இந்தியாவின் இரும்பு மனிதர்!

அந்த அந்த, சிறுவனுக்கு இன்று ஆசிரியரிடம் தண்டனை பெறப்போகிறோம் என்பது உறுதியாக தெரிந்து விட்டது.
இந்தியாவின் இரும்பு மனிதர்!


1. இளமைப் பருவம்

அந்த அந்த, சிறுவனுக்கு இன்று ஆசிரியரிடம் தண்டனை பெறப்போகிறோம் என்பது உறுதியாக தெரிந்து விட்டது.

அவர் குஜராத்தி மொழிப் பாடத்தின் ஆசிரியர்தான். இருந்தாலும் மாணவர்களின் கை உடையும் அளவிற்கு வீட்டுப்பாடம் கொடுப்பதில் அவருக்கு ஆனந்தம். எனவே சம்பந்தமே இல்லாமல் வாய்ப்பாடுகளை மூன்று முறை எழுதி வாருங்கள் என்றும் ஐந்து முறை எழுதி வாருங்கள் என்றும் வீட்டுப்பாடம் கொடுப்பார்.அப்படி எழுதி வராத மாணவர்களை மறுநாள் வகுப்பில் தண்டிப்பதில் அவருக்கு பேரானந்தம்.

துருதுருவென்று எப்பொழுதும் விளையாடிக்கொண்டே இருக்கும் அந்த சிறுவனுக்கு வீட்டுப்பாடம் செய்வது பெரும் கசப்பாக இருந்தது.எப்படியாவது இந்த துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினான் .ஆனால் முடியவில்லை!வீட்டுப்பாடம் எழுதாமல் தூங்கிவிட்டான் நேற்று.

இன்று காலை பள்ளி தொடங்கி விட்டது முதல் பிரிவு குஜராத்தி மொழி பாடம்தான். எல்லா மாணவர்களும் வீட்டுப்பாடம் எழுதி இருந்தனர். இவன் ஒருவனை தவிர! வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தவுடன் எழுந்து நின்று அனைவரும் வணக்கம் கூறினர். பதில் வணக்கம் கூறியபோதும் ஆசிரியரின் கண்கள் மாணவர்களின் கையில் இருந்த வீட்டுப்பாட நோட்டுப் புத்தகத்தின் மீதே இருந்தது. இவன் கையில் மட்டும் நோட்டு புத்தகம் இல்லை அவனை அழைத்தார்.

"வாய்ப்பாடு எழுதிக் கொண்டு வந்தாயா?' என்று கேட்டார்.

மாணவர்கள் அனைவரும் அவன் என்ன கூற போகிறான் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.ஏனெனில் அவன் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்தது அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

"கொண்டு வந்தேன் அய்யா! ஆனால் வாசல் வரை வந்த அது தப்பி ஓடிவிட்டது!' என்றான் சிறுவன்.

வகுப்பில் இருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தனர். மிகவும் கோபமாய் அவனை தண்டிக்க தயாராக இருந்த ஆசிரியரும் கொல்லென்று சிரித்து விட்டார்.

காரணம் "காடே' என்ற குஜராத்தி மொழி சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருந்தன. ஒன்று வாய்ப்பாடு! மற்றொன்று கன்று குட்டி!அவனது மொழி புலமையை அறிந்து கொண்ட ஆசிரியர் அவனை வெகுவாக பாராட்டினார் மேலும் தன் தவறை உணர்ந்துகொண்டு மாணவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் வீட்டுப் பாடங்கள் அதிகமாக கொடுப்பதை குறைத்துக்கொண்டார். இப்படியாக இப்படியாக மாணவர்களிடம் அந்தச் சிறுவன் பிரபல மானான். அவனை பள்ளியில் அனைவரும் "காடே' என்று செல்லமாக அழைத்தனர். அச்சிறுவன் தான் பின்னாளில் "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார்.

