மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா,
நான் தான் பெருமரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் செக்குவாய் டெண்ட்ரான் ஜைகாண்டியா மற்றும் ஐலாந்தஸ் எக்ஸெல்ஸா என்பதாகும். என்பதாகும். எக்ஸெல்ஸா என்பது மரத்தின் ஓங்கி வளரும் தன்மையைக் குறிக்கிறது. நான் டாக்சோடியேசியீ சைமருபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் ஆஸ்திரேலியா. நம் நாட்டில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிஷா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் காணப்படுவேன். நான் எந்த வறட்சியிலும் வளரும் தன்மையன். 
எனக்குப் பீயன், பீதக்கன், பீநாரி, குச்சி மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் தூய்மையான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளதால் ஏற்றுமதிக்கும் உதவுவேன். 
நான் தமிழ் பண்பாட்டுடன் தொன்மையான தொடர்பு கொண்டவன். குழந்தைகளே, அந்தக் காலத்தில் கிராமங்களில், திருவிழா காலங்களில் "வழுக்கு மரம் ஏறுதல்" என்ற வழக்கம் இருந்தது. அந்த வழுக்கு மரம் நான் தான். அப்போதெல்லாம் கோயில் பூசாரிக்கு அருள் இறங்கி, அவர் கைக் காட்டும் திசையிலிருந்து என்னைக் கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் பெருமரங்கள் கிராமங்களில் எங்கும் காணப்படும். பூசாரி சொல்லிய திசையில் ஊர்க்காரர்கள் திரண்டு போய், வளைவு, நெளிவு, சுளிவு இல்லாமல் நேராக வளர்ந்த என்னை தேர்வு செய்வார்கள். நான் வளர்ந்த பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இலை முழுவதையும் உதிர்த்து விடுவேன். உடனே, நான் பட்டுப் போய் விட்டேன் என நினைத்து என்னை வெட்டி விடாதீர்கள். இது என் வழக்கமான நிகழ்வு. அடுத்த மழை பெய்யும் போது புது இலைகளுடன் பொலிவேன். 
நான் தீக்குச்சிகள், பென்சில், எழுது பலகை, காய், கனிகளைத் தாங்கும் மரப்பெட்டி, ஒட்டுப் பலகை (பிளைவுட்), பொம்மைகள், படகு சாமான்கள், பீப்பாய்கள், காகிதம் தயாரிக்கவும், கட்டிட வேலைகளுக்கும் பெரிதும் பயன்படறேன். இந்தியாவில் தீக்குச்சி மர உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.. இது எனக்குப் பெருமை. என் கிளைகள் ஏழை மக்களின் வீட்டு அடுப்புக்கு உபயோகமாகிறது. என் இலைகள் மண்புழு உரம் தயாரிக்கவும், கட்டைகள் மீன் பிடிக்க உதவும் மிதவைகளாகவும் பயன்படுது. என் இலைகள் கால்நடைகளுக்கு ஏற்ற தீவனம். 
தழைகள், இலைகள் மண் புழுவிற்கு உணவாகிறது. வறட்சிக் காலங்களில் பயிர் வைக்க முடியாதவர்கள் என்னை வளர்த்தால் நான் அதிக பலன் கொடுப்பேன். என் இலைகள் இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கவும், பட்டுப்புழு வளர்க்கவும் பயன்படுகின்றன. சாலை ஓரங்களில் நிழலுக்காகவும் என்னை வளர்க்கலாம். என் வேர்கள் எப்போதும் பசுமையாக இருப்பதால் மண் அரிப்பை தடுக்கின்றன. எனவே, என்னை மண்ணரிப்பை தடுப்பதற்கு, சாலை ஓரங்களில் நிழலுக்காகவும் வளர்க்கலாம். 
சத்தீஸ்கர் மாநிலம், தாம்மரி மாவட்டத்தில், சிகாவா என்ற இடத்தில் இரு நூறு ஆண்டுகள் கடந்தும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் தூய்மையான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளதால் ஏற்றுமதிக்கு தரம் வாய்ந்தவன். மரங்கள் நிழலை மட்டும் தரலே. பறவைகளுக்கு வசிப்பிடமாகவும், கால்நடைகளுக்கு உணவாகவும், மனிதர்களுக்கு எல்லாமும் தருகிறது. மரங்கள் இருக்குமிடம், மகிழ்ச்சி நிலைக்கும் இடம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)
- பா.இராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com