சுடச்சுட

  
  sm8

  காட்சி - 1,   

  இடம் - கோயில் வசந்த மண்டபம்,   
  மாந்தர் - வாணி, வாணியின் அப்பா மேகனாதன், அம்மா பார்வதி, கச்சேரி அமைப்பாளர்.

  (நவராத்திரி வசந்த விழாவில் அன்று வாணியின் பாட்டுக் கச்சேரி)

  மேகநாதன் - வாணி!.... இதோ, இவர்களுடன் நீ மேடைக்குச் செல்.... நாங்கள் கீழே நாற்காலி வரிசையில் உட்கார்ந்து கொள்கிறோம்....

  அமைப்பாளர்: நீங்கள் இந்த முதல் வரிசை இருக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்..... உங்கள் மகளின் கச்சேரியை இடையூறில்லாமல் காது குளிரக் கேட்கலாம்.
  பார்வதி: வாணிக்கு கண்பார்வை சரியாகத் தெரியாது,.... ஜாக்கிரதையா பார்த்து அழைத்துப் போங்க... 
  அமைப்பாளர்: இதோ,.... இவர்தான் சங்கீத சபாவின் பெண் காரியதரிசி.... இவர்தான் உங்கள் மகளுடன் மேடையில் கூடவே இருக்கப்போகிறவர்.... கவலையே வேண்டாம்...நன்றாகக் கவனித்துக் கொள்வார்.
  மேகநாதன்: தப்பா எடுத்துக் கொள்ளாதீர்கள்.... 
  அமைப்பாளர்: அதில் தவறே இல்லை.... அதுதான் தாயன்பு!...

  (கச்சேரி ஆரம்பமாகிறது. சில கீர்த்தனைகளையும், பாரதியாரின் பாடல்களையும் ஒரு மணி நேரம் பாடி வாணி நிறைவு செய்கிறார்)

  பெண் காரியதரிசி: வாணி அவர்களின் கச்சேரியில் நாம் எல்லோரும் தேன் அருந்திய வண்டுகள் போல மயங்கிக் கிடந்தோம் என்றால் அது மிகையாகாது.... இளம் வயதிலேயே இவ்வளவு திறமை கொண்ட வாணி வரும் நாட்களில் பல்வேறு இசைச் சிகரங்களை எட்டுவார் என்பது நிச்சயம்!...நன்றி!....வணக்கம்!

  (எல்லோரும் கைதட்டி கலைகிறார்கள்)

  காட்சி - 2,

  இடம் - வாணியின் வீடு,   
  மாந்தர் - மேகநாதன், பார்வதி, வாணி.

  பார்வதி - வாணி! விடியற்காலையிலிருந்து வீணை வாசித்துக் கொண்டேயிருக்கியே,....பசிக்கலையா?

  வாணி: இசையை வாசித்தாலும், அனுபவித்தாலும் பசியே இருக்காது அம்மா.... வேணும்னா அப்பா கிட்டே  கேளு...
  மேகநாதன்: ஆமாம் பார்வதி.... வாணி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...
  பார்வதி: நல்ல அப்பா.....நல்ல பெண்.... அதுக்காக வாணியை நாள்பூரா எதுவுமே சாப்பிடாம வீணை வாசிக்கச் சொல்ல முடியுமா?
  மேகநாதன்: வாணி! வா, டிபன் சாப்பிடலாம். அம்மா இதுக்கு மேலே பொறுமையா இருக்க மாட்டா....

  (வாணி சிரித்துக் கொண்டே எழுந்து வருகிறாள். இருவரும் டிபன் 
  சாப்பிடுகிறார்கள்.)

  வாணி: அப்பா, வீணை டீச்சர் வருகிற பொங்கல் திருநாளின்போது என்னுடைய வீணை அரங்கேற்றத்தை வைத்துக் கொள்ளலாம்னு இருக்காங்களாம்....உங்களோடு பேச வருவாங்க....
  மேகநாதன்: தாராளமாக வரட்டும் வாணி,.... உங்க டீச்சர் எதையும் சரியாகவே பிளான் பண்ணுவாங்க.... 
  பார்வதி: வாணி, இத்தனை நாளா ஓய்ச்சல் ஒழிவில்லாம பாட்டுக் கச்சேரிக்குப் போய்க்கிட்டு இருக்கா....  இனிமே  வீணைக் கச்சேரியும் அதோடு சேர்ந்து கொள்ளப் போகிறதா..... அவ்வளவுதான்....  சாப்பிடறதுக்கும், தூங்கறதுக்கும் நேரம் கிடைக்கப் போறதில்லை....
  மேகநாதன் : எல்லாப் புகழும் உனக்குத்தானே  பார்வதி...... உன்னோட ஆசீர்வாதத்தாலேதானே வாணி இப்படிக் கலக்குறா....
  வாணி: நான் வர்றேன்... அம்மா!

