வெள்ளைப் பூசணியின் வேதனை!
By DIN | Published On : 02nd February 2019 10:00 AM | Last Updated : 02nd February 2019 10:00 AM | அ+அ அ- |

கதைப் பாடல்
உருண்ட வெள்ளைப் பூசணி
உள்ளம் நொந்து போனதாம்
திரண்டு வந்த அழுகையை
நிறுத்த முடியவில்லை!
அண்டி நின்ற காய்களோ
"அழக் காரண மென்னவோ
வண்டி வண்டியாக நீ
வடிக்கும் கண்ணீர் தேவையோ?''....
என்று கேட்க பூசணி,
இரண்டு கண்கள் நீரையும்
நன்கு துடைத்து நிதானமாய்
நண்பரிடத்துச் சொல்லிச்சாம்!
"பருத்து உருண்ட தேகமும்
பார்க்க வெள்ளை உருவமும்
இருக்கு என்ற போதிலும்
இல்லை மனதில் நிம்மதி!
நறுக்கி கூட்டு வைப்பதும்
நல்ல இனிப்புச் செய்வதும்
பிடிச்சிருக்கும் போதிலும்
பெரிய கவலை உள்ளது
கட்டி முடித்த வீட்டிலே
கண்கள் திருஷ்டி போக்கிட
கட்டித் தொங்க விட்டெனைக்
கஷ்டப்படுத்தல் நியாயமோ?
என்னைப் போன்ற இழிநிலை
கொண்ட தன்மை யாருக்கும்
மண்ணில் கடவுள் கொடுப்பதை
மாற்ற வேண்டி வேண்டுங்கள்!...''
என்று சொல்லி பூசணி
தேம்பித் தேம்பி அழுதிட
ஒன்று சேர்ந்து காய்களோ
உள்ளம் தேற்றச் சொல்லின.
..."எட்டி, வேப்பங்காய்களோ
கசப்புத் தன்மை உடையவை! - அவற்றைச்
சமைத்து யாரும் உண்பரோ?.....
ரசித்துச் சுவைத்து மகிழ்வரோ?...
முற்றுமாக உன்னை நீ
அர்ப்பணிக்கும் பேறினை
பெற்ற தன்மை எண்ணியே
பெருமை கொள்க!...'' என்றன.
வளர்கவி.