சுடச்சுட

  
  sm10

  தனம் தரும்  - சந்தன மரம்ம்

  என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
   
  மங்கள சந்தனமான நான், மணக்கும் பல செய்திகளை உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன்.  இங்க முன்னாடி வாங்க !

  எனது அறிவியல் பெயர் சாந்தலம் ஆல்பம் என்பதாகும்.  நான்  சந்தாலாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் பெறுவதற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைந்த  போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், மந்தாரம் மற்றும் அடியேனும் பாற்கடலிலிருந்து வெளியே வந்தோம். இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. தேவலோகத்திலும் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை. 

  நான் மலைப் பகுதிகளில் வளருவேன். விலை மதிப்பற்ற தனிப் பெரும் மரமாவேன். எனக்கு சாந்தம், ஆரம் என்ற பெயர்களும் உண்டு.  என் மலர் வெள்ளையாக இருக்கும், ஆனால், மணம் கிடையாது. இது என்னிடம் இருக்கும் அபூர்வமான விஷயம்.  

  குழந்தைகளே, உங்களின் உடல், மன ஆரோக்கியத்திற்கான பல மருந்துகள் என்னிடமிருந்து தான் கிடைக்கின்றன. கூந்தல் தைலங்கள், நறுமணப் பொருள்கள், சோப்புகள் என எல்லாவற்றிலும் என் தேவை இன்றியமையாதது. சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் மைய அரைத்து பசை போல செய்து கண் கட்டிகள்,  படர் தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை மேல் மென்மையாக தேய்த்து வந்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது. சந்தனத் தூளை காய்ச்சிய குடிநீரில் கலந்து குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், இரத்த மூலம், மற்றும் காய்ச்சல் குணமாகும். சந்தனத்தை பசும்பாலில் கலந்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை உண்டு வந்தால் வெட்டை சூடு தீரும். நான் நறுமண எண்ணெய் நிரம்பி வைரமேறிய உடம்பை பெற்று, அதிகமான விலை மதிப்பை பெற்றுள்ளேன். என்னை மருத்துவப் பொருளாக மட்டுமின்றி புனிதப் பொருளாகவும் மக்கள் கருதுகிறார்கள். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் சந்தன அபிஷேகம் பிரதானமாகக் கருதப்படுகிறது. 

  வெள்ளை சந்தனத்தை  உடம்பில் தேய்த்துக் கொண்டால் அது இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி சீராக்கும். மூளை, வயிறு, குடலுக்கு சக்தியைக் கொடுக்கும். என்னிடமிருந்து எடுக்கப்படும் அகர் எனும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் நிறைந்தது. இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்துக் குளித்தால் கை, கால் வலி, கண் எரிச்சல் ஆகியவைகளை நீக்குவதோடு சருமத்திற்கு குளிர்ச்சியையும்  தரக் கூடியது. 

  நான் திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம், அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, தேரழுந்தூர் அருள்மிகு வேதபுரீஸ்வரர், அருள்மிகு தேவாதிராஜன் ஆமருவியப்பன் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். 

  குழந்தைகளே, மரங்கள் குழந்தைகளுக்குத் தொட்டிலாகிறது, முதியவர்களுக்கு கைக்கோலாகிறது,  முடவர்களுக்கு காலாகிறது, அசதி மிகுதியால் உறங்கக் கட்டிலாகிறது. நீங்கள் அறம் செய்ய விரும்பினால் மட்டும் போதாது, மரம் வளர்ப்பதும் ஓர் அறம். நான் விஜய தமிழ் ஆண்டை சேர்ந்தவன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

  (வளருவேன்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai