வழி தவறிய ஆட்டுக்குட்டி!

வழி தவறிய ஆட்டுக்குட்டி!

  
அந்த மலையடிவாரத்தில் ஒரு புதிய ஆட்டுக்குட்டி வந்துவிட்டது! சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு மாந்தோப்பில் ஆட்டுக்கிடை இருந்தது.

அங்கிருந்து தப்பி வந்துவிட்டது இந்தக் குட்டி! கிடைக்கூட்டத்தின் தலைவன் ஆட்டின் குட்டி அது! அதனால் மற்ற ஆடுகள் இது மேயும் இடத்தில் மேயாது இதற்கு விட்டுக் கொடுத்து வேறிடம் போய்விடும். இதனால் குட்டி கொழு, கொழுவென்று அழகாக இருந்தது. 


 வனத்தில் இருந்த ஓநாய்க்குட்டி ஆட்டுக்குட்டியைப் பார்த்து விட்டது!
 ""அட!.... இது என்ன மிருகம்?.... தளதளன்னு ரொம்ப அழகாக இருக்கிறதே! நம் அப்பாவைக் கூட்டி வந்தால் இதைக் கொன்று நம் வீட்டில் அனைவரும் சாப்பிடலாமே!'' என்று நினைத்து தன் அப்பாவைக் கூப்பிடப் போனது. 
 மரத்தில் இருந்த ஒரு குரங்கு இதைப் பார்த்து விட்டது!  ""பாவம்!....அழகான ஆட்டுக்குட்டி! பாதை தெரியாமல் வந்துவிட்டது! ஓநாய்க்குட்டி தன் அப்பாவைக் கூப்பிடப் போகுது!.... இதை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும்!'' என நினைத்தது. 


தூரத்தில் எருமை ஒன்று வந்து கொண்டிருந்தது. குரங்கு எருமையைப் பார்த்து, ""எமனுக்கே வாகனமான எருமை அண்ணனுக்கு வணக்கம்!'' என்றது.
 ""என்ன அனுமான் பேரனே!.... என்ன விசேஷம்?'' 
 ""இதோ இந்த ஆட்டுக்குட்டி பாதை தெரியாமல் வனத்துக்கு வந்திரிச்சி!....மாந்தோப்புலே ஆட்டுக்கிடை இருக்கு. இதை அங்கே கொண்டுபோய் விடணும்.... ஒரு ஓநாய்க்குட்டி இதைப் பார்த்து தன் அப்பாவை கூப்பிடப் போயிருக்கு!.... அது வந்துச்சுன்னா இதைக் கொன்னுடும்! பாவமண்ணே!'' என்றது குரங்கு.

 பெரிய ஓநாய் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. 
 ""என்ன ஓநாய்த்தம்பி இந்தப்பக்கம்?'' என்று கேட்டது எருமை.
 ""எருமையண்ணாவுக்கு வணக்கம். புதுசா ஒரு மிருகம் வந்திருக்காம்! அதை அடிச்சா வீட்டுக்கு ஆகுமேன்னு பாத்தேன்'' என்றது ஓநாய்.
 ""தம்பி இது நாட்டு ஆட்டுக்குட்டி! பாவம்! பாதை தவறி வந்திருச்சி! இதை விட்டுடு!'' 


 ""பாவம் பாத்தா நாங்க பட்டினிதான்! நீங்க இதிலே தலையிட வேண்டாம் அண்ணே''  என்று கூறிவிட்டு ஆட்டுக்குட்டி மேலே பாயப்போனது. 
டக்கென்று பாய்ந்த எருமை ஓநாயை முட்டி கொம்பால் தூக்கி தூர எறிந்து விட்டது! குரங்கு கை தட்டி வாழ்த்து கூறியது. எருமை ஆட்டுக்குட்டி அருகில் சென்று, ""வாப்பா'' என்று அழைத்து வனத்திற்கு வெளியெ வந்து தோப்புப் பக்கம் சென்று ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு வனத்திற்குத் திரும்பியது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com