"சர்தார்'என்பது சிறப்புப் பெயராகும்.'சர்தார்'என்ற வடமொழிச் சொல்லுக்கு "தலைவன்' என்று பொருள். குஜராத் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய சிறிய கிராமம் ஒன்றில் பிறந்தார் வல்லபாய் பட்டேல்.

இவரது தந்தையார் பெயர் ஜாவேரி பாய் படேல; தாயார் பெயர் லாத்பாயி என்பதாகும். ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்த அந்த வீட்டில் நான்காவது ஆண் குழந்தையாக பிறந்தார் வல்லபாய் படேல்.

போராட்ட குணம் என்பது அவரது ரத்தத்தில் உரிய ஒன்றாக இருந்தது.வல்லபாய் பட்டேலின் தந்தை ஜாவேரி பாய் பட்டேலும் ஒரு தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

வட இந்தியாவில் "ஜான்சி' என்ற சிறிய தேசத்தின் அரசியாக லட்சுமிபாய் என்ற பெண்மணி இருந்தார்.அவருக்கு வாரிசு என்று ஒருவரும் இல்லாததால் தனது வளர்ப்பு மகனுக்கு பட்டம் சூட்ட விரும்பினார். ஆனால் இந்தியர்களின் ஆட்சிப் பகுதியை கைப்பற்ற எண்ணிய பிரிட்டிஷ் அரசு "சுவீகார மகனுக்கு பட்டம் கட்ட கூடாது!இனி ஜான்சி சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரவேண்டும்!' என உத்தரவிட்டது. இதை கேட்டு கொதித்து எழுந்த வீரமங்கை லட்சுமி பாய் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்டார். ஆனால் அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவரது படை வீரர்கள் நிலைகுலைந்து தப்பி ஓடினர்.இதுவே இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட முதல் நிகழ்வாகும்.

ஜான்சி ராணி லட்சுமிபாயின் படையில் இருந்த வீரர்களுள் ஒருவர் தான் ஜாவேரி பாய் படேல்!வல்லபாய் பட்டேலின் தந்தை!போரில் தப்பி ஓடிய அவர் தந்தை தன் செயலுக்காக மிகுந்த வெட்கமும் வேதனையும் அடைந்தார்.போர்க்களத்தில் தன் சக வீரர் இடம் "என்னால் இந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட முடியவில்லை!இதற்காக நான் அவமானப்படுகிறேன்! ஆனால் நான் பெற்ற பிள்ளை களுல் ஒருவன் கண்டிப்பாக இந்திய சுதந்திரத்திற்காக பாடுபடுவான்!இந்தியாவை விடுதலை பெறச் செய்வான்!அதை காண நான் உயிரோடு இருப்பேனா என்பது நிச்சயமில்லை! ஆனால் அவன் தன் விடா முயற்சியால் நான் விரும்பியவற்றை கட்டாயம் சாதிப்பான் இது நிச்சயம்!'என்று கூறியபடியே போர்க் களத்தை விட்டு வெளியேறினார்.

அருகிலிருந்த மற்றொரு சமஸ்தான மன்னர் ஒருவரிடம் தஞ்சமடைந்தார் .ஆனால் ஆங்கிலேயர்களுக்கு பயந்த அந்த மன்னர் ஜாவேரி பாய் படேலை வீட்டு சிறையில் அடைத்து விட்டார். பின்னர் ஒருவாராக சில மாதங்கள் கழித்து விடுதலை பெற்ற ஜாவேரி பாய் படேல் மீண்டும் தன் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டார்.அவர் தனது மகன்களுக்கு நேர்மை, தைரியம்,விடாமுயற்சி,மன உறுதி ஆகிய நற்பண்புகளை போதித்தார்.ஆங்கிலேயர்களின் அடக்கு முறை மற்றும் சர்வாதிகாரம் குறித்து  தன் தந்தை பேசுவதை ஆர்வத்துடன் கேட்டு வந்த வல்லபாய் பட்டேலுக்கு சிறுவயதிலேயே "நாம் எவருக்கும் அடிமை படக்கூடாது சுதந்திரமாக இயங்க வேண்டும!'என்ற எண்ணம் தோன்றியது!

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com