  (வாணி சொல்லிக்கொண்டே மீண்டும் வீணை அறைக்குச் செல்கிறாள்.)


  காட்சி - 3,

  இடம் - விழா நடக்கும் சங்கீத சபா கட்டிடம். மாந்தர் - வாணி, வாணியின் பெற்றோர், விழா அமைப்பாளர், மகளிர் பிரிவுத் தலைவர் கற்பகம் மற்றும் கூட்டத்தினர்.

  (வாணியின் இசைக் கச்சேரியும், அதைத் தொடர்ந்து வீணைக் கச்சேரியும் நடந்து முடிகிறது. )

  விழா அமைப்பாளர்: இளம் இசைப் புயல் வாணி அவர்களின் வாய்ப்பாட்டுக் கச்சேரியையும், வீணைக் கச்சேரியையும் ஒரே மேடையில் கேட்டு மகிழ்ந்தீர்கள். இப்போது மகளிர் பிரிவு தலைவர் திருமதி கற்பகம் அவர்கள் வாணி அவர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டுரை வழங்குவார்.
  கற்பகம்: (வாணிக்கு மாலை அணிவிக்கிறார்)  இசைப்பிரியர்களே!.... ஏறக்குறைய இரண்டு மணி நேரமாக நாம் எல்லோரும் இசையெனும் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தோம். வாணி அவர்களுக்கு இறைவன் எத்தனை கலைகளை வாரி வழங்கியுள்ளார் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. வாய்ப்பாட்டு, வீணை, இசைப்பாடல் இயற்றுதல், இசை அமைத்தல்!....அப்பப்பா!.... நினைத்தாலே மலைப்பாய் இருக்கு.... கலைகளை அள்ளிக் கொடுக்கும் கலைவாணியின் பெயரான வாணி என்பதை பிறந்தவுடனேயே பெற்றோர்கள் இவருக்குச் சூட்டியுள்ளதை நினைத்துப் பெருமைப் படவேண்டும். கலைகள் பலவும் வழங்கிய கடவுள் இவருக்கு கண்பார்வையைத் தராததால் கருணையில்லாதவரோ என நினைக்கத் தோன்றுகிறது..... நன்றி வணக்கம்!

  (பேசி அமர்கிறார்.)

  வாணி :  ( விழா அமைப்பாளரிடம் தானும் சில வார்த்தைகள் பேச அனுமதி கேட்டுப் பேசுகிறார்.) இசைப்பிரியர்களே! வணக்கம்! என்னுடைய கச்சேரிகளைக் கேட்டு அனுபவித்த எல்லோருக்கும் எனது நன்றி! நீங்கள் தரும் ஆதரவை நான் என்றும் மறவேன். மகளிர் பிரிவுத் தலைவர் எனக்குக் கண் பார்வையைத் தராத கடவுள் கருணையில்லாதவர் என்று நினைக்கத் தோன்றுவதாகக் கூறினார். என் மீதுள்ள அனுதாபத்தின் பேரில்தான் அப்படிக் கூறினார் என்றே எனக்குத் தோன்றுகிறது. 
  கடவுள் என்மீது பெருமளவு கருணை கொண்டவர் என்று நான் முழுவதும் நம்புகிறேன். 
  இல்லாவிட்டால் கண்பார்வை என்கிற ஒன்றே ஒன்று மட்டும் இல்லாத எனக்கு இத்தனை ஆற்றல்களை வழங்குவாரா?
  குறையிருப்பவர்களுக்கு அக்குறை மறையும்படி பல நிறைகளைக் கொடுத்து மேம்படுத்தி விடுபவர்தான் கடவுள். ஒரு வாசல் மூடப்பட்டிருந்தால் பல வெற்றி வாசல்களைத் திறந்து விடுபவர் கடவுள். எனவே என்னைப் பொருத்தவரை கடவுள் கருணை உள்ளவரே!

  (பேசி முடித்ததும் மகளிர் பிரிவுத் தலைவர் கற்பகம் வாணியை அணைத்து....)

  கற்பகம்: வாணி அவர்கள் கூறியபடி ஆதங்கத்தில்தான் அப்படிக் கூறினேன்.... கடவுள் கருணை மிக்கவர்தான். வாணி அவர்களுக்கு வாய்ப்பாட்டு, வீணை, பாடல் இயற்றுதல், இசை அமைத்தல் ஆகிய ஆற்றல்களோடு பேச்சுத் திறனையும் எதையுமே நேர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் பக்குவத்தையும் தந்துள்ளார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாணிக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக! விடை பெறுகிறேன்!....

  ( பலத்த கரவோலி)

  (திரை)